உடல் எடை குறைக்க நாட்டு மருத்துவம்

உடல் எடை பிரச்சினை மட்டுமே இன்று பல்வேறு மக்களின் தலைவலியாக உள்ளது. அதிகப்படியான உடல் எடையால் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே உடல் எடையை குறைக்க பலவகையான மருந்துகளை கடைகளிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஆர்டர் செய்து முயற்சி செய்கின்றனர். இந்த மருந்துகளால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படுகின்றன. நமது முன்னோர்களின் நாட்டு மருத்துவத்தின் மூலமாக உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

இஞ்சியின் தோலை சீவி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சமஅளவு தேன் கலந்து இளம்சூடான நீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது நமது உடலின் செரிமானத்தை நன்றாக தூண்டுவதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கிறது.

வெந்தயம், கருவேப்பிலை, மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்றாக பொடி செய்து, தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் வெந்நீரில் அரை டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடல் எடையை விரைவாக குறைக்கலாம். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளும் நீங்கும்.

பெருஞ்சீரகத்தை நன்றாக பொடி செய்து, ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் அளவு பொடியை கலந்து காலை மற்றும் மாலை என இருவேளை குடித்து வந்தால் உடல் எடை நன்றாக குறையும்.

சீரகம், மிளகு, திப்பிலி, மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான் மற்றும் நெருஞ்சில் போன்ற பொருட்களை சமஅளவு எடுத்து நன்றாக பொடிசெய்து சிறிதளவு தேன் கலந்து காலை மற்றும் மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

சிறிதளவு எலுமிச்சைசாறு எடுத்து அதனுடன் சமஅளவு தேன் கலந்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சையில் உள்ள ‘வைட்டமின் சி’ நமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி, நீச்சல் பயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை தினசரி முறையாக மேற்கொண்டு வந்தால் உடல் எடையை நன்றாக குறைக்கலாம்.

தினசரி குறைந்தது இரண்டு லிட்டர் அல்லது அதற்கு அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

தினமும் உண்ணும் உணவில் தக்காளி, முட்டைகோஸ், வெள்ளரி, தர்பூசணி, மோர், ஆப்பிள், ஓட்ஸ், வால்நட் மற்றும் பாதாம் பருப்புகள் ஆகியவற்றை அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

துரித உணவுகள், எண்ணெய் பொருட்கள், கொழுப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், அதிகம் இனிப்பு கலந்த உணவு பொருட்கள் மற்றும் பட்டை தீட்டிய தானியங்களை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

Sharing is caring!