இறை வழிபாட்டில் சங்கு….

மங்களகரமான நேரங்களில், அமங்கலமான வார்த்தைகள் பேசுவதும், அதைக் கேட்பதும் கூடாது என்பதால் தான்,  நமது முப்பாட்டன் காலத்தில்,  பூஜை வழி பாட்டின் போது, சங்கு ஊதுவதையும், மணி அடிப்பதையும்  வழக்கமாக கொண் டிருந்தனர்.

மஹாவிஷ்ணுவின்  நாற்கரங்களில் ஒரு கரத்தை, சங்குதான் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. அசுப குணம் கொண்டதாக கருதப்படும் சங்கு, அவதாரப் புருஷரின்  கரங்களில் எப்படி தவழும்  என்று யோசிக்க வேண்டாமா…

இந்த சங்கு உருவானது பற்றி, புராணத்தில் ஒரு கதை உண்டு.  சங்காசுரன் என்னும் அசுரன், தேவர்கள் மீது படையெடுத்து, அவர்களிடமிருந்த  விலை மதிக்கதக்க வேதங்களை  எடுத்து சென்றுவிட்டான்.

வேதங்களை மீட்டுத் தர வேண்டி, தேவர்கள், எம்பெருமானாகிய  மஹா விஷ்ணு வைச் சரணடைந்தார்கள். உலகை  ரட்சிக்கும் கடவுள், தேவர்களை  காக்க, கடலில் மறைந்திருந்த சங்காசுரனை வதம் செய்ய,  மச்ச அவதாரம் எடுத்து அவனை வதம் செய்தார்.

அப்போது சங்காசுரனின் உடலில் இருந்து  எலும்பை எடுத்து  ஊதினார். அதிலிருந்து, ஓம் என்னும் ஓங்கார ஓசையும் அந்த ஓசையிலிருந்து  வேதங்களும் வெளிப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது.

சங்காசுரனின் உடலில் இருந்து  வெளிப்பட்ட எலும்பு என்பதாலேயே, ‛சங்கு’ என்று அழைக்கப்பட்டது. மேலும் மஹாவிஷ்ணு, மச்ச அவதாரம் எடுத்து சங்காசுரனை  வதம் செய்து வெற்றி பெற்றதால், சங்கு ஊதுவது வெற்றியைக் குறிப்பதாயிற்று.

சங்கிற்கு பவித்ர பாத்திரம் என்ற பெயரும் உண்டு. பிறந்த குழந்தைக்கு சங்கில் பால், மருந்து கொடுப்பார்கள். சங்கில்  ஊற்றி வழங்கப்படும் தீர்த்தம் புனிதமானது. கடலிலிருந்து கிடைக்கும் பவித்ரமான பொருளான இவற்றில் தான், மகாலஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம்.

இடது கையில் பிடித்து ஊதுவதற்கு வசதியான சங்கு இடம் புரிசங்கு (அதிகம் கிடைக்கும்) என்றும்,  வலது கரத்தில் பிடித்து ஊதுவதற்கு  வசதியான சங்கு வலம்புரி சங்கு (இலட்சத்தில் ஒன்று) என்றும் அழைக்கப்படுகிறது..

பூஜையறையில் வலம்புரி சங்கை வைத்து வழிபட்டால், நோய் நொடிகள் அண்டாது. சங்கு பஞ்சபூதங்களால் மாறாது. நீரில் கிடைக்கும் சங்கு, நெருப்பில் போட்டாலும் உருமாறாதது. இதிலுள்ள ஓட்டையில், காற்றை செலுத்தினால் ஓம் என்னும் பிரணவநாத ஒலியை தரவல்லது.

இறை வழிபாட்டின் போது ஊதப்படும் சங்கும், கோயில் மணியும் இறைவனைத் தட்டி எழுப்ப அல்ல. நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் அதிர்ந்து ஓடவும், இறைவன் மீதான கவனத்தை ஒருமுகப்படுத்தவும் தான். மனிதன் இறந்த பின், அவனது ஆன்மா சொர்க்கலோகத்தை அடைய வேண்டியே இறப்பின் போது சங்கு ஊதப்படுகிறது.

சங்கு, சுபத்தின் அறிகுறி.. வெற்றிக்கு அறிகுறி… இறைவனை வணங்கும் போது சங்கு ஊதுங்கள்; வாழ்வில் உற்சாகம் ஊற்றெடுக்கும்.

Sharing is caring!