இந்த உணவுகளை எல்லாம் நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் போதும்…!!!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் பல வகையான உணவுகள் உள்ளன. சில வகை உணவுகளை நாம் பச்சையாக சாப்பிட்டால், அதன் முழு சத்துக்களையும் எளிதில் பெறலாம். இன்னும் சில வகை உணவுப் பொருட்களை நீரில் ஊற சாப்பிட்டால், இரு மடங்கு நன்மைகளைப் பெறலாம்.

ஆனால் நம்மில் பலருக்கும் எந்த உணவுப் பொருட்களை நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்பது சரியாகத் தெரியாது. இதனால் சில உணவுகளை இன்னும் தவறான வழியிலேயே சாப்பிட்டு வருகிறோம். அப்படி எந்தெந்த உணவு வகைகளை நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

வெந்தயம்

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலை சுத்தம் செய்ய பெரிதும் உதவிப் புரியும். மேலும் வெந்தயம் மலச்சிக்கலையும் சரிசெய்யக்கூடியது. ஆனால் வெந்தயத்தின் முழு நன்மையையும் பெற வேண்டுமானால், அதை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதே நல்லது. தினமும் இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அரை டம்ளர் நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், நீருடன் வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும்.

நன்மைகள்

தினமும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், இச்செயலை தினமும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் பராமரிக்கலாம். முக்கியமாக இளம் பெண்கள் இப்படி சாப்பிட்டால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலியைத் தவிர்க்கலாம்.

ஆளி விதை

தற்போது மக்களிடையே ஆளி விதை சாப்பிடும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. எனவே சைவ உணவாளர்களுக்கு இது அசைவ உணவிற்கான ஒரு சிறந்த மாற்று உணவாக உள்ளது. அதிலும் ஆளி விதையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த ஆளி விதையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

நன்மைகள்

நீரில் ஊற வைத்த ஆளி விதையை காலையில் எழுந்ததும் உண்பதால், கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும். மேலும் இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த ஆளி விதையை சாப்பிட்டால், குடல் ஆரோக்கியம் மேம்படும்.

உலர் திராட்சை

உலர் திராட்சையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. பலரும் ஸ்நாக்ஸ் வேளையில் உலர் திராட்சையை சாப்பிடுவர். ஆனால் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவதே சிறந்தது என்று பலருக்கும் தெரியாது. 5-6 உலர் திராட்சையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் உலர் திராட்சையை சாப்பிட, பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

பச்சை பயறு

பாசிப் பயறு பாசிப் பயறில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவைகயும் அதிகம் உள்ளது. இத்தகைய பாசிப் பயறை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், அதன் முழு சத்துக்களையும் பெறலாம்.

நன்மைகள்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நீரில் ஊற வைத்த பாசிப் பயறை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது நல்லது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் என்பதால், நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும். பாசிப் பயறில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

Sharing is caring!