இறைவனின் கணக்கு தப்புமா?

கடவுளின் கணக்கு எப்போதும் சரியாகவே இருக்கும். அந்த  சூட்சுமமான ரகசியத்தை அறிந்து கொண்டாலும் அவற்றிலிருந்து மீள்வது எத்தகைய திறமை மிக்கவனாலும் முடியாது என்பதே உண்மை.  அதை உணர்த்தும் கதை இது.

அடர்ந்த காட்டில் முனிவர் ஒருவர் நீண்ட நாள்களாக வாழ்ந்து வந்தார். இயற்கை எழில் மிகுந்த அந்தக் காட்டில் விலங்குகளும் ஒன்றுக்கொன்று அன்பாக வாழ்ந்து வந்தன. யாருக்கும் எவ்வித தீங்கும் செய்யாமல் வாழ்ந்து வந்த விலங்குகளுக்கு மத்தியில் பொல்லாத எலி ஒன்று இருந்தது. எந்தநேரமும் யாரையாவது தொல்லை செய்தபடி இருக்கும். எவ்வளவு புத்திமதி கூறினாலும் அடங்காது. ஒரு முறை தன்னுடைய குறும்புத்தனத்தை முனிவரிடமே காட்டியது. பொறுமையும் அன்பும் கொண்ட அவரே எலியின் செய்கையால் கோபமுற்றார். மறுநிமிடம் அந்த எலியின் ஆயுள்காலம் முடிந்துவருவதைத் தன்னுடைய ஞான திருஷ்டியால் கண்டு எலியை மன்னித்துவிட்டார்.

அன்பே வடிவான முனிவர் கோபமுற்று பிறகு ஏன் அமைதியானார் என்பதை புரியாமல் தவித்த எலி காரணம் வேண்டி அவர் முன் நின்றது. பொய் உரைக்க விரும்பாத முனிவர் ”இன்னும் சில நாட்களில் நீ இவ்வுலக வாழ்வை துறப்பாய். எமதர்மன் உனக்கு நாள் குறித்துவிட்டான்” என்றார். அதைக் கேட்டு எலி அழுது அரற்றீயது. ”என்னை மன்னித்துவிடுங்கள் சாமி. இனிமேல் யாரையும் தொல்லை செய்ய மாட்டேன். என் ஆயுளை நீட்டிக்க என்ன வழி  சொல்லுங்கள்” என்று அழுது புரண்டது. மனம் இறங்கிய முனிவர் ”பக்கத்து கிராமத்தில் உள்ள சிவாலயம் ஒன்றில் நாளை குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. நீ அங்கு போய் தங்கி இரு. இரண்டு நாட்கள் அக்கோயிலில் இருந்தால் உனக்கு ஆயுள் நீடிக்கும்” என்றார்.

கோவிலுக்கு வந்த எலி அங்கிருந்த அறை ஒன்றிலிருந்த பொந்துக்குள் நுழைந்து கொண்டது. அதற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உயிர் பிழைத்து விட்டோமே என்று துள்ளிகுதித்தது. சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று வெளியே எட்டி பார்த்த போது அங்கு வந்த எமன் அதை பார்த்துவிட்டான். நடுங்கிய எலியைக் கண்டு நகைத்தபடி ”இங்குதான் இருக்கிறாயா? பரவாயில்லை தப்பித்துவிட்டாய்” என்று உள்ளே சென்றான். அவன் என் உயிரை எடுக்க வந்திருக்கிறானே என்று கவலையடைந்த எலி அழுதது. அப்போது அங்கு வந்த பருந்து ஒன்று எலியிடம் வந்து நடந்ததை அறிந்தது. ”கவலைப்படாதே நண்பா.. என்னால் தான் உன் உயிருக்கு ஆபத்து நேரவேண்டும் நானே உன்னைக் காக்கிறேன். நீ இங்கு இருந்தால் தான் எமன் உன் உயிரை எடுக்க முடியும். என்னோடு வா நான் மலையுச்சியில் உன்னை விட்டுவிடுகிறேன்” என்றது சொன்னது போலவே எலியை மலையுச்சியில் கொண்டு போய் விட்டு விட்டு கோவிலுக்கு திரும்பியது.

கடவுளை வணங்கிவிட்டு திரும்பிய எமனைக் கண்டதும் ”யாரை  தேடுகிறீர் பிரபு?  இனிமேல் எலி உங்களிடம் மாட்டாது” என்றது மர்மமாய் சிரித்தது. எம தர்மனும் சிரித்தான். ”நல்லதுதான் செய்திருக்கிறாய். எலியின் உயிரை பறிக்க மலையுச்சியில் அங்கு பூனை காத்திருக்கும் போது எலி இங்கிருக்கிறதே என்று தான் கேட்டேன்” என்றபடி சென்றுவிட்டார்.

இறைவனின் கணக்கு எப்போதுமே தப்பாது என்பதை நாமும் புரிந்து கொண்டு வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வோம்

Sharing is caring!