இந்த குரு பெயர்ச்சியால் யாருக்கு நிம்மதியான தூக்கம் வரும் தெரியுமா?

குரு பெயர்ச்சி இன்றைக்கு திருக்கணிதப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி செல்வம் செல்வாக்கு வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியத்தை தரப்போகிறது. நிம்மதி இழந்து தவித்தவர்களுக்கு நிம்மதியை தரப்போகிறது. இத்தனை நாட்களாக தூக்கம் தொலைத்து தவித்த சில ராசிக்காரர்களுக்கு நல்ல நிம்மதியான தூக்கத்தை தரப்போகிறார் குருபகவான். எந்த ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நிம்மதியான தூக்கம் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு தூங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் காலையில் விழிக்கும்போது உடல் சோர்ந்து காணப்படுவார்கள். கண்களும் பொலிவற்று காணப்படும். அதன் தாக்கத்தால் அன்றைய பொழுதை தடுமாற்றத்துடன்தான் கடக்கமுடியும்.

நம்மில் பலர் இரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டிருக்கிறோம், இன்றும் பட்டுக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு இரவு சாப்பிட்டு படுத்தவுடன் தூக்கம் வராததால், படம் பார்ப்பது, நண்பர்களுடன் வாட்ஸ் அப் மூலம் பேசுவது, பாடல்கள் கேட்பது அல்லது புரண்டு புரண்டு படுப்பது என செய்வதுண்டு. தூக்கக் குறைபாடு குறிப்பாக நரம்பு தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை ஏற்படும். தூக்கமின்மை குறைபாடுகளுக்கு என்ன காரணம், என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

தொலைந்த உறக்கம்

மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும். தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை துவங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம்.

தூக்கத்தை கெடுப்பவர்கள்

ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் எனப்படும் நான்காம் இடம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கினையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியும் நண்பர்களும் நமது தூக்கத்தை சூறையாடிவிடுவார்கள்.

தூக்கத்திற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு

12ஆம் பாவம் அடுத்தது தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தை பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல.

குருபகவான்

காலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூட கிடைக்காது. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டே இருப்பார்கள். சரி இந்த குரு பெயர்ச்சியால் சிலருக்கு தூக்க குறைபாடு பாதிப்பு நீங்கும். சுகமான உறக்கம் கிடைக்கும். ரிஷபம், கடகம், கன்னி, ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் 12ஆம் பாவத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது.

ரிஷபம்

குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசிக்கு 12, 2, 4ஆகிய வீடுகளை பார்க்கிறார். சுக ஸ்தானம், மோட்ச ஸ்தானம், குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. குரு பார்வையால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். குதூகலமாக இருப்பீர்கள். சனியால் சங்கடப்பட்ட நீங்கள் நிம்மதி அடைவீர்கள். குடும்பத்திற்கு தேவையான வண்டி வாகன சேர்க்கை ஏற்படும், வீடு வாகனம் வாங்கும் யோகம் வரும். சுகங்களை அனுபவிப்பீர்கள். அப்புறம் என்ன நிம்மதியான தூக்கம் வரும். காரணம் உங்க 12 ஆம் வீட்டில் குருவின் பார்வை பட்டு நிம்மதியை ஏற்படுத்துவார்.

கடகம்

குருபகவான் உங்க ராசிக்கு 12, 8, ஆறாம் வீடுகளை பார்க்கிறார். உங்க கடன் நோய்கள் தீரும். அவமானங்கள் தீரும் காலம் வரப்போகிறது. மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த நீங்க மன நிம்மதி அடைவீர்கள். உங்க பிரச்சினை எல்லாம் முடிந்த பின்னர் இரவில் நிம்மதியாக உறங்குவீர்கள். காரணம் உங்க ராசிக்கு 12 ஆம் வீடான மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை விழுகிறது. இனி கையை காலை நீட்டி ஹாயாக படுங்க உறக்கம் ஓடி வந்து தழுவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே குரு பகவான் உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். உங்க ராசிக்கு எட்டாம் வீடு, பத்தாம் வீடு, பனிரெண்டாம் வீடுகளை பார்க்கிறார். குருவின் பார்வையால் நீங்கள் இதுநாள்வரை பட்ட அவமானங்கள் முடிவுக்கு வரும். உங்களுக்கு ஏற்பட்ட கண்டங்கள் நீங்கும், ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். சுகமான நித்திரை கிடைக்கும். குடும்பத்தோடு மனைவி மக்களோடு நிம்மதியாக பொழுதை கழிக்கலாம்.

நல்ல தூக்கத்திற்கு பரிகாரம்

அமைதியான தூக்கத்திற்கான பரிகார ஸ்தலங்கள். மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார்.கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். நவதிருப்பதிகளில் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும். கும்பகோணத்திற்கருகில் உள்ள திங்களுர், திருப்பதி மற்றும் குணசீலம், சோமநாதேஸ்வரர், போன்றவை திங்கள் பரிகார ஸ்தலங்களாகும். கஞ்சனுர், ஸ்ரீரங்கம், மற்றும் திரு மயிலை அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயங்கள் சுக்கிரன் பரிகார ஸ்தலங்களாகும். உங்க ஊருக்கு அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வர நிம்மதியான உறக்கம் வரும்.

Sharing is caring!