இளவயதில் முதுமை தோற்றமா கொய்யா சாப்பிடுங்கள்..

முன்பெல்லாம் வீட்டுக்கு அருகில் கொஞ்சம் இடமிருந்தாலும் எலுமிச்சையோ அல்லது கொய்யா மரமோ இடம்பெற்றிருக்கும். கொய்யாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். ஏழைகளின் கனி கொய்யா என்றாலும் சத்துக்களில் ராணி என்று சொல்லலாம்.

மருத்துவர்கள் கூற்றுப்படி எல்லா பழங்களையும் சரிவிகிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா சீஸன்களிலும் கிடைக்கும் பழங்களைத் தவறாமல் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். சிலவகை பழங்கள் அனைத்து காலங்களிலும் கிடைக்கும். அவற்றில் ஒன்று கொய்யாப்பழம். கோடைக்காலங்களில் அதிகம் விளைந்தாலும் அனைத்து காலங்களிலும் கிடைக்கும்.

எளிய விலை குறைந்த பழங்களில் ஒன்று கொய்யாப்பழம். இவற்றிலுள்ள சத்துக்கள் அளப்பரியாதது. நெல்லிக்கனிக்கு அடுத்தப்படியாக கொய்யாவில் அதிக வைட்டமின் சத்தும் தாதுக்களும் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் சி, பி, இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீஷியம் சத்துக்களைக் கொண்டிருக்கிறது கொய்யா. வேறு எந்த பழத்திலும் இல்லாத அளவுக்கு அதிக அளவு வைட்டமின் சி கொண்டிருக்கும் கொய்யாப்பழத்தை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்புகள் பலம்பெறும்.

மலச்சிக்கல் பிரச்னை இன்று அனைவருக்குமே அவ்வப்போது ஏற்படும் பிரச்னையாக இருந்து வருகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இயற்கையான முறையில் உணவின் மூலமே சரிசெய்துவிடலாம். தினமும் இரண்டு கொய்யாப்பழங்களை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் மலச்சிக்கல் பிரச்னையே இருக்காது. மலச்சிக்கல் தொடரும் பட்சத்தில் அவை தீவிரமாகி மூலநோயாக மாறவும் வாய்ப்புண்டு. ஆனால் மூலநோயை குணப்படுத்துவதிலும் கொய்யா உதவுகிறது.

பொதுவாகவே பழங்களைச் சாப்பிடும் போது மேல் தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிடுவார்கள். ஆனால் கொய்யாவில் தோலில் சத்துக்கள் இருப்பதால் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். அதேபோன்று கொய்யாவை துண்டுகளாக நறுக்காமல் அப்படியே கடித்து சாப்பிடவேண்டும். அப்போதுதான் பற்களும், ஈறுகளும் வலுவடையும்.

வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்கள் கொய்யா நிவாரணியாக விளங்குகிறது. செரிமான சக்தியை அதிகரித்து நன்மை தருகிறது. உடல் உள்ளுறுப்பான கல்லீரலை பலப்படுத்துவதில் கொய்யா உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட பழங்களை மட்டும் எடுத்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள் கூட கொய்யாப்பழத்தை அன்றாடம் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். கொய்யா இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு நீரிழிவு பாதிப்புகளிலிருந்தும் காக்கிறது.

முகம் மற்றும் சருமத்தில் வறட்சி அதிகமானால் கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவாக இருக்கும். இளவயதில் முதுமை தோற்றத் தைக் கொண்டவர்கள் தினமும் கொய்யா சேர்த்துவந்தால் சருமத்தில் உண்டாகும் சுருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். கொய்யா இளமையான தோற்றத்தை உண்டாக்குவதில் உதவி புரிகிறது.

கொய்யாவை உணவு உண்பதற்கு முன்னரும், இரவு நேரங்களிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. தினமும் 2 அல்லது மூன்று பழங்கள் போதுமானது. அதிக அளவு கொய்யாப்பாழம் வாயு, பித்தம், கபத்தை உண்டாக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Sharing is caring!