உரிமையான பொருளை எடுத்து செல்ல முடியுமா?

அரசன் ஒருவன் இருந்தான். மக்களைக் காப்பதில் குறைவைக்காதவனுக்கு விபரீத ஆசை உண்டு. எதன் மீதாவது ஆசைப்பட்டால் எப்படியாவது அதை அடைந்துவிடுவான். சிலர் அரசனாயிற்றே என்று விரும்பி கொடுத்துவிடுவார்கள். சிலர் அச்சத்தில்கொடுத்துவிட்டு மனம் பதறுவார்கள்.  யார் என்ன நினைத்தால் என்ன ஆசைப்பட்டது கிடைத்துவிடுவதால் அரசன் மகிழ்ச்சியாக இருந்தான்.

ஒருநாள் வீதி உலா சென்று திரும்பிய போது இயற்கை சூழ்ந்த அழகிய பிருந்தாவனம் போன்று தோட்டமாக இருந்த வீடு ஒன்று அவன் கண்ணில் பட்டது. அந்த வீட்டை சொந்தமாக்கி கொள்ள நினைத்தான். உடனே காவலாளிகளை அழைத்து அந்த வீட்டை விலை பேச அனுப்பினான். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளரான பாட்டி அந்த இடத்தை விற்க மறுத்துவிட்டாள். அரசருக்கு என்று சொல்லியும் அவள் கேட்கவில்லை. உடனே அரசருக்கு விஷயம் போயிற்று.

“சரி இரண்டு மடங்காக தருகிறேன் என்று சொல்லுங்கள்” என்றார் அரசர். அப்போதும் அந்த மூதாட்டி எவ்வளவு விலை கொடுத்தேனும் இதை தருவதற்கில்லை என்று உறுதியாக சொல்லிவிட்டாள். காவலாளிகள் அரசரிடம் வந்து தெரிவித்தார்கள். இடம் கொடுக்கவில்லை என்பதையும் அரசருக்கே இல்லையென்று சொன்ன மூதாட்டியின் மீது கோபம் கொண்ட அரசர் அவளை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார்.

சில காலம் சென்றது. மூதாட்டியின் இருப்பிடம் அழகிய பிருந்தாவனமாய் ஜொலித்தது. மூதாட்டி கோவிலில் பொழுதை கழித்தாள். ஒருமுறை அக்கோவிலுக்கு வந்த முனிவர் ஒருவரிடம் தன் பிரச்னையைத் தெரிவித்தாள். ”சிறிது காலம் பொறுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று வாக்கு கொடுத்தார். பிருந்தாவனத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அச்சமயம் அங்கு வந்த முனிவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விழாவன்று முனிவர் கையில் சாக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். விழாவுக்கு வந்திருந்த பக்கத்து நாட்டு அரசர்கள் அனைவரும் அந்த பிருந்தாவனத்தைப் பற்றி பாராட்டி பேசியது அரசனுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்திருந்தது. இது குறித்து பெரும் கர்வம் கொண்டான். விழா முடிந்து ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். முனிவர் ”நான் இன்று தங்கி நாளை செல்கிறேன்” என்றார். அரசனும் மகிழ்ந்து சம்மதித்தான்.

அன்று இரவு தோட்டத்துக்குள் சத்தம் கேட்டது. முனிவர் தாம் மண்ணை அள்ளி கையில் கொண்டு வந்திருந்த சாக்கில் இட்டு நிரப்பினார். அதைக் கண்ட அரச னுக்கு ஆச்சரியமாகிவிட்டது. ”என்ன செய்கிறீர்?” என்று கேட்டான். ”இந்த மண் எனக்கு பிடித்திருக்கிறது ஒரு சாக்கில் எடுத்து செல்லலாம் என்று இருக்கிறேன். எனக்கு உரிமை உண்டுதானே?” என்றார். ”அதானாலென்ன தாராளமாக எடுத்து செல்லுங்கள்” என்றான். முனிவர் சாக்கை நிரப்பினார்.

மறுநாள் முனிவர் அரசரிடம் விடை பெற வந்தார். ”அந்த மண்சாக்கை தலையில் வைக்க முடியுமா? தாங்கள் தான் எடுத்து வைக்க வேண்டும்” என்றார். அரசனும் வந்து சாக்கை தூக்கினான். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் அதைத் தூக்க முடியவில்லை. இதனால் கோபமுற்ற அரசன் ”உங்களுக்கு எதற்கு இந்த மண். முற்றும் துறந்த முனிவர் என்பதைத் தாண்டி இந்த சுமையை சுமந்துகொண்டா வேறு உலகம் செல்ல போகிறீர்கள்?” என்று கேட்டான். முனிவர் சத்தமாக சிரித்தார். ”இந்த ஒரு மூட்டை மண்ணை சுமக்க முடியாது என்பது உண்மைதான்.

ஆனால் இந்த இடத்துக்கு உரியவரை விரட்டி இந்த மண்ணை அபகரித்திருக்கும் நீர் மட்டும் வேறு உலகத்துக்கு இந்த தோட்டத்தை எடுத்து செல்ல போகிறாயா?  இந்த மண் மூட்டையையே உன்னால் சுமக்க முடியவில்லை. நீ எப்படி இவ்வளவு பெரிய இடத்தை சுமந்து செல்வாய்?” என்றார். அரசனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது. மன்னித்து விடுங்கள் என்று முனிவரை வேண்டி அந்த மூதாட்டியை அழைத்து வந்து அவளுடைய இடத்தைக் கொடுத் தான்.

இதுவரை மற்றவர்களிடமிருந்து பெற்ற பொருள்களையும்  திருப்பி கொடுத்தான். ஆசையைத் துறந்தான். பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது இருக்கட்டும். முதலில் நமக்கு உரிமையான பொருள்களே இங்கிருந்து கொண்டு போக முடியுமா என்பதை யோசியுங்கள். ஆசை மரணித்துவிடும்.

Sharing is caring!