இறைவா! துன்பம் வரட்டும் தைரியம் கொடு!

எத்தனை துன்பம் வந்தாலும்  மனம் பிறழாமல் தைரியத்தோடு போராடும் குணத்தையும்,  அதைத் தாண்டி வரும் பக்குவத்தையும் கொடு என்று தான் இறைவனிடம் வழிபட வேண்டும். இதைத்தான் முன்னோர்களும் ஆன்மிக பெரியோர்களும் உணர்த்தியிருக்கிறார்கள். பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை.. கர்மாவின் பயனை அனுபவித்தே தீர்க்க வேண்டியதால் இடர்பாடுகளை களைந்தெறியும் குணமும் பக்குவமும் தான் தேவைப்படுகிறது. அதை  தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.

துன்பப்படும் போது அச்சம் மிகுதியானால் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது. அதை உணர்த்தும் ஒரு கதையைப் பார்ப்போம். அடர்ந்த காட்டில் விறகுகளை எடுத்து செல்ல வந்தான் ஒருவன். நீண்ட நேரம் ஆனதால் அவனுக்கு பசி உண்டாயிற்று. காட்டில் என்ன இருக்க போகிறது. சுற்றுமுற்றும் பார்த்தான். சிறிது தூரம் வந்ததும் சுவையான கனிதரும் மரம் ஒன்றை கண்டான். பசி அதிகரிக்கவே மடமடவென்று மரத்தில் ஏறினான்.

பசி அடங்கும் வரை கனிகளை உண்டு பிறகு குழந்தைகளுக்கு பழங்களைப் பறிக்க தொடங்கினான். கனி பறிக்கும் ஆர்வத்தில் மரத்தின் சிறு கிளையில் கால் பதித்து தடுக்கி கீழே சாய்ந்தான். பயத்தில் அலறியபடி மெல்லிய கிளையைப் பற்றிக்கொண்டான். மரத்தின் உயரம் நினைவுக்கு வந்தது. ஐயோ எப்படி ஏறினோ மென்றே தெரியவில்லையே. இப்போது எப்படி இறங்குவது என்று கவலைப்பட்டான்.

”யாராவது காப்பாற்றுங்கள்” என்று அலறினான். சிறிது நேரம் கழித்து அவன் அந்த வழியைக் கடந்து செல்லும் பொருட்டு துறவி ஒருவர் அவனைக் கடந்தார். அவரைக் கண்டதும் மீண்டும் பிதற்றினான். ”ஐயா என்னைக் காப்பாற்றுங்கள். இப்படியே தொங்கிக்கொண்டிருந்தால் நான் கீழே விழுந்து இறந்துவிடுவேன்” என்று அழுதான்.

துறவி அவனை மேலும் கீழும் பார்த்தார். அவரால் புன்னகையை அடக்கமுடியவில்லை. ஏனெனில் அவனுக்கும் தரைக்கும் சிறிது தூரம் இருந்தது. கீழே விழுந்தாலும் பெரிய பாதிப்பு ஒன்றும் நிகழாது. ஆனால் விழுந்த வேகத்தில் பயப்படுகிறான் என்று புரிந்தது. ஒன்றும் பேசாமல்  ஒரு குச்சியைக் கொண்டு வந்து அவனை அடித்தார். ”என்னைக் காப்பாற்ற சொன்னால் அடிக்கிறீர்களே”| என்று கோவத்தில் கத்தினான். மீண்டும் பலமாக அவனை அடிக்க தொடங்கினார்.

”என்னைப் பற்றி உங்களுத் தெரியாது நான் கீழே வந்தால் உங்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவேன்” என்றான். அவர் குச்சியை கீழே போட்டுவிட்டு கல் எடுத்து அவன் மீது வீசினார். இப்போது அவன் முன்னிலும் கோபமாக ”உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று மெல்லிய கிளையைப் பற்றியபடி கர்ணம் அடித்து மீண்டும் அடர்ந்த மரக்கிளையில் ஏறி இறங்கி வந்தான். துறவி அவனைப் பார்த்து புன்னகைத்தப்படி நின்றிருந்தார்.

”துன்பத்திலிருப்பவர்களுக்கு உதவி செய்ய இயலவில்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றான் முன்னிலும் கோவமாக. இப்போது துறவி பேசினார். ”உண்மைதான். ஆனால் கிளையைப் பற்றி தரையின் அருகில் மிகவும் தாழ இருந்த நீ மரத்தின் உயரத்தை கணக்கில் வைத்து எதைப் பற்றியும் யோசிக்காமல் அச்சத்தில் இருந்தாய். உன் மனதிலிருந்த அச்சத்தை அகற்றவே உனக்கு கோபத்தை உண்டாக்கினேன்.

நீ அப்படியே  கீழே விழுந்திருந்தாலும் உனக்கு எதுவும் நேர்ந்திருக்காது.  ஆனால் அச்சத்தாலேயே நீ மரணவித்திருப்பாய். உன் கவனத்தை வேறுபுறம் திருப்பியதும் புத்திசாலித்தனமாக மரக்கிளையைப் பற்றி கீழே இறங்கி விட்டாய். அதனால் தான் அப்படி செய்தேன்” என்றபடி நடையைக் கட்டினார் துறவி.

உண்மைதான். அச்சத்தாலேயே சிறிய துன்பத்தையும் பெரிதாக இழுத்து விட்டுக்கொள்கிறோம். அதனால் என்ன நடந்தாலும் தைரியம் மட்டும் இழக்க கூடாது. இனிமேல் இறைவனிடம் வேண்டும் போது துன்பத்தைக் கொடுத்தாலும் தைரியத்தை சேர்த்துக்கொடு என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

Sharing is caring!