இயேசு பாலனின் பிறப்பும் வாழ்க்கைப் பாடங்களும்…!

ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் அதிசயமும் அற்புதமும் நிறைந்தது. இயேசுவின் பிறப்பு முழு உலகிற்கும் அதிசயமான அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது.

கன்னியாக இருந்த மரியாள் ஆணின் துணை இல்லாமல் குழந்தையைக் கருத்தரித்தது, விண்ணகத் தூதர்கள் கானம் இசைத்தது. இடையர்களுக்கு நள்ளிரவில் இயேசுவின் பிறப்பின் செய்தி அறிவிக்கப்பட்டது. கீழ்த்திசை ஞானிகள் பாலனைத் தேடிவந்தது வானத்தில் விண்மீன் தோன்றியது. அப்பாவிக் குழந்தைகள் கொலையுண்டது திருக்குடும்பம் அகதியாக எகிப்துக்கு தப்பி ஓடியது என்று எல்லாமே அதிசயமும் அற்புதமும் நிறைந்த திகிலூட்டும் சம்பவங்கள் ஆகும்.

பல நூறு ஆண்டுகளாக இஸ்ராயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவின் வருகை மிகவும் எளிமையான முறையில் -அதேவேளை அதிசயம் அற்புதம் அடையாளங்கள் வழியாக நிறைவேறியது. அபூ ர்வமான ஆச்சரியங்கள் நிறைந்த இயேசுவின் பிறப்பு நிகழ்வுகள் சிலவற்றை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகுவதும் சிறப்பானது.குடிசன கணக்கெடுப்பில் கலந்துகொள்ளும் திருக்குடும்பம் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த மரியாவை அழைத்துக்கொண்டு யோசேப்பு தாவீதின் ஊரான பெத்தலேகேமுக்குச் சென்றார். ‘அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தான்’ (லூக். 2:1). ஆகவே மக்கள் தங்கள் பெயரைப் பதிவுசெய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச்சென்றனர். உரோமை அரசாட்சியில் 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. இராணுவ சேவைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கவும், வரிவசூலை முறைப்படுத்தவும், மக்கள் தொகைக்கணக்கு எடுக்கப்பட்டது. யூதர்கள் உரோமையரின் இராணுவ சேவையில் தம்மை இணைத்துக்கொள்வதில்லை. ஆயினும் வரி செலுத்தியாக வேண்டும்.இதன் நிமித்தம் யூதரும் இந்தக் கணக்கெடுப்பில் பங்கெடுக்க வேண்டியதாக இருந்தது. ‘தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு பெயரைப் பதிவுசெய்ய கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்தலேகம் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.

(லூக். 2: 4 – 5)

யோசேப்பும் மரியாவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காகச் செல்கின்றனர். ஒரு நல்ல குடிமக்களாக அரசின் ஆணைக்குக் கீழ்படிகின்றனர். மரியா நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் பயணம் செய்வது ஆபத்தானது என அறிந்திருந்தும் கணக்கெடுப்பில் கலந்துகொள்ள நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர்.நமது வாழ்வில் நாமும் அரசிடம் இருந்து பல்வேறு சலுவைகளைப் பெறுகின்றோம். கல்வி, சுகாதாரம் போன்றவற்றை இலவசமாகவும், இன்னும் பல சேவைகளை குறைந்த கட்டணத்திலும் பெறுகின்றோம். ஆனால் ஒரு குடிமகனாக, குடிமகளாக நாம் எந்த அளவுக்கு நமது கடமையைச் செய்கின்றோம் என்பது முக்கியமான கேள்வியாகும்.

தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்ட தேவமைந்தன்:நாசரேத்திலிருந்து பெத்தலேகமுக்குச் செல்ல மூன்று நாட்கள் பயணம் செய்ய வேண்டும். ஏறக்குறைய 80 மைல் தூரம் சென்று அவர்கள் பெத்தலேகமை அடைந்தனர். அங்குள்ள ஒரு சிறிய மாட்டுத் தொழுவத்தில்தான் இயேசு பிறக்கின்றார்.பெத்தலேகம் என்ற சொல்லுக்கு ‘அப்பத்தின் வீடு என்பது பொருள். உலகின் உணவாய் வந்த இயேசு இங்கேதான் பிறந்தார். ‘அவர்கள் அங்கே இருந்தபோது மரியாவுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையை துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார்

(லூக். 2: 6 – 7).தொழுவத்தில் இருக்கும் ஆடு மாடுகளுக்கு உணவளிக்க பயன்படும் தீவனத்தொட்டியில் இயேசு கிடத்தப்பட்டதும் ஒரு முன்னடையாளமே. ஏனெனில், ‘விண்ணகத்தில் இருந்து இறங்கிவந்த உணவு நானே’ என்று கூறிய இயேசு தாம் பிறக்கும்போதே உணவு வழங்கப்படும் தீவனத்தொட்டியில் பிறந்தார்.இயேசு வாழ்வுதர வந்தவர். வாழ்வைத் தரவந்தவர் மட்டுமல்ல உலகத்தின் மீட்புக்காக தன்னையே முற்றிலும் தாரைவார்த்துத் தந்தவர். இந்த இயேசுவின் சீடனாக சீடத்தியாக வாழ அழைக்கப்பட்ட நான் எந்தளவுக்கு எனது சுயநல எல்லைகளைக் கடந்து மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆயத்தமாக இருக்கிறேன் என்ற கேள்வி முக்கியமானது.

இடையர்கள் பெற்றுக்கொண்ட இன்பச்செய்தி:இயேசு பிறந்தவுடன் அந்தச் செய்தி முதலில் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. ‘அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது. மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம் ‘அஞ்சாதீர்கள் இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கின்றார். குழந்தையைத் துணியில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள் இதுவே உங்களுக்கு அடையாளம்’ என்றார்.

(லூக். 2:10 – 12) ஆடுமாடுகளை மேய்க்கும் இடையர்கள் அன்றைய யூத சமுதாயத்தில் கடைநிலைச் சமூகமாகவே கணிக்கப்பட்டவர்கள். அன்றைய மேட்டுக்குடி வர்க்கத்தால் ஒதுக்கிகைப்பட்டவர்கள். இவர்கள் நகர விளிம்பிற்கு வெளியே நடமாடியவர்கள். இவர்கள் ஏழைகள், எளியவர்கள், இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தவர்கள். இத்தகைய பாமர மக்களுக்குத்தான் உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த மெசியா தனது முதல் தரிசனத்தைக் கொடுத்தார்.”இடையர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி ‘வாருங்கள் நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்’ என்று சொல்லிக்கொண்டு, விரைந்துசென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத்தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். (லூக். 2: 15 – 16)

தமக்காக ஒரு மீட்பர் பிறந்திருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் அவர்கள் உடனே புறப்பட்டார்கள். தாம் காவல் காத்துக்கொண்டிருந்த ஆடுகளைக்கூட அவர்கள் என்ன செய்தார்கள் என்று நமக்குத் தெரியாது. விரைந்து வந்து இயேசுவைக் கண்டு மகிழ்ந்தார்கள். இயேசுவை அறியாத இடையர்கள் இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டதும் அவரைப் பற்றி அறிய விரும்பினார்கள். அவரைச் சந்திக்க விரைந்தார்கள். இயேசுவை அறியவேண்டும், தெரியவேண்டும் என்ற இந்த இடையர்களின் அக்கறையும் ஆர்வமும், அவசரமும் இன்று நம்மிடம் இருக்கின்றதா? இடையர்களைப்போல் நாமும் இயேசுவை அறிய ஆவலாக இருக்கின்றோமா? ஆலயத்தில், நற்கருணையில், இறைவார்த்தையில், செபத்தில் நாம் இயேசுவைச் சந்திக்கின்றோமா? தேவையில்இருக்கும், துன்பத்தில் வாடும் சக மனிதரில் நாம் அவரைக் காணுகின்றோமா?

‘பின்பு அந்தக் குழந்தையைப்பற்றி தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக்கேட்ட யாவரும் இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக்குறித்து வியப்படைந்தனர்’ (லூக். 2: 18 . ‘இடையர்கள் தாங்கள் கேட்டவைஇ கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டேதிரும்பிச்சென்றார்கள்’ (லூக். 2:2)) தாம் கண்டு அனுபவித்த இயேசுவை இடையர்கள் மற்றவர்களுக்கும் அறிவித்தார்கள். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற கொள்கையை வாழ்வாக்கினார்கள். உண்மையில் இந்த இடையர்களே இயேசுவினுடைய பிறப்பின் முதல் தூதுவர்கள். இவர்கள்தான் முதல் நற்செய்திப் பணியாளர்கள். நம்முடைய கிறிஸ்தவ வாழ்வின் அழைப்பும் இயேசுவுக்கு சான்று பகரும் வாழ்வாகும். இயேசுவினுடைய நற்செய்தியின் தூதுவர்களாக மாறுவதென்பது நமது வார்த்தையாலும் வாழ்வாலும் இயேசுவுக்கு சான்றுபகர்ந்து வாழ்வதாகும்.

கானம் பாடும் வானதூதர்கள்:ஒரு குழந்தை பிறக்கும்போது அருகில் இருப்பவர்கள் சூழந்துகொள்வதும் பாடுவதும் இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சியாகும். இயேசு பிறந்தவுடன் வானகம் மகிழ்ந்துகொண்டது. விண்ணகத்திலிருந்து வானதூதர்கள் பேரணி அந்தத் தூதர்களுடன் சேர்ந்து, ”உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதியும் உண்டாகுக’ என்று கடவுளைப் புகழந்தது’ லூக். 2:13 – 14) இதுதான் இந்த உலகத்தில் ஒலித்த முதல் கிறிஸ்மஸ் செய்தி. இச்செய்தி ஆழமான அர்த்தம் நிறைந்ததொன்று.

இயேசுவின் பிறப்பு மன்னுயிர்க்கெல்லாம் மகிழ்ச்சியூட்டும் ஓர் அரிய நிகழ்வு. அது இந்த உலகிற்கு அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவந்த நிகழ்வு. ‘உலகில் அவருக்கு உகந்தோருக்கு’ மட்டுமே அமைதி வாக்களிக்கப்படுகிறது.பாலன் பிறந்த பாலஸ்தீன நாடு புவிகோளத்தின் பரப்பில் புறம்பே தள்ளப்பட்ட ஒரு பாலைநிலப் பகுதியாகும். வறண்டது. வளமற்றது சிறியது. உரோமையர் கிரேக்கர் எல்லோரும் பாதம் பதித்து விடுதலை தராது அடிமைப்படுத்திய இடம். தாழ்ந்த நிலம் விளிம்புப் பகுதி என்றெல்லாம் சொல்லலாம். இந்த பாலஸ்தீன மண்ணில் தோன்றிய இயேசு இந்த உலகத்தின் பாவ விடுதலைக்கு, சாப விடுதலைக்கு வழிகோலினார்.திருக்குடும்பத்தைப் பின்பற்றி நாமும் பொறுப்புள்ள நற்பிரசைகளாக வாழுவோம். இயேசுவின் அர்ப்பணத்தைப் பின்பற்றி சுயநலம் களைந்து பிறர் நலம் நாடுவோம். இடையர்களைப்போல, இயேசுவை அறிவோம், அவரை மற்றவர்களுக்கு அறிவிப்போம். வானதூதர்கள் வாழ்த்திப் பாடிய அமைதி சமாதானத்தை எமதாக்குவோம் .

Sharing is caring!