உடலும் மனமும் ஒரு சேர குளிர பழைய சோறு போதுமே..

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்னும் பழமொழி நினைவிருக்கிறதா. ஆனால் பழைய சோறுக்கு இது பொருந்தாது. உடலுக்கு வலு கொடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் துணைபுரிவது பழைய சோறு தான். கஞ்சி கலயம் சுமந்து வயலுக்குசென்ற முன்னோர்களின் ஆரோக்கியம் குறையாமல் காப்பாற்றிய சத்துமிக்க உணவுவகைகளில் பழைய சோறும் ஒன்று.

எஞ்சிய அரிசி சோற்றில் நீரை ஊற்றி வைத்து மறுநாள் சிறிது தயிர் சேர்த்து உப்பு போட்டு நன்றாக கலந்து சாம்பார் வெங்காயம், மோர் மிளகாய் அல்லது பச்சைமிளகாய், துண்டுகளாக நறுக்கிய மிளகாய்த்தூள் சேர்த்த மாங்கா என்று தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலே இப்பிறவி எடுத்த பயனை உணர்ந்து விடலாம் என்று விளையாட்டாக சொல்வார்கள். அதற்கேற்றாற் போல் இவை கொடுக்கும் ருசியும், சுவையும், சத்தும் எதுவுமே கொடுக்காது. இதை உணர்ந்து தான் முன்னோர்கள் அன்றாட  காலை உணவாக இதை எடுத்துவந்தார்கள்.

அதிகாலை எழுந்ததும் நீராகாரம் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். நீர் ஆகாரம் என்பது இரவு சோற்றில் ஊறவைத்த நீரில் இலேசாக உப்பு சேர்த்து குடிப்பதுதான். முன்னோர்களின் வாழ்க்கைமுறை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து பார்த்து வியக்கும் வகையில் நிரூபனமானதும் மீண்டும் பாரம்பரியத்துக்கு திரும்பி வருகிறோம். பல விஷயங்களில் இவை தொடர்ந்து வந்தாலும் அவற்றில் ஒன்று உணவுமுறை.

சமீபத்தில் அமெரிக்க மருத்துவர்கள் பழைய சோறு சாப்பிடுவதால் சிறுகுடலுக்கு நல்லது செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மேலும் பி6, பி12 இந்த பழைய சாதத்தில் அதிகமாக இருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.

பழைய சோற்றில் இலேசான புளிப்புச்சுவை இருக்கும். சோற்றில் உருவாகும் லேக்டிக்  ஆசிட் பாக்டீரியாதான் இதற்கு காரணம். பழைய சோற்றில் புரதம், இரும்பு, பொட்டாசியம் என்று சத்துக்களும் மிகுதியாக இருக்கின்றது. இரவு சோற்றில் தண்ணீர் ஊற்றி வைக்கும் போது அதில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றது. இது உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும் உடல்  புத்துணர்ச்சியாக இருக்கவும் உதவி புரிகிறது. காலை நேர சோர்வை நீக்குவதோடு சிறுநீரக எரிச்சல், வயிறு வலி, வயிற்றுப் புண் போன்றவற்றையும் தணிக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.

இப்போது பழைய சோறு கூட  அழகிய மண் பானையில் விற்பனைக்கு வந்து விட்டது என்றால் மக்களிடம் பாரம்பரியம் திரும்பியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இயற்கை முறையில் உருவாகும் சத்துமிக்க இந்த உணவுதான் ஐஸ் பிரியாணி என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. சொல்லப்போனால் நிஜத்தில் சத்து தருவது பிரியாணி அல்ல.. பழைய சோறுதான், அடிசிற் பானையில் சோறு வடித்து எஞ்சிய சோற்றில் நீர் ஊற்றி மறுநாள் காலை ஆகாரமாக சாப்பிடுங்களேன். உடலும் மனமும் ஒரு சேர குளிரும்.

Sharing is caring!