இராவணனை அழிக்கப் பிறந்த லட்சுமிதேவி சீதையாக அவதாரம் எடுத்த வரலாறு!

முன்னொரு காலத்தில லட்சுமிதேவி யாக குண்டத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார்.

அப்போது புஷ்பக விமானத்தில் ஆகாய மார்க்கமாக பயணம் செய்த இலங்கேஷ்வரன் தற்செயலாகக் கீழே நோக்க, யாக குண்டத்துக்கு முன் அமர்ந்திருந்த லட்சுமிதேவியை கண்ணுற்றார்.தேவியின் பேரழகைக் கண்டு மோக வெறி கொண்ட இராவணன் அவளை அடையும் நோக்கத்துடன் விமானத்தை கீழே இறக்கினான். லட்சுமி தேவியை நெருங்கி சல்லாபம் செய்ய முற்பட்டான்.

அவனுடை தொல்லை பொறுக்க மாட்டாத தேவி திடீரென யாக குண்ட அக்கினிக்குள் இறங்கி மறைந்து போனார். இராவணன் தன்னுடன் வந்த வீரர்களை விட்டு யாக குண்டத்தில் நீர் விட்டு யாகத்தை அணைக்கச் செய்தான். பிறகு அந்த இடத்தைத் தோண்டி பார்க்க சொன்னான்.வீரர்கள் யாக குண்டத்தை தோண்டிப் பார்த்தபோது கண்களை பறிக்கும் விதத்தில் ஒரு இரத்தினக் கல் இருப்பதை கண்டான். அந்த கல்லை ஓர் அழகிய பேழையில் வைத்து மூடி தன்னுடன் எடுத்துக்கொண்டு இலங்கையை நோக்கி புறப்பட்டார். இலங்கையின் அரண்மனையை சென்றடைந்த இராவணன் ரத்தினக்கல் அடங்கிய பேழையை பூஜை அறையில் வைத்து விட்டு வெளியே வந்தான்.

உணவுக்கு பிறகு இராவணனும் அவனுடைய வாழ்க்கை துணைவி மண்டோதரியும் பள்ளியறையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது ராவணன் மண்டோதரியை நோக்கி, பூஜை அறையில் ஒரு பேழைக்குள் பரிசு பொருளை வைத்திருக்கிறேன். நீ சென்று பேழையைத் திறந்து அந்த பரிசுப் பொருளை எடுத்துக்கொள் என்று கூறினார்.ஆவலோடு பூஜை அறைக்கு சென்று பேழையை திறந்து பார்த்த மண்டோதரி திகைப்புற்றாள். அங்கே பேழைக்குள் இரத்தினக்கல் ஏதும் இருக்கவில்லை. மாறாக அழகிய சிறு பெண் குழந்தை ஒன்று கை கால்களை உதைத்துக்கொண்டு சிரித்தவாறு கிடந்தது. அப்போது வானில் அசரீரி குரல் ஒன்று ஒலித்தது.

எதிர்காலத்தில் உயிரை வாங்கி உன்னை ஒழிப்பதற்கென்ற வந்திருக்கும் மகாலட்சுமி இவள். ஆனால் இந்த சிறு குழந்தையை கொல்ல இப்போது ஏதாவது முயற்சி செய்தால் இக்கணமே உன்னுடைய இலங்காபுரி ராஜ்ஜியமும், நீயும் உனது குடும்பத்தினரும், மக்களும் நிர்மூலமாகி விடுவீர்கள் என அசரீரி குரல் ஒலித்தது.திகைப்படைந்த இராவணன் தன்னுடைய பணியாளர்களிடம் குழந்தை அடங்கிய ரத்தின பேழையை ஒப்படைத்து அதை வெகு தொலைவில் கொண்டு சென்று மண்ணில் புதைத்துவிட உத்தரவிட்டான்.

பணியாளர்கள் குழந்தை அடங்கிய அந்தப் பேழையை எடுத்துக் கொண்டு வெகு தொலைவு பயணம் செய்து ஜனக மாமன்னன் ஆட்சி புரியும் மிதிலை நகரின் எல்லையை ஒட்டிய நிலத்தில் புதைத்துவிட்டனர். பல்லாண்டுகளுக்கு பிறகு ஜனக மாமன்னன் தாம் நடத்திய யாகத்தின் பொருட்டு பேழை புதைக்கப்பட்ட நிலத்தை ஒரு வேதியருக்கு தானமாகத் வழங்கினார்.அந்த வேதியர் தமக்குத் தானமாக அளிக்கப்பட்ட நிலத்தை உழுது உயிரிட விரும்பினான். இதற்காக நிலத்தை தோண்டும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்பட்ட கலப்பை தேவியார் புதைக்கப்பட்ட இடத்தில் மாட்டிக்கொண்டது.

எவ்வளவு முயன்றும் கலப்பையை நகர்த்த முடியாமல் போகவே, அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அதில் ஒரு பேழையை கண்ணுற்ற வேதியர், அதனை அரண்மைக்கு கொண்டு சென்று மிதிலை மஹாராஜாவிடம் ஒப்படைத்தார்.அவரே சீதாதேவியாக மிதிலையில் வளர்ந்தார் என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

Sharing is caring!