உள்ளங்கையில் விழித்தால் மனோபலமும் ஆன்மிக பலமும் அதிகரிக்கும்…

”யார் முகத்துல முழிச்சேன்னு தெரியலியே இன்னிக்கெல்லாம் ஒரு வேளையும் நடக்கல.. நினைச்சதுக்கு நேர் மாறா நடக்குது..” இப்படி நாம் கூட சில நேரங்களில் புலம்பலாம்.  படுக்கும் இடம் சுற்றி  கடவுள் உருவங்கள் படித்த புகைப்படங்களை நிரப்பியிருந்தாலும் உங்களுக்குள் உங்கள் உள்ளங்கைகளில் வசிக்கும் மகாலஷ்மியைப் பார்த்தால் போதுமே… அன்றைய தினம் முழுக்க வெற்றிகளை மட்டுமே பெறுவீர்களே… என்ன சொல்கிறீர்கள்.. என்று கேட்கிறீர்களா.. தொடர்ந்து படியுங்கள்…

வீட்டில்  லஷ்மியான ஸ்ரீதேவியும்,  எதிர்மறை சக்திகள் நிறைந்த மூதேவியும் நமது செயல்பாடுகளைக் கொண்டே  நம் வீட்டில் நிரந்தரமாக வசிக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து பூஜை செய்து இறைவனை  வணங்குவதும்…பூஜை புனஸ்காரங்கள் செய்து  வழிபடுவதும் காலநேரமின்மை என்னும் காரணத்தால் மறைந்துவருகிறது.

உரிய முறையில் உரிய வழிபாடுகளால் தான் இறைவனின் அருளை பெற முடியும் என்றில்லை. வேலையின் போதும் இறைவனை மனம் உருக நினைத்தாலே போதும். அதிகாலை வேளையில் உள்ளங்கையைப் பார்த்து எழுந்திருப்பவர்கள் லஷ்மியின் அருளை தடையின்றி பெறுவார்கள் என்கிறார்கள் முன்னோர்கள்.

இறை உருவங்கள் அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் அருள் பாலிக்கின்றன. வேதம் கைகளை இறைவனுக்கு சமமாக சொல்கிறது. அதனாலேயே  உள்ளங்கைகளில் இறைவன் வசிப்பதாக ஐதிகம்…. புராணங்கள்  அலைமகள் கைகளின் நுனியிலும், கலைமகள் நடுவிலும் கைகளின் அடிப்பாகத்தில் விஷ்ணுவும் இருப்பதாக சொல்கிறது.

ஸ்ரீ லஷ்மி பூஜையறையிலும் உருவப்படங்களிலும் மட்டும் வசிக்கவில்லை. நம் உள்ளத்திலும் உள்ளங்கைகளிலும் வசிக்கிறாள். சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், கோலம், சந்தனம், அகல்  தீபம், மாவிலைத் தோரணம், வெற்றிலை,துளசி, நெல்லி மரம், வில்வ இலை, யானை, பசு, கண்ணாடி, மங்களப் பொருள்கள், தூய்மையான இல்லங்கள், உப்பு, தயிர், பால் இப்படி அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். அதுமட்டுமல்ல.. நேர்மை, பொறுமை, தர்மம், அழகு, தன்னடக்கம், பொறுமை, தானம் செய்யும் குணம் உள்ளவர்களிடத்தும் லஷ்மி மகிழ்ச்சியுடன் வாசம் செய்கிறாள்.

படுக்கையில் இருந்து எழும்போதே உள்ளங்கையைத் தேய்த்து கண்களில் ஒற்றி ஐந்து நிமிடங்கள் உள்ளங்கையைப் பார்த்த பிறகு எழுந்தால் அன்றைய தினம் முழுவதும் நன்மையாகவே நடக்கும். அறிவு, செல்வம், ஆன்மிக குணம் அனைத்தும்  உங்களுக்கு தடையின்றி கிடைக்கும் என்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

கிட்டதட்ட இதுவும் தியானம் போன்றுதான் சிறு குழந்தைகளையும் காலையில் எழுந்திருக்கும்போதே உள்ளங்கை பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் முன்னோர்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் இதைக் கடைப்பிடித்து பாருங்கள். உங்களுக்குள் மனோபலமும் ஆன்மிக பலமும் கூடுவதை உணர்வீர்கள்…

Sharing is caring!