இறைவனின் அன்பை பெற்றிருக்கிறோமா?

மகாபாரதப் போர் நடந்து முடிந்ததும் அர்ஜூனன் வெற்றிகொண்ட களிப்பில் இருந்தான். பக்தன் இறைவன் மீது கொண்டிருக்கும் பக்தி உண்மைதான். ஆனால் இறைவன் பக்தனின் அன்பில் மகிழ்ந்து பக்தனோடு இருப்பது எவ்வளவு பேறு. அத்தகைய பேறை நான் அல்லவா பெற்றிருக்கிறேன். என்னை விட வேறு யார் கண்ணன் மீது பக்தி இருக்க முடியும் என்று நினைத் தான் அர்ஜூனன்.

அர்ஜூனன் மனதில் குடிகொண்டிருக்கும் கண்ணனுக்குத் தெரியாதா அர்ஜூனனின் நினைப்பு. ”உன்னைவிட பக்தியில் மிஞ்ச யாருமே இல்லை என்று நினைத்திருக்கிறாயா அர்ஜூனா?” என்றார் கண்ணன். ”எப்படி அறிந்தாய் கண்ணா?” என்று அர்ஜூனன் வியந்தான். ”உன் மனதில் என்னை நிறுத்தி வைத்திருக்கிறாய் என்னும் போது நான் அறியாமல் இருப்பேனா…” அர்ஜூனனின் மனதில் இருக்கும் கர்வத்தை அடக்க முடிவு செய்தான்.

அர்ஜூனா என்னுடைய பக்தை பிங்கலை ஒருத்தி அஸ்தினாபுரத்தில் இருக்கிறாள் அவளைப் பார்த்துவிட்டு வரலாம் என்றார். அர்ஜூனனும் சம்மதித்தான். வேறு தோற்றத்தில் செல்வோம் என்று இருவரும் பெண்ணாக மாறி பிங்கலை வீட்டு கதை தட்டினார்கள். வயது முதிர்ந்த பிங்கலை கதவைத் திறந்தாள். நாங்கள் பக்கத்து ஊருக்கு செல்லவந்தோம். இங்கு இளைப்பாறிவிட்டு செல்லலாம் என்று வந்திருக்கிறோம் என்றார் கண்ணன். பிங்கலையும் உள்ளே அழைத்து அவர்களை அமரவைத்து  உபசரித்தாள்.

கண்ணன் மெதுவாக பிங்கலையிடம் உங்களுக்கு ஆசை என்ன என்று கேட்டார். நான் இறுதிக்காலத்தை எட்டுவதற்குள் என்னுடைய விரோதிகளை கொல்ல வேண்டும், அதற்காகத்தான் இந்த ஆயுதங்களை வைத்திருக்கிறேன் என்று அருகிலிருந்த கத்திகளை காண்பித்தாள். அந்த விரோதிகளின் பட்டியலை வாசித்தபோது அர்ஜூனன் மீதுதான் அதிக கோபம் இருப்பதாக கூறினாள். ”அவனுக்கு கண்ணன் மீது எவ்வளவு பக்தி தெரியுமா?” என்று கேட்டான் பெண் வேடத்திலிருந்த அர்ஜூனன்.

”என்ன பெரிய பக்தி. தான் வெற்றி பெறவேண்டும் என்ற சுயநலத்துக்காக கண்ணனை தேரோட்டியாக்கிவிட்டானே. அவனை போய் மன்னிக்கமுடியுமா? கண்ணன் என்ன தேரோட்டியா? எவ்வளவு தெரியம் இருந்தால் அவனை தேரோட்டியாக்கி இருப்பான். அதனால் அவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது ” என்று ஆவேசப்பட்டாள். ”ஆமாம் நீங்கள் சொல்வதும் சரிதான்” என்று  பெண் வடிவிலிருந்த கண்ணன் ஆமோதிக்கவே அர்ஜுனனுக்கு வியர்த்து கொட்டியது.

அதைக் கண்ட கண்ணன் புன்னகைத்தப்படி ”அப்படி சொல்லாதீர்களம்மா. கண்ணனுக்கு கை வலித்தாலும்  கண்ணன் மனதை கவர்ந்த அர்ஜூனனின் இழப்பை தாங்க இயலாதல்லவா…அதனால் நீங்கள் அர்ஜுனனைக் கொன்றால் கண்ணன் தான் வருத்தப்படுவான். இனி நீங்கள் தான் யோசிக்க வேண்டும்” என்றார்.

”ஐயையோ கண்ணனை வருத்தும் எத்தகைய செயலையும்  நான் செய்ய மாட்டேன். இப்படியொரு கோணத்தை நான் யோசிக்கவே இல்லையே. எனக்கு இப்பிறவி அல்ல. எப்பிறவியும் தேவையில்லை. கண்ணன் மன வருத்தம் உண்டாகாமல் இருந்தாலே எனக்குப் போதுமானது. இக்கணமே நான் அர்ஜூனனை பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுகிறேன்” என்றாள். கண்ணன் புன்னகைத்தான். அர்ஜூனனுக்கு நிம்மதி உண்டானது. கூடவே இறைவன் மீதுதான் மட்டுமே  பக்தி கொண்டிருக்கும் எண்ணமும் விடுபட்டது.

இறைவன் மீது யார் பக்தி கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இறைவனின் அன்பை பெற்றிருக்கிறோமா என்பது தான் முக்கியம்.

Sharing is caring!