இறைவனை நித்தம் நினைந்து கொண்டிருந்தால் சன்யாசி ஆகுவார்களா?

எப்போதும் தியானமும், ஆன்மிக சிந்தனையும் கொண்டு, இறைபணியில் ஈடுபட்டிருந்தால், ‛சன்யாசம் போகிறாயா?’ என்று சிலர் கேலி செய்வார்கள். வாழ்வின் நல்ல நிலையில் ஆழமாக இறைவனை மனத்தில் நிறுத்திக்கொள்பவர்கள் பேறு பெற்றவர்கள்.

ஆன்மிகத்தில் சிறந்த குரு ஒருவர் இருந்தார்.  தம்மிடம்  ஆசி வேண்டி, பிரச்னைகளைப் பற்றி கூறி, ஆலோசனை கேட்க வரும் மக்களுக்கு தகுந்த உபதேசங்கள் அளிப்பார். கூடவே, ஆன்மிகத்தில்  பற்று கொள்ளுங்கள் இறைவன் என்றும் துணையிருப்பார் என்னும் உபதேசத்தையும்  தவறாமல் கூறுவார்.

ஒருநாள் விவசாயி ஒருவன், அவரைக்காண வந்திருந்தான். இயல்பிலேயே நேர்மையானவனாக நடந்துகொள்ளும் அவனுக்கு, வாழ்க்கையில் எவ்வித கவலையும் இல்லை.  இறைவனை வழிபட  போதிய நேரம்  கிடைக்கவில்லை என்பதே அவனுக்கு  பெருங்குறையாக இருந்தது.

‛‛ஐயா… கடவுள் என்னை மிகவும் சந்தோஷமாக வைத்திருக்கிறார்.  அவருக்கு என்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் சில நாட்கள் உங்களுடன் தங்கியிருந்து இறைவனை மட்டுமே நினைத்து, தியானித்து வழிபட்டு திரும்பி செல்லலாம் என்று  வந்திருக்கிறேன். நீங்கள்  மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் சொல்லுங்களேன்” என்று கெஞ்சினான்.

‛‛சரி..  நீ  என்னுடன்  இருப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் உன் மனைவியிடம் அனுமதி பெற்று தான் இங்குவரவேண்டும்” என்று உத்தரவிட்டார்.  சரி என்று தலையாட்டினான் விவசாயி. மறுநாள் விவசாயி வந்து ‛‛ஐயா…நான் உங்களோடு வந்து தங்கி இறைப்பணியிலேயே இருந்தா, நானும்  உங்களை மாதிரியே சன்யாசம் தேடி போயிடுவேன்னு என் மனைவி பயப்படறா.  எனக்கும் அதுதான் தோணுது. நான் வந்திட்டா என் பிள்ளைகளை யார் காப்பாத்துவாங்க.. என்னை மன்னிச்சிடுங்க’’  என்றான். ‛‛எதற்கும் இன்று ஒருநாள் மட்டும் என்னுடன் இருந்துவிட்டு போயேன்” என்றார் ஆன்மிக பெரியவர்.

சரி என்று சம்மதித்தான். அன்றைய தினம் முழுக்க அவருடனே இருந்தான்.  என்றைக்கும் இல்லாமல் அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைந்தது.  இருவரும் காட்டுப்பகுதிக்கு செல்லும் போது, செடிகளில் இலையின் மீது தண்ணீர் இருந்தால், ஐயையோ இலைகளுக்கு குளிருமே என்று தண்ணீரைத் துடைத்தார்.

புழுக்களை கையில் எடுத்து முட்கள் குத்துமே என்று பட்டுத்துணியை விரித்து அதன் மீது விட்டார். இப்படியே  அவர் செய்த ஒவ்வொரு செயலும் முட்டாள் தனமாக இருந்தது.
‛‛என்ன செய்கிறீர்கள் ஐயா.. இலைகளில் நீரும்..  புழுக்கள் பூமியில் நெளிவதும் சாதாரணமான இயற்கைக்கு உட்பட்டது. எல்லாம் அறிந்த நீங்கள் ஒன்றும் அறியாதவன் போல்  நடந்துகொள்கிறீர்களே..” என்றான். ‛‛சரியாக சொன்னாய்…  இலையின் மீது பட்ட தண்ணீரால் இலைக்கு வலிக்கும் என்று சொல்வது போல் இருக்கிறது. ஆன்மிகமும், தியானமும் செய்தால்  சன்யாசம் போவோம் என்பது.

எப்போதும் இறைவனையும், இறைப்பணியும் செய்தால் சன்யாசம் போய்விடுவார்கள் என்று மனதுக்குள் குழம்பிக்கொண்டிருந்தாயே.  இதை புரிய வைக்கத் தான் இத்தகைய கோமாளித்தனத்தைச் செய்தேன்” என்றார்.  குழம்பியிருந்த விவசாயியின் மனம் தெளிந்தது.

Sharing is caring!