இரவில் உயிரை எடுக்கும் வயிற்றுவலி

ஒருவருக்கு வயிறு வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம். சிலருக்கு இரவு நேரத்தில் வயிற்று வலி வரும். பெரும்பாலும் வயிற்று வலி செரிமான பிரச்சனைகளின் காரணமாக வரக்கூடும்

அதை வாழ்க்கை முறை மாற்றம் அல்லது சில மருந்துகளின் உதவியுடன் சரிசெய்யலாம். அதுமட்டுமின்றி, இரவு நேரத்தில் உறங்கும் நேரத்தில் உணவு உட்கொண்ட உடனே உறங்கினால், அந்த உணவை செரிமானம் செய்வதற்கு வயிற்றில் சுரக்கும் அமிலம் செரிமான பாதையின் வழியே மேலே ஏறி எரிச்சலுடன் கூடிய வலியை உண்டாக்கும்.

மேலும் தூங்குவதில் சிரமம் மற்றும் தூக்க பிரச்சனைகள் இருந்தால், அது அல்சர் நோய், எரிச்சலுடனான குடலியக்கம், குடல் நோய் போன்றவற்றை உண்டாக்குவதோடு, தீவிரமாக்கவும் செய்யும்.

அதோடு குப்புற படுப்பதனால், தசைகள், மூட்டு அல்லது எலும்புக் காயங்களில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும். இதன் விளைவாக வயிற்று வலி மற்றும் அசௌகரியம் மேலும் மோசமாகும்.

இன்னும் சில சமயங்களில் இரவு நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி பல தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கும்.

எனவே உங்களுக்கு எப்போதும் இரவு நேரத்தில் வயிற்று வலி ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகி, அவரிடம் நிலைமையைக் கூறி, பிரச்சனையை அறிந்து தீர்வு காணுங்கள். கீழே ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் வயிறு வலிக்கும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான அமில சுரப்பு

வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் வழியே மேலே ஏறும் போது, நெஞ்செரிச்சல் ஏற்படும். மேலும் அதிகப்படியான அமில சுரப்பு அடிக்கடி குமட்டல், வாந்தி, வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், தொண்டை புண் மற்றும் இருமல் போன்றவற்றையும் உண்டாக்கும்.

ஒருவரது உடலில் அமில சுரப்பு அதிகமாவதற்கான சில பொதுவான காரணிகளாவன,

 • அதிகளவு ஆல்கஹால் அருந்துவது
 • தூங்கும் நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவது
 • உணவு உண்ட உடனேயே உறங்குவது
 • உடல் பருமன்
 • அதிக கொழுப்பு, காரம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பது
 • சாக்லேட், காபி போன்றவற்றை அதிகம் எடுப்பது
இரைப்பை உணவுக்குழாய் நோய்

இரைப்பை உணவுக்குழாய் நோய் இருந்தாலும், இரவு நேரத்தில் வயிற்று வலி ஏற்படும். இந்த பிரச்சனையின் போது உணவுக்குழாயில் ஏற்பட்ட அழற்சியினால், நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் அஜீரண கோளாறு போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனைக்கான அறிகுறிகள் படுத்திருக்கும் போது தான் தெரியும்.

இரைப்பை சுவரில் எரிச்சல் மற்றும் அழற்சி ஏற்பட்டிருக்கும் நிலையைத் தான் இரைப்பை அழற்சி என்று அழைப்பர். இந்த பிரச்சனை இருந்தால், வயிற்று வலியுடன், எரிச்சல், குமட்டல், வாந்தி மற்றும் வாய்வுத் தொல்லை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

இதை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், அல்சர், இரத்தக்கசிவு மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

வயிறு மற்றும் குடல் புண்கள்

வயிறு மற்றும் குடல் புண்கள் இருந்தால், வயிற்றுப் பகுதியைச் சுற்றி எரிச்சலுடனான வலியை அனுபவிக்கக்கூடும். மேலும் இந்த பிரச்சனை இருந்தால், உணவு உண்ட பின்பு மட்டுமின்றி, வயிறு காலியாக இருந்தாலும் கடுமையான வயிற்று வலியை சந்திக்க நேரிடும். முக்கியமாக இரவு நேரத்தில் தாங்க முடியாத வயிற்று வலியை உணரக்கூடும்.

வயிறு மற்றும் குடல் புண்கள் ஏற்படுவதற்கான காரணங்களாவன

 1. எச். பைலோரி பாக்டீரியா
 2. அளவுக்கு அதிகமாக அல்லது நீண்ட நாட்களாக அழற்சி எதிர்ப்பு மருந்துகளை உபயோகிப்பது
பித்த கற்கள்

பித்தப்பையானது கல்லீரலுக்கு அடியில் அமைந்துள்ள மிகச்சிறிய உறுப்பு. இதில் இருந்து தான் உணவைச் செரிக்கும் பித்த நீர் உற்பத்தியாகிறது.

எப்போது பித்தப்பையில் உள்ள நீர் கற்களாக மாறுகிறதோ, அப்போது வயிற்றுப் பகுதியில் உள்ள பித்தப்பை, கல்லீரல் அல்லது கணையத்தில் அடைப்பு ஏற்பட்டு, வலியை சந்திக்க நேரிடும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது, பித்தக்கற்களால் ஏற்படும் வயிற்று வலி தீவிரமாக இருக்கும்.

பித்தக்கற்கள் இருந்தால் வயிற்று வலியை மட்டுமின்றி, இதர பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

அவையாவன..
 • குமட்டல் அல்லது வாந்தி
 • காய்ச்சல்
 • மஞ்சள் நிற கண்கள் மற்றும் சருமம்
 • வெளிரிய நிறத்தில் மலம் வெளியேறுவது
 • விவரிக்க முடியாத சோர்வு
மாதவிடாய் கால பிடிப்புகள்

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்புகள், வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை மற்றும் சில பொதுவான அசௌகரியங்களை சந்திக்க நேரிவது சாதாரணம் தான்.

அதிலும் ஒரு பெண்ணிற்கு இடமகல் கருப்பை அகப்படலம் (Endometriosis) இருந்தால் (அதாவது கருப்பை அகலத்தின் திசு கருப்பைக்கு வெளியே அதிகமாக வளர்ந்திருந்தால்), அந்த பெண் தீவிரமான அல்லது நீண்ட நேர வயிற்று வலியை அனுபவிக்கக்கூடும்.

Sharing is caring!