ஆஸ்மாவுக்கு வாடாமல்லி மருத்துவம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாடாமல்லியின் நன்மைகளை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.வாடாமல்லி அழகுக்காக பயன்படுத்தும் அலங்கார செடியாக இருப்பினும் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை உடையது. நோய் கிருமிகளை அழிக்கிறது.

வாடாமல்லி பூக்களை பயன்படுத்தி ஆஸ்துமாவுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாடாமல்லி, மிளகுப்பொடி. செய்முறை: வாடாமல்லி பூக்களை நீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சுதிணறல், இருமல் சரியாகிறது. 10 வாடாமல்லி பூக்களை நீரில் இட்டு காய்ச்சி இனிப்பு சேர்த்து குடித்துவர ரத்த அழுத்த நிலை மாறும். பித்தப்பையில் ஏற்படும் கற்களை கரைக்கும். ஆஸ்துமாவை போக்கும் நல்மருந்தாக விளங்குகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாவதுடன் இதய நோய்கள் இல்லாமல் செய்கிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது.

வாடாமல்லியை பயன்படுத்தி தோல் பராமரிப்புக்கான தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், வாடாமல்லி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் வாடாமல்லி பூக்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். குளிப்பதற்கு முன்பு தோலில் தேய்து சிறிது நேரம் கழித்து குளித்துவர தோல் சுருக்கம் குறையும். தலைமுடிக்கு நல்ல மருந்தாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. வயது முதிர்வை தடுக்கிறது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மாற்றி பளபளப்பை தருகிறது. வாடாமல்லி புத்துணர்வு ஊட்டக்கூடிய தன்மை கொண்டது. மூளைக்கு இதமான நிலையை தருகிறது.

வாடாமல்லி இலை, பூக்களை பயன்படுத்தி சேற்று புண்கள், சீல் பிடித்த கொப்புளங்களை குணமாக்கும் மேல்பூச்சு தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், வாடாமல்லி இலை, பூக்கள், மஞ்சள் பொடி.செய்முறை: பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றவும். இதில், வாடாமல்லி இலை, பூக்களை நீர்விடாமல் அரைத்து போடவும். இதனுடன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த தைலத்தை பயன்படுத்தி வர சேற்றுபுண்கள் குணமாகும். வாடாமல்லி இலைகள், பூக்கள் நுண்கிருமிகளை போக்குவதாக அமைகிறது.

நகச்சொத்தையை மாற்றும். வெள்ளைபோக்கு பிரச்னையை சரிசெய்கிறது. வாடாமல்லி பூக்கள், இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து கண்களை கழுவுவதால், கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பு சரியாகும். இளம் தாய்மார்களுக்கு பால் கட்டிக்கொள்வதால் ஏற்படும் வலி, வீக்கத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ வீக்கம், வலி ஏற்படுகிறது. வெற்றிலையில் விளக்கெண்ணெய் இட்டு வதக்கி ஒன்றன் மீது ஒன்று அடுக்காக வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வைப்பதால் சில நாட்களில் வீக்கம் கரையும். கட்டியபால் விலகிப்போகும்.

Sharing is caring!