உலகம் அழிந்தும் அழியாத சிவத்தலங்கள்

சிவத்தலங்கள் அனைத்துமே 1008 தலங்கள் முதன்மையானவை. முக்கியமானவை..அவற்றில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால்  அவற்றிலும் முக்கியமான புகழ் பெற்ற நான்கு தலங்கள் உண்டு. அவற்றில் ஒன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தில் அமைந்திருக்கும்  விருத்தகிரீஸ்வரர் ஆலயம். தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 9வது தலம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் இவ்வூர் பழமலை என்று அழைக்கப்பட்டது. பிறகே வடமொழி சொல்லில் விருத்தாசலம் என்று அழைக்கப்பட்டது. பழமை என்றால் விருத்தம் என்று பொருள். அசலம் என்றால் மலை. எனவே விருத்தாசலம் என்று அழைக்கப்படுகிறது. உலகம் அழிந்த போது இத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராண சிறப்பை இத்தலம்  பெற்றுள்ளது.

இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாகவே அருள்பாலிப்பது சிறப்புமிக்கது. சிவப்பெருமான் முதலில் மலை வடிவில் தோன்றியதாகவும், அதற்கு பிறகே உலகில் அனைத்து மலைகளும் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. மலையாக இருந்து குன்றாக மாறி பிறகு திருத்தலமாக மாறியதாகவும்  இத்தலத்தின் சிறப்பை பற்றி சொல்கிறார்கள். இத்தலத்தின் ஊர் முதற்கொண்டு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. விருத்தாசலம், விருத்தகாசி, திருமுதுகுன்றம், நெற்குப்பை, முதுகிரி என்று ஐந்துவித பெயர்களால் அழைக்கப்படுகிறது. இத்தலத்து இறைவனை தரிசனம் கண்ட முனிவர்களும் உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமாரதேவர், நாதசர்மா, அனவர்த்தினி என்று ஐந்து பேரை சொல்கிறார்கள். இத்தலத்து இறைவன் பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரிநாதர்,

விருத்தாலேஸ்வரர் என்று ஐந்துவித பெயர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் என்று ஐந்து   கோபுரங்கள் அமைந்துள்ளது. ஐந்து கொடிமரங்கள், தேரோடும் திருச்சுற்று,  கைலாய திருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று என்று ஐந்து பிரகாரங்கள் உண்டு. அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம் என்று ஐந்து உள் மண்டபங்களும், இருபது கால்மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம் என ஐந்து வெளிமண்டபங்களும் அமைந்திருக்கின்றன. இறைவனுக்கு திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று ஐந்து வழிபாடுகள் செய்யப்படுகிறது. விநாயகர் தேர், முருகன் தேர்,பழமலை நாதர் தேர், பெரிய நாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர் என்று ஐந்து தேர் இருக்கின்றன. இப்படி எல்லாமே ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைந்திருப்பது சிறப்பு. இத்தல விருட்சமான வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

மூலவர் விருத்தகிரிஸ்வரர், தாயார் விருத்தாம்பிகை. முதல் வெளிப்பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ள விநாயகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இந்த ஆழத்து விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். மூலவருக்கு நல்லெண்ணெய்,  திரவியப்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்படுகிறது. தாயாருக்கு மஞ்சள் பொடி, புடவை சாத்துதல் செய்து வழிபடுகிறார்கள்.

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இத்தலத்தில் முருகப்பெருமான் 28  லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னிதியில் அமைந்துள்ள தெற்கு வரிசையில் உள்ள  லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையின் நடுவில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள் தருகிறார்.  நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானின் உடனுறைக்கு மேல் சக்கரங்கள் அமைந்து எல்லா வளமும் கிட்டும் என்பது போல் அமைந்திருப்பது சில திருத்தலங்களில் மட்டும் அமைந்துள்ளது. 28 லிங்கங்கள் ஆகம விதிப்படி அமைந்து, வேறு எங்கும் இல்லாத இந்தச் சிறப்பையும் பெற்றிருப்பதால் இத்தலம் ஆகமக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால் அஸ்தி கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடும் என்று தலபுராணம் சொல்கிறது. இந்த மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவரை வழிபட்டால் காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.

இத்தலத்தில் உள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் கன்னிப்பெண்கள் மனம் போல் மாங்கல்யம் பெறமுடியும். மனதை அழுத்தும் பாரங்களும், உடலை அழுத்தும் நோய்களும் ஒன்றாக விலக அருள் கிடைக்கும் தலம் விருத்தகிரிஸ்வரர் வீற்றிருக்கும் இத்தலம் தான். மனதளவிலும், உடல் ரீதியாகவும் தொல்லைகளை அனுபவிக்கும் பக்தர்கள் விருத்தகிரியை வேண்டினால் போதும். இன்னல்கள் விலகி ஓடும்.

Sharing is caring!