இசையால் சிவனின் மனதை வசமாக்கிய நாயனார் ஆயனார்…

இறை வழிபாட்டில் இசைக்கு முக்கியத்துவம் உண்டு. ஐந்தெழுத்து மந்திரத்தை தம்முடைய இசையால் விடாது பற்றிக்கொண்ட ஆயனார் நாயன்மானராய் ஆன கதையைப் பார்க்கலாம். கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசைக்கு மயங்காத ஜீவராசிகளும் இல்லை. புல் செடிகளும் இல்லை. நாதமாய் செவிகளில் விழும் இசையும் இனிக்கும் என்பதை உணர்ந்தவர்களும் அவர் காலத்தில் வாழ்ந்தவர்களும் புண்ணியமிக்கவர்கள். அது போலவே ஒருவரின் இசைக்கு சிவபெருமான் மயங்கி தன்னுடன் கயிலாயம் அழைத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. அத்தகைய பேறுபெற்றவர் நாயன்மார்களில் ஒருவரான ஆயனார்.

சோழநாட்டில் உள்ள திருமங்கலம் என்னும் ஊரில் ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆயனார். சிவபக்தி மிகுந்த இவர் தினமும் திருநீறு பூசி மேய்ச்சல் தொழிலை பார்க்க செல்வார். மேய்ச்சலின் போது ஓய்வு நேரத்தில் சிவனை நினைத்து புல்லாங்குழல் வாசிப்பார். ஓம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து தான் இவருடைய வாசிப்பின் பிரதானமாக இருக்கும்.

கண்ணனை போலவே தம்முடைய புல்லாங்குழல் இசையால் மேய்ச்சலுக்கு வரும் விலங்குகளை மகிழ்ச்சிபடுத்துவர். ஆயனாருடைய இசையைக் கேட்டபடி மேய்ச்சலில் ஈடுபடும் ஆவினங்கள் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி செல்லாது. வேறு இடங்களுக்குச் சென்றாலும் இவருடைய இசையைக் கேட்டபடி உரிய இடத்துக்கு வந்து செல்லும். இவருடன் மேய்ச்சலுக்கு வருபவர்கள் ஆவினங்களை ஓட்டியபடி இவரின் இசையைக் கேட்டு ரசிப்பார்கள்.

ஒருமுறை கொன்றை மரத்தின் அடியில் நின்று புல்லாங்குழல் வாசிக்க தொடங்கினார். கார் மேக காலம் அது. முல்லை மலர்கள் பூத்துக்குலுங்கியிருந்தது. அம்மலரில் தன்னுடைய ஈசனின் திருமுகத்தைக் கண்ட ஆயனார் மனம் முழுக்க பக்தி நிரப்பி ஐந்தெழுத்து மந்திரத்தை வாசிக்க தொடங்கினார். தேனினும் இனிய கானமாய் ஒலித்த அவரது இசையில் மாடுகள், காளைகள் ,கன்றுகள் ஓடி வந்தன. மடியில் வாய் வைத்த கன்றுக்குட்டிகள் பால் குடிக்க மறந்து இசை வந்த திசையை நோக்கி ஓடிவந்தன. காற்றெங்கிலும் பரவிய புல்லாங்குழல் இசை தேவலோகத்திலும் ஒலித்தது. இசையில் மயங்கி தேவர்களும் ஆயனாரின் அருகில் வரதொடங்கினார்கள்.

இயற்கை அன்னையின் செவிகளில் அமுதாய் ஒலித்த இந்த இசையால் காற்று அசையாமல் நின்றது. பாய்ந்து ஓடிய நதிகளும் ஆறுகளும் அப்படியே நின்றது. காட்டு விலங்குகள் அச்சத்தை மறந்து ஒன்று கூடியது. ஆயனாரது இசை ஈரேழு உலகமும் கேட்டது. ஐந்தெழுத்து மந்திரத்துக்குரியவரிடம் கேட்காமல் இருக்குமா என்ன? இவரது இசையில் மயங்கி அப்பன் அம்மையுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அருள்புரிந்தார். எப்போதும் உன்னுடைய இசையை நான் கேட்டு மகிழவேண்டும் என்று ஆயனாரை தன்னுடன் கயிலாயத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஆயனார் கொன்றை மரத்தடியில் நின்று புல்லாங்குழல் வாசிக்கும்  பாவனை யில் அழகான சிற்பம் திருமங்கலம் என்னும் திருத்தலத்தில்  அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் இவருக்கு குரு பூஜை செய்யப்படுகிறது.

Sharing is caring!