இன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்…

வாய்துர்நாற்றத்தை சத்தமில்லாமல் போக்க வேண்டுமா ? மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டுமா? பித்தக் கோளாறுகள் நீங்க வேண்டுமா? உடலில் நீர்ச்சத்து சேர வேண்டுமா? எல்லா கேள்விகளுக்கும் ஆம் என்ற பதிலை சொல்பவர்கள் இனி வெள்ளரிக்காயுடன் வாழுங்கள். கூடுதலாக சரும பிரச்னைகளை நீக்கி சரும அழகையும் மினுமினுப்பையும் சேர்த்தே பெறுவீர்கள்.

உடலில் சேரும் கெட்டநீரை பிரித்தெடுத்து சிறுநீரகத்துக்குச் செய்யும் பணியை செவ்வனே செய்கிறது வெள்ளரிக்காய். இது பழ வகையைச் சேர்ந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் நாம் இதை சாலட் ஆக சாப்பிடும் காய் வகையில் சேர்த்திருக்கிறோம். வெள்ளரிக்காயில் குறைந்த அளவு கலோரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வயிற்றில் புண், எரிச்சல் அதிகமாகும் போது வாய் வழியாக உஷ்ணம் கிளம்பும். வாயில் துர்நாற்றம் உண்டாகவும் வாய்ப்புண்டு. வயிற்றுப் புண் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாறை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வந்தால் விரைவில் பலனை அடையலாம். வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்தால் வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி நன்றாக பற்களில் படுமாறு மென்று சாப்பிடுங்கள். வாயில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்து பல் ஈறுகளை பலப்படுத்தும். வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். வெள்ளரிக்காய் நீர்ச்சத்துடன் உமிழ்நீரையும் கலந்து சாப்பிட்டால் நாள் முழுவதும் வாய்துர்நாற்றம் இருக்காது.

நீர்ச்சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காய் குளிர்ச்சியானது. வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்தும் 4 சதவீதம் உயர்ந்த புரதத்தையும் கொண்டுள்ளது. உடலில் நீர்ச்சத்துகளைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. நல்ல கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சத்துக்கள் தாதுக்கள் வெள்ளரிக்காயில் நிறைந்திருக்கின்றன. இதை தோல் நீக்காமல் சிறு சிறு விதைகளை நீக்காமல் சாப்பிட வேண்டும். செரிமானக் கோளாறுகளை சீர் செய்யும். சமீபத்தில் வெள்ளரிக்காய் கீல்வாதம் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது என்று ஆய்வுகள் நிரூபித்திருக்கிறது.

வெள்ளரிக்காய் சேர்க்காத காய்கறி சாலட் கிடையாது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல், இரைப்பையில் புண், பித்தகோளாறுகள், இரத்த அழுத்தம் போன்றவற்றை வெள்ளரிக்காய் குறைத்து விடும். குளிர்ச்சி மிகுந்த வெள்ளரிக்காய் கல்லீரல் உஷ்ணத்தை தணிக்க வல்லது. அதிக நீர்ச்சத்து கொண்டிருப்பதால் கொழுப்பு, கார்போஹைட்ரேட் சத்துக்களை விரைவில் செரிமானமாக்கி சக்தியாக மாற்றிவிடுகிறது. இன்சுலின் சுரக்க செய்யும் ஹார்மோனைத் தூண்டும் சக்தியாக வெள்ளரிக்காய் செயல்படுகிறது.

வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசினால் இயற்கை ஃபேஷியல் முறையில் முகம் பொலிவுறும். முகப்பருக்கள் குறையும். கரும்புள்ளிகள் நீங்கும். வெள்ளரிக்காயில் நிறைந்திருக்கும் சல்பர் சத்துக்கள் கூந்தலுக்கு பளபளப்புத்தருகிறது. ஓய்வு நேரங்களில் வெள்ளரிக்காயை வட்டவடிவில் நறுக்கி கண்களில் வைத்தால் கருவளையங்கள் மறைகிறது. அழகு, ஆரோக்யம் எல்லாம் நிறைந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டு அழகுக்கு அழகூட்டுங்கள். ஆரோக்யத்தை வளப்படுத்துங்கள். மிகவும் குளிர்ந்த உடல்நிலையைக் கொண்டவர்கள் வெள்ளரிக்காயை அளவாக எடுத்துகொள்வது நல்லது.

Sharing is caring!