உடல் எடையை அதிகரிக்க….உடல் பருமனை குறைக்க பாதாம் பிசின்..

உஷ்ணமான நாட்டில் நாம் வாழ்கிறோம். அதனால்தான் சருமத்தைப் பாதுகாக்க பருத்தி ஆடைகள்,  உடலை குளிர்விக்கவும் ஆரோக்கியம் காக்கவும் தகுந்த உணவு வகைகள் என்று வரிசைகட்டி வாழ்ந்தார்கள் முன்னோர்கள். வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் எளிதில் தாக்குகிறது. வெப்பம் தணிக்க இயற்கை கொடுத்திருக்கும் இளநீர், நீர்மோர், நுங்கு போன்றவற்றோடு மருத்துவ குணங்கள் நிறைந்த பாதாம் பிசின் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

உடலுக்கு பலவித நன்மைகளைத் தருவது பாதாம். இந்த பாதாம் நமது நாட்டின் வடக்கு பகுதியில் அதிகம் விளைகிறது. இந்த மரத்திலிருந்து பெறப்படும் பிசின் தான் பாதாம் பிசின் என்றழைக்கப்படுகிறது. இது மரத்திலிருந்து வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசின் ஆகும். அதிக நுண்ணூட்டச்சத்துக்களும் மருத்துவக்குணமும் கொண்ட இதை நமது முன்னோர்கள் மருந்தாக பயன்படுத்தி வந்தார்கள். கண் எரிச்சல், அல்சர், வயிறு வலி முதலானவற்றுக்கு சிறந்த மருந்து பாதாம் பிசின். மேலும் கொழுப்பை குறைக்கவும், வயிற்றுப்போக்கு நீக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.

பாதாம் பிசின் ஒருவித காய்ந்த பசை போல் இருக்கும். பாதாம் பிசினுடன் சிறிது பால், சர்க்கரை, ஏலத்தூள் அனைத்தையும் கலந்து  10 மணி நேரம் கழித்து எடுத்தால் பளபளக்கும் சுவையான தரமான சாப்பிடத்தகுந்த ஜெல்லி தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஜெல்லியாக மட்டுமல்லாமல் உடல் உஷ்ணத்தைத் தணித்து இயற்கையான குளிர்ச்சியை உடலுக்குத் தருகிறது.

வட இந்தியாவில் பெண்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதாம்பிசினை ஊறவைத்து பால் அல்லது மோரில் அடித்து கொடுப்பார்கள். இது எலும்புக்கு வலு கொடுப்பதோடு உடலுக்கும் சக்தி கொடுக்கிறது. பாதாம் பிசின் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மினரலை கொடுக்கவல்லது. உடலின் தாதுக்கள் தேவையை குறையின்றி பூர்த்தி செய்கிறது பாதாம் பிசின்.

நெஞ்செரிச்சல், வயிறு வலி இருப்பவர்கள், இரவில் நீண்ட நேரம் கழித்து சாப்பிடுபவர்கள் செரிமான கோளாறு பிரச்னைகளால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் பாதாம்பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நீங்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து குடிக்கலாம். உடல் எடையைக் கூட்ட விரும்புபவர்கள் கொழுப்பு  நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாமல் நோயால் அவதிப்படுபவர்கள் இழந்த சக்தியைப் பெற பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் வலு கூடும்.   கோடைக்காலத்தில் நீர் சுளுக்கு பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு கை கண்ட மருந்து இது. உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் காக்கிறது.

உஷ்ணத்தால் விந்து வெளியேறும் ஆண்கள் இரவு பசும்பாலில் பாதாம்பிசின் ஊறவைத்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெறும். பாதாம் பிசின் ஒரு டீஸ்பூன் எடுத்து அது நீரில் மூழ்கும் அளவு  தண்ணீர் ஊற்றி பிறகு பால், நாட்டு சர்க்கரை அல்லது மோர், உப்பு கலந்து குடிக்கலாம். உடல் குளிர்ச்சி தன்மை அடைந்தவர்கள் இதை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. இனி பாதாம் வாங்கும் போது பாதாம் பிசினையும்  வாங்க மறவாதீர்கள்.

Sharing is caring!