இறைவனிடம் அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்துங்கள்

ஆலயங்களிலும், வீட்டிலும் கடவுளை  வேண்டும் போது என்ன கேட்கிறோம்… எனக்கு பெரிய வீடு வேண்டும்… எனக்கு நிறைய பணம் வேண்டும்… எனக்கு துன் பமே இருக்க கூடாது…. மனசும் உடம்பும் என்னிக்கும் ஆரோக்யமா இருக்கணும்.. திருமணம், கடன்பிரச்னை, குழந்தைபேறு.. இத்யாதி…இத்யாதி…. வேண்டுதலில் சதத்தில் பாதிக்கும் மேலானவர்கள்… இவற்றில் ஒன்றைதான் இறைவனிடம்  வேண்டுதலாக வைப்பார்கள் என்பதை மறுக்கமுடியாது.

தர்மம், திருப்தி, அன்பு, இரக்கம், ஈகை குணம் பொருந்தி பேராசையில்லாமல் இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழும் மனிதன் எத்தகைய துன்பத்தையும் சந்திக்க மாட்டான். அப்படி ஒரு சூழல் வந்தாலும் இறைவனது அருள் கொண்டு மீண்டு விடுவான் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது.

பேராசையும், சூதும், அதர்மமும், நேர்மை தவறிய நீதியும் கலியுகத்தை சூழ்ந்து கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் எல்லாமும் கொடுக்க  வேண்டும் என்பது  தான் இறைவனது விருப்பமும் கூட. ஆனால் அதற்கான தகுதியைப் பெறுவதற்கு புண்ணியமும், தர்மமும், தானமும், வாழ்வியல் நெறிகளையும் கடைப்பிடித் திருக்க வேண்டும் என்பதை உணரும் பொறுமையெல்லாம் மனிதப்பிறவிகளிடம் குறைந்து வருகிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

உனக்கு நல்ல காலம் பொறந்தாச்சு. ஜாதகத்தில் சுக்ரதிசை கொடிகட்டிப் பறக்குது  இனிமேல் நல்லகாலம் தான் என்று ஜோதிடர் சொல்வதைக் கேட்டு  எதுவுமே செய்யாமல் இருந்தால் செல்வம் கொட்டிவிடுமா.. இறைவனது அருள் கிட்டும் போது அதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள உங்களது உழைப்பும் முயற்சியும் வேண்டுமல்லவா… ஆனால் இதை உணர்ந்துகொண்டு புரிந்து செயல் பட்டால் கூட அடி மேல் அடி விழுகிறதே என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

பூர்வ ஜென்ம பலன் ஒன்று இருக்கிறதல்லாவா… அறிந்தும் அறியாமலும் நாம் செய்த பாவங்கள், தோஷங்கள் , முன்னோர்களது சாபங்கள் என ஏதாவது ஒன்று  நம்மை பின்  தொடரும்போது அதை சரிசெய்யாமல் எல்லாமே இறைவனது அருளால் சரியாக வேண்டும் என்று நினைப்பது ஓட்டைப்பானையில் தண்ணீரை நிரப்புவதற்கு சமம்.

எனக்கு என்ன தேவை என்று உனக்கு தெரியாதா இறைவா… இத்தகைய துன்பத்திலிருந்து எப்படி மீண்டு வர போகிறேன்.. அதற்கான  பாதையை உருவாக்கி, சோதனைகளை தாங்கும் வல்லமையை எனக்கு கொடுத்து நான் மீண்டுவர நீ துணையிருந்தால் போதும்.. நீயே உடனிருந்து இவற்றை செய்வாய் அதை நான் உளமாற நம்புகிறேனென்று  அன்போடும், நம்பிக்கையோடும் வேண்டும் வேண்டுதல்கள் நிச்சயமாக இறைவனது அருளை பெற்றுதரும். வேண்டுதல்களே இல்லாமல் கூட உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

இறைவனிடம் ஆசைகளை வெளிப்படுத்துவதை விட பக்தியையும் அன்பையும்  வெளிப்படுத்துங்கள். பொறுமையுடன் அவரது துணையை நாடுங்கள். வேண்டுதல்கள் தடையின்றி உரிய காலத்தில்  நடக்கும்.

Sharing is caring!