உங்களுடைய எல்லா ஆசைகளும் பூர்த்தியாக வேண்டுமா…?

உலக இச்சைகளையும், பொருள்களையும் துறந்து இந்த பிரபஞ்சத்தின் மூலமே பரம்பொருளை பெற்றுவிட்டால், உங்களுடைய எல்லா ஆசைகளும் பூர்த்தி ஆகிவிடும். பரமாத்மா கிருஷ்ணனிடம் வேண்டி பெறுவதை விட அவரையே பெற்றுவிட்டால் என்ன? கதையைப் படியுங்களேன்.

வயநாடு என்னும் கிராமத்தில் அனைத்து மக்களும் ஆடு மாடுகளை மேய்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர்.  அவர்களுக்குப் பிடித்த கடவுள் யாராக இருக்க முடியும் என்று யூகிக்க முடிகிறதா? வேறு யார் ஆயர்பாடி கண்ணன் தான். குறும்புக்கார கண்ணனைப் பிடிக்காதவர்கள் யாராக இருக்க முடியும். கண்ணனே தங்களைக் காப்பதாக மக்கள் நம்பினார்கள்.

ஒவ்வொரு வருடமும் கண்ணனுக்கு தனி விழா பிரம்மாண்டமாக நடத்துவார்கள். அந்த விழாவில் ஊர் பெரிய மக்கள் தங்களிடம் உள்ள பொருள்களைக் கொண்டு வந்து  விழா அரங்கில் வைத்து விடுவார்கள்.  இயலாதவர்கள்  தங்களுக்கு தேவையான பொருள்களை அங்கிருந்து எடுத்து செல்வார்கள். எந்த பொருளும் இல்லை என்னும் நிலை இருக்காது.  எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கும்.

ஒருமுறை விழாக்காலம் தொடங்கும் போது பெரிய செல்வந்தர் ஒருவர் ஏராளமான பொருள்களை வண்டியில்  ஏற்றிக்கொண்டு  விழா நடக்கும் இடத் துக்கு வந்திருந்தார். ஊர்மக்களிடம் இம்முறை விழாவை நான் நடத்துகிறேன், மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் தருகிறேன் என்றார். அவரைக் கண்டதும் மக்களின் மனதில் மரியாதையும் பக்தியும் பெருக்கெடுத்தது.அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு மயங்கும் மகுடி போல் மக்கள் இயங்கினார்கள்.

இம்முறையும்  வழக்கத்தை விட எல்லா பொருள்களும் அரங்கினுள் நிரம்பி வழிந்தது.  விழாக்காலம் தொடங்கிவிட்டது. மக்கள் அனைவரும் கூட்டம் கூட் டமாக வந்தார்கள். பிடித்த பொருள்களை எடுத்து சென்றார்கள். என்ன அதிசயம் பொருள்கள் அனைத்தும் அப்படியே இருந்தது. அள்ள அள்ள குறையாமல் இருந் தது. மக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.  எல்லோருக்கும் செல்வந்தர் மீது  இருந்த பக்தி மேலும் அதிகரித்தது.

ஒருநாள் ஆதரவற்ற பாட்டி ஒருத்தி அந்த இடத்துக்கு வந்தாள்.  விலை உயர்ந்த  ஆடைகளும், ஆபரணங்களும், நவரத்தினங்களும், முத்துக்களும் கொட்டிக் கிடந் தது. ஒருபுறம் தானியகுவியல்கள் மறு புறம் செல்வகுவியல்கள் என்று  பார்த்த இடமெல்லாம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக இருந்தது. ஓரத்தில் செல்வந்தரும் நாற்காலியில் அமர்ந்திருந்தார். பாட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள்.  ”என்ன வேண்டும் பாட்டி? என்ன தேடுகிறீர்கள்? எல்லாமே இங்கு இருக்கிறதே? என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். பாட்டி தலையை அசைத்தாள்.
”எனக்கு எதுவும் வேண்டாம் ஐயா. இந்த விழாவை நடத்துபவரை பார்க்க வேண்டும்”  என்றாள். செல்வந்தர் வந்ததும் அவரைப் பார்த்த பாட்டி அவரை பிடித்துக்கொண்டாள். ”எனக்கு நீ தான் வேண்டும். என் மகனாக உன்னையே எடுத்து கொள்கிறேன்” என்றாள். அவர் மலைத்து நின்றார். காரணம் அவர்கள் மனம் கவர்ந்த கண்ணன் தான் மனித உருவத்தில் வந்து மக்களை மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டிருந்தவர். பிறகு பாட்டியின் விருப்பப்படி நான் உன் மகனாக இருக்கிறேன் ஆனால் நீ என்னுடன்வர வேண்டும் என்று வைகுண்டம் அழைத்துச் சென்று  நன்றாக கவனித்துக்கொண்டார்.

ஆசைகள் நம்மை பிச்சைக்காரர்களை விட மேலும் பிச்சைக்காரனாக்கிவிடும் என்று சும்மாவா சொன்னார்கள். உலகில் இருக்கும் பொருள்கள் எதுவானாலும் அவை எல்லாம் தற்காலிக பொருள்களே.. நிரந்தரமானவையல்ல என்பதை உணர்ந்துகொண்டால்  நாம் ஆசைகளுக்கு அடிமையாகாமல் இறுதியில் ஆண்ட வனை சரணடைந்து முக்தி பெறுவோம்.

Sharing is caring!