உங்களை ஏமாற்றுபவர்களை ஜோதிட ரீதியாக அடையாளம் காண்பது இப்படித் தான்.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…!

திடமான உறவுமுறை (STRONG RELATIONSHIP) என்பது அன்பு, நம்பிக்கை மற்றும் நன்கு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல் போன்றவற்றையே சார்ந்தது என்பது நமக்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், பல சமயங்களில் / சந்தர்ப்பங்களில் கணவரோ / மனைவியோ / வேறு யாராவதோ ஒரு நிகழ்வை மறைக்கிறார்கள் அல்லது முழுமையாக விளக்கமளிக்க மறுக்கிறார்கள் எனும்போது, அவர்கள் நம்மை ஏமாற்றுவதாகக் கருதலாமா?

மிகப் பொதுவான ஒரு குற்றச்சாற்றுத் திருமண வாழ்வில் வருவதென்பது காதல் உறவுகளில் (LOVE RELATIONS), தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ! என்பது மட்டும் தான். இன்றைய கால கட்டத்தில் மட்டுமல்ல எப்போதுமே, பல திருமணம் மற்றும் பல உறவுமுறைகளில் துரோகம் காரணத்தால் மட்டுமே தோல்வியில் தழுவி இருக்கிறது என்றால் அது மிகை ஆகாது.இணையதளம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களின் வருகைக்குப்பின் தான் அதிக அளவில் இந்த ஏமாற்றுச் சம்பவங்கள் பலவகைகளில் நிகழ்கிறது. உங்களது வாழ்வின் பங்குதாரர் (LIFE PARTNER) உங்களை ஏமாற்றுகிறாரோ என்றோ மற்றும் அவர் உங்களுக்கு துரோகம் இழைக்கிறார் என்றோ நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?

பல ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகளின் படி பார்த்தால், அதிக அளவில் ஏமாற்றுகிற போதும், ஆண்கள் தங்களது மனைவியின் மேல் மிகவும் அன்புடன் நடந்து கொள்கிறார்கள் என்பது தான்.ஆண்கள் பெரிய அளவில் அனைத்திலும் திருப்தி அடைந்திருந்தாலும், சிலவற்றிற்கு வழி தெரியாமல் போகும் போது , அவர்கள் வேறு ஒரு பெண்ணிடம் படுக்கை சுகத்தால் அவர்களாகவே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் மற்றும் அதனை மறைக்கவே தன் மனைவியிடம் சுடு சொற்களை வீசுகிறார்கள். இதனைப் படிக்கும் எவராவது உடனடியாக ஆம் என் கணவர் கூட என் மீது எரிந்து விழுகிறார் என்று சரியான காரணம் தெரியாமல் / புரிந்துகொள்ளாமல் தம் கணவர் தம்மை ஏமாற்றுகிறாரோ என்று கவலைப்படத் தேவை இல்லை. எப்படி இருப்பினும் இந்த கட்டுரை மூலம் நான் சொல்ல விழைவது அனைவரும் சற்று ஜோதிட அறிவை பெற்றிருந்தால் இதனைப் பற்றி நன்கு அறிந்து தங்கள் கணவர் தங்களை ஏமாற்றுகிறாரா என அறியமுடியும். ஆண்களே நீங்களும் தான் உங்கள் வாழ்க்கை துணைவர் தங்களை ஏமாற்றுவதிலிருந்து தப்பிக்கலாம் / காத்துக்கொள்ளலாம்.

இந்த கட்டுரை, கணவன் மற்றும் மனைவி மட்டுமல்லாது தாய் தந்தையை ஏமாற்றும் மகன், திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும் வரை காத்திருந்து மணவறையை விட்டு ஓடும் மணமகன் மற்றும் மணமகள், நியாயமாகத் தரவேண்டிய சொத்தை தர மறுக்கும் உடன் பிறப்புகள் மற்றும் ஏமாற்ற நினைக்கும் / ஏமாறுபவர்கள் அனைவருக்குமே ஆனதென்பதைப் படிப்பவர்கள் மறக்க வேண்டாம். மொத்தத்தில் ஏமாற்றும் குணம் உள்ளவர்கள் யார் யார் என்பது மட்டுமே இக்கட்டுரை மூலம் காண முடியும்.காதல் உறவுகளில் ஏற்படும் ஏமாற்றத்திற்கு ஜோதிடம் காண்பிக்கும் இடங்களான ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் இரண்டாம் இடம் (2), அய்ந்தாம் இடம் (5) மற்றும் ஏழாம் இடம் (7) இவைகளில் இயற்கை பாவர் அல்லது லக்கின பாவர் ஆகிய கிரகங்கள் இருப்பின் இது நிகழ்ந்தேறும். மேற்சொன்ன இடங்களின் அதிபதிகள் மற்றும் அவர்களின் மேல் ஆதிக்கம் செய்யும் தீய கிரகங்களின் செயல்பாட்டால் காதல் உறவில் விரிசலோ அல்லது தவறாக புரிதலோ நிகழ்ந்தேறும். ஒரு ஆணின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட சுக்கிரன் இருப்பினும் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட குரு இருப்பினும் இது நிகழும்.ஜோதிடத்தில், லக்கினத்திற்கு 7 ஆம் வீடு தான் திருமணத்தைப் பற்றியும், கூட்டாளி பற்றியும், உறவுமுறைப் பற்றியும், வரும் களத்திரம் எவ்வாறு இருப்பார்கள் என்பதனை பற்றியும் தெளிவாக உரைக்கும். சுக்கிரன் கிரகம் இயற்கையில் திருமணத்திற்கு, உறவுமுறைகளுக்கு, தொழில் முறை கூட்டாளி, உணர்வு பூர்வ மகிழ்ச்சி போன்ற இவற்றிக்கு காரகர் ஆவார். அதே சமயம், குருவானவர், மங்களகரமான செயல்பாட்டிற்கும், அதிர்ஷ்டம் போன்றவற்றிற்கும் காரகர் ஆகி ஆண், பெண் இருவருக்கும் நன்மை செய்வார். யாராவது உங்களை ஏமாற்றி இருப்பின் அல்லது நீங்களே யாரையாவது ஏமாற்றி இருப்பின் நீங்கள் உங்கள் ஜனன கால ஜாதகத்தை கண்டு அதில் 7-ம் இடம் அல்லது 7-ம் அதிபதி எப்படிப் பட்ட பாவ கிரஹங்களுடன் இணைவு கொண்டுள்ளது என முதலில் காணவும்.

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய் அல்லது குரு மற்றும் 7-ம் வீட்டுடன் ராகு இணைவு / தொடர்பு இருப்பின் கணவன் / மனைவி ஏமாற்றுபவராக இருக்க வாய்ப்பு. சந்திரன் மனோகாரகன் , அவன் பாபர் தொடர்பு ஏற்படும் போது ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றும் போக்கு ஏற்படும். மேலும் இப்படி அமையப்பெற்ற ஜாதகர் ஒரு குழப்ப நிலையில் இருப்பதோடு நல்ல குழப்பவாதியாகவும் இருப்பார். காலம் கடந்து ஆராய்ச்சியாளராக வாய்ப்பு ஏற்படும். செவ்வாய் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் கூடுதல் சக்தி ஏற்படும், கூடுதல் முயற்சி செய்து புது உறவை முயன்று பார்ப்பார்கள். வாக்கு வாதங்கள் செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.புதன் காதலில் நாட்டம் கொள்ளச் செய்யும் கிரகமாகும். பொதுவாக புதன் புத்திசாலி தனத்துக்கு உரிய கிரகம். இவர் ஜனன கால ஜாதகத்தில் சூரியனுக்கு முன்பு இருந்தால் புத்திசாலியாகவும், படிப்பாளியாகவும் மற்றும் சூரியனுக்கு பின்னால் இருந்தால் சாமர்த்தியசாலியாகவும் இருப்பர். புதன் சனியோடு ஒருவரின் ஜாதகத்தில் இணைந்திருப்பின், அந்த ஜாதகர் அவர் செய் தொழிலில் பணம் சேரும். வீடு கட்டுவார். அந்த புதனே எந்த வகையிலாவது வலுவிழந்திருந்து சனியுடன் தொடர்பில் இருந்தால் அந்த ஜாதகர் / ஜாதகி ஒரு ஏமாற்றுபவராகவோ அல்லது ஏமாந்து போனவராகவோ அல்லது இனிமேல் ஏமாற்றப்படுபவராகவோ இருக்க நேரிடும். மேலே குறிப்பிட்டவை ஒரு சிலவே.சுக்கிரன் இன்பத்தை அனுபவிக்கும் / நுகரும் கிரகம். புதன் சுக்கிரனோடு இணைந்திருப்பின் காதல் அவருக்கு (ஆண் / பெண் ) தானாகவே வரும். புதன் கேதுவுடன் இணைந்திருப்பின் / தொடர்பு பெற்றிருப்பின் அவருக்கு 60 வயதிலும் காதல் வரும். ஆசை அடங்காது. காதல் வலை விரிப்பார். ஆனால் அவருக்கு நிலம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கக் கூடும்.

ஆண்களே, சற்று பெண்களை மதியுங்கள் மற்றும் அவர்களைப் பற்றி சிறிதாவது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். பல வருட காலங்கள் அவர்கள் பெற்றோரிடம் இருந்து பெற்ற பாசத்தை, நேசத்தை , அன்பைத் துறந்து புகுந்த வீட்டுக்கு வரும் அவர்களின் இயற்கையான குணங்கள் அவர்களின் பெற்றோர் அதனை சகித்தாலும் புகுந்த வீட்டுக்குள் இருக்கும் உறவுகளும் அதனை சகித்துக்கொள்ள இக்கட்டுரை ஆதரவாக இருக்குமென நம்புகிறேன்.

ஜோதிட ரீதியாக பெண்களின் பொதுவான குணாதிசயங்கள்

செவ்வாய் நட்சரத்தில் பிறந்த பெண்கள் (மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் மிகக் கோபம் நிறைந்தவர்கள்.ராகு, கேது நட்சரத்தில் பிறந்த பெண்கள் ( திருவாதிரை, ஸ்வாதி, சதயம் , அஸ்வினி , மகம், மூலம்) பிடிவாத குணம் நிறைந்தவர்கள்.சனி நட்சரத்தில் பிறந்த பெண்கள் (பூசம், அனுஷம், உத்திரட்டாதி) உற்சாகமின்றி, குடும்பத்தாரோடு சந்தோசம் இல்லாமல், கூட்டுக் குடும்பத்தில் ஒன்றி வாழாமல், சோகமாக இருப்பார்கள்.

சுக்கிரன் நட்சரத்தில் பிறந்த பெண்கள் (பரணி , பூரம், பூராடம்) ஆண்களிடம் நெருங்கிப் பழகி கெட்ட பெயர் வாங்கக்கூடிய, சாதாரணமாக எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் பழகினாலும் கெட்ட பெயர் ஏற்படும். திருமணத்திற்கு முன்னால், ஆண்களால் பல சோதனைகள் வரும், அதனை தெய்வத் துணையால் சமாளித்து வந்தால், நல்ல குடும்ப வாழ்வு அமையும். இவை அனைத்தும் பொதுவானவையே, வேறு சுபர் தொடர்பால் நன்மையையும் அசுபர் தொடர்பால் தீமையையும் பெறுவார்கள்.

ஆண்களின் நடத்தை: ஆண்கள் ஜாதகத்தில், லக்கினத்தில் , ராகு / கேது இருந்து மற்றும் 10 ஆம் இடத்தில் புதன் இருந்தால், வயதில் மூத்த காதலி அமைவார். 7-ம் வீட்டில் ஒரு நீச்ச கிரகம் இருப்பின், சபல புத்தி உண்டாகும். 7-ம் வீட்டில் சனி மற்றும் சுக்கிரன் இருந்தால், ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்த பெண்ணின் தொடர்பு ஏற்படும்.பெண்களின் நடத்தை: ஒரு பெண்ணிற்கு நெருப்பு ராசியான மேஷத்தில் சந்திரன் இருப்பார் ஆயின் சிவப்புக் கொடி எச்சரிக்கை தான், அந்தப் பெண் நிச்சயம் ஏமாற்ற வாய்ப்புள்ளது. வேறு சில விதிகளையும் பார்த்து முடிவெடுத்தல் நல்லது.

புதன் புதியன விரும்பி, அவன் சூரியனுடன் இருக்கும் போது ஒரு ஆண் பல பெண்களை விரும்புவார்கள். ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும். ஜோதிடத்தில் இந்த சூரியன் மற்றும் புதன் இணைவை மதன கோபால யோகம் என்றே குறிப்பிடுகிறது. ஆனால் இப்படிப்பட்டவர்கள் தொழிலில் கெட்டிக்காரர்கள், படிப்பில் வெகு சுட்டி.ஒரு ஆணின் ஜனன கால ஜாதகத்தில், 2 ஆம் இடம் மற்றும் 11 ஆம் இடம் தொடர்பு இருப்பின் வைப்பாட்டி வைத்துக்கொள்வார்கள். ஜனன ஜாதகத்தில், செவ்வாய் விருச்சிகத்தில் இருந்தால் காதல் வேட்கை அதிகமிருக்கும். ஜனன ஜாதகத்தில், சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்தால் காதலுக்காக எதையும் செய்யத் துணிவார்கள். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை , ஆண் / பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், இந்த கூட்டணி உள்ள ஜாதகர் / ஜாதகி காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரையும் போகத் தயங்க மாட்டார்கள்.

மேலே சொன்னவை அத்தனையும் சுபர் (குரு ) பார்க்க , சாரம் பெற்றிருக்க அல்லது வேறு ஏதாவது வகையில் தொடர்பு பெற்றிருப்பின் அந்த தவறுகள் நடக்காமல் போகும். இங்குக் குறிப்பிட்டவை அனைத்தும் ஜோதிடத்தில் உள்ள சில விதிகளே . இவற்றை அப்படியே கண்டு பயப்படத் தேவையில்லை.இது போல் நிறைய ஜோதிடத்தில் உள்ளது . அத்தனையையும் கூறினால் கட்டுரை நீளும் மற்றும் ஜோதிட பயிற்சி வகுப்பாகிவிடும். ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவரவர்களின் இடத்தின் அருகில் உள்ள ஜோதிட பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயின்று தாங்கள் நன்மை பெறுவதோடு மானிட வர்க்கத்திற்கும் சேவை செய்யவும்.யாராவது தங்களின் கணவர் / மனைவி இவர்களின் ஜாதகத்தில் மேற்படி அமைப்புகள் இருப்பதை அறிந்தால் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வராமல், உங்களுக்கு அருகில் உள்ள அனுபவம் வாய்ந்த ஜோதிடரை அணுகி நல்ல தீர்வை காண வேண்டுகிறேன். இது ஒரு கட்டுரையே அன்றி ஜோதிடப் பயிற்சி வகுப்பு இல்லை. மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ஜோதிட வகுப்பை நாடி, பயின்று தங்களுக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்ய வேண்டுமாய் கோருகிறேன்.எனவே, முடிவாக இந்தக் கட்டுரையில் நான் கூற வருவது திருமணத்திற்கு முன்பே மேலே கூறிய தகவல்களைக் கருத்தில் கொண்டு , நன்கு பொருத்தம் பார்ப்பது சரியான தீர்வாக இருக்க முடியும். அப்போதே ஏதாவது சில பரிகாரங்களை மேற்கொள்வது நன்மை பயப்பதாக இருக்கும். அதுவே திருமணத்துக்குப் பிறகு என்றால் தம்பதிகளிடையே ஆன நல்லுறவை மீண்டும் கட்டமைப்பது மிகக் கடினம். ஏதாவது ஒரு கிரக அமைப்பு அல்லது தசை புத்தி அல்லது கோச்சார அமைப்பு இருப்பின் , இவற்றால் தம்பதிகள் மீண்டும் இணைய வாய்ப்பு ஏற்படலாம்.

பரிகாரம்:பொதுவாக இவற்றிற்கு பரிகாரம் என்னவென்றால், புதன் பகவானை, திருவெண்காடு சென்று வணங்கி வர , நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களையும் செய்யத் தூண்டும். (அல்லது) மகா மேரு / அர்த்த மேரு / ஸ்ரீ சக்கரம் போன்ற அமைப்புடன் கூடிய சாந்த சொரூப அம்பாளை வழிபட நன்மை பயக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் கொள்ளவேண்டாம்.

Sharing is caring!