இறைவனின் அன்பை பெறுவது எப்படி?

துறவி ஒருவர் ஊர் ஊராக சென்று மக்களுக்கு உபதேசித்து வந்தார். ஒரு முறை இரத்தினகிரி என்னும் மலைக்கிராமத்துக்கு வந்தார். அப்போது திருவிழா சமயம் என்பதால் ஊரே விழாக்கோலம் பூண்டிருந்ததது. எல்லோரும் கையில் ஆடு, கோழிகளைப் பிடித்தப்படி சென்றார்கள்.

என்ன விஷயம் மக்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றார் அங்கிருந்த ஒருவனிடம். எங்கள் ஊர் எல்லையம்மனுக்கு நாளை திருவிழா. அவரை சந்தோஷப்படுத்தினால் எங்களுக்கு இன்னும் அள்ளிக்கொடுப்பாரே. அதனால் தான் நாளை எங்கள் ஊரில் இருக்கும் மக்கள் எல்லோரும் ஆடு, கோழிகளைப் பலி கொடுக்க போகிறோம் என்றான். அதைக் கேட்டதும் துறவிக்கு மிகவும் சஞ்சலமாக இருந்தது. மக்களை அழைத்து  உயிரைக் கொல்வது பாவம் என்று உபதேசம் செய்தார்.

கிராமங்களிலிருந்த மக்களில் சிலர் அதைப் புரிந்து கொண்டு  தங்களிடமிருந்த ஆடு, கோழிகளை விடுவித்தார்கள். அந்த ஊரில் இருந்த குயவன் மட்டும் இதை ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக கண்ணில் பட்ட மனிதர்களிடமெல்லாம் தெய்வத்துக்கு பலி கொடுத்தால் தான் நல்லது நடக்கும் என்று கூறி வந்தான். அதைக்  கேட்காத மக்களிடமிருந்த ஆடு, கோழிகளை வாங்கி தன் இடத்தில் கட்டிவைத்திருந்தான். குயவனைப் பற்றிய விஷயம் துறவியின் காதுக்கு வந்தது. நேராக குயவனிடம் சென்றார்.

துறவி சென்ற நேரம் அவன் அழகான பானைகளை செய்து கொண்டிருந்தான். இவரைக் கண்டதும் ஏதுமறியாமல் வரவேற்றான். அங்கிருந்த ஆடு, கோழிகளைப் பார்த்தார். பலி கொடுத்தால் தான் தெய்வம்  நல்லது செய்யும் என்றாயாமே என்றார். ஆமாம் அன்போடு பலி கொடுத்தால் தெய்வம் மகிழ்ந்து கேட்டதைக் கொடுக்குமே என்றான் குயவன். துறவி எதுவும் பேசவில்லை. மாறாக அங்கிருந்த அழகிய பானை ஒன்றை எடுத்து கீழே போட்டு உடைத்தார். குயவனுக்கு கோபம் வந்தது. என்ன செய்கிறீர்கள்? என்றான்.

துறவி எதுவும் பேசாமல் உடைந்த பானைத்துண்டுகளிலிருந்து ஒரு துண்டை எடுத்து வந்து அன்போடு தருகிறேன். வாங்கிக்கொள்ளுங்கள் என் றார். குயவனின் கோபம் அதிகமாயிற்று. எவ்வளவு கஷ்டப்பட்டு இதை உருவாக்கினேன். இதை உடைத்துவிட்டு அன்பால் கொடுக்கிறேன் என் கிறீர்களே. இதுதான் நீங்கள் கற்றுக்கொண்ட தர்மமா என்றான். இல்லை உன்னுடைய பொருளாயிற்றே உனக்கு நிச்சயமாக பிடிக்குமே என்று தான் கொடுத்தேன் என்றார் துறவியும் விடாமல்.

குயவனுக்கு  ஆத்திரம்  அதிகரித்தது. உடைத்து கொடுத்துவிட்டு கிண்டல் வேறா  உங்களுக்குப் பித்து தான் பிடித்திருக்கிறது. என் உழைப்பை வீணாக்கி விட்டீர்களே என்றான்.என்னப்பா சொல்கிறாய். ஒவ்வொரு உயிரையும் கஷ்டப்பட்டு உருவாக்கின இறைவனுக்கே அந்த உயிர்களை பலியிடுகிறோம். இறைவனும் மகிழ்ந்து உங்கள் அன்பை புரிந்து அள்ளியும் கொடுக்கிறாய் என்கிறாய். அப்படி நினைத்துதான் நீ உருவாக்கிய உன் னுடைய பொருளை உனக்கு பலி கொடுத்தேன் என்றார் துறவி அமைதியாக தெளிவாக.

குயவன் அமைதியானான். பிறகு துறவியைப் பார்த்து இப்போது புரிகிறது ஐயா! எந்தத் தாயும் தன் குழந்தைகளை பலிகொடுக்க விரும்பமாட் டாள். நானும் அதை உணர்ந்துவிட்டேன்  என்றபடி தன்னிடம் இருந்த ஆடு, கோழிகளை அவிழ்த்துவிட்டான்.

இறைவனின் முன்பு அவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் ஒன்றுதான். எல்லோரிடமும் அன்பு செலுத்தினால் இறைவனின் அன்பை திரும்ப பெறலாம். இதுவே இறைவனிடம் அன்பை பெறும் வழி…

Sharing is caring!