இதை மட்டும் தான் எல்லோரும் போதும் போதும் என்பார்கள்!

“தானத்தில் சிறந்தது அன்னதானம்” என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான், கிருஷ்ணபகவானும் கீதையில், “எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ, அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்”.  அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும்.

பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான், போதும் என்ற திருப்தி ஏற்படும்.

என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும், அவனால் ஒரு அளவிற்கு மேல் சாப்பிட முடியாது. அன்னத்தை
துவேஷிக்கக் கூடாது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும்.

அன்னத்தை வேண்டி வந்த எவரையும் தள்ளிவிடக் கூடாது.  ஆகையால் எவ்விதத்திலாவது மிகுதியாக அன்னத்தை தேடிக் கொள்ள வேண்டும். வருபவர்களுக்கு அன்னம் தயாராக இருக்கிறதென்று சொல்லுவர் பெரியோர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான். பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.

அட்சய பாத்திரம் உயிரோடு உடம்பை சேர்த்து வைத்து ரட்சிப்பதும் அன்னம்தான். அதனால்தான் ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்று சொல்லியிருக்கிறது. மணிமேகலையில் இப்படி அன்னதானத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. மணிமேகலைக்கு காஞ்சியில் அட்சய பாத்திரம் கிடைத்தது.

Sharing is caring!