எங்கே கிடைக்கும் மகிழ்ச்சி…எப்படி?

ஒருமுறை  கயிலாயத்தில்  சிவனும்  பார்வதியும்   பேசிக்கொண்டிருந்த போது பூலோகவாசிகள் பற்றிய பேச்சு எழுந்தது.  அப்போது பார்வதி தேவி  ”சுவாமியே..  பக்தர்கள் அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பதான் வாழ்வார்கள்  என்பதை அறிவேன்.  ஆனால் புண்ணியம் செய்த பக்தர்களும் ஏன் சிரமப்பட்டு வாழ்கிறார்கள்” என்று கேட்டாள்.   ”என்ன தேவி சொல்கிறாய் அவர்கள் ஒருமுறை கூட என்னிடம்  இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டதில்லையே.. அவர்கள் மகிழ்ச்சியாகவே   இருக்கிறார்கள்.. வேண்டுமானால் பரீட்சித்து பார்” என்றார்.

பூலோகத்தில் சிவபக்தன் ஒருவன் வறுமைக்கும் வறுமையிலிருந்தான்.  எப்போதும் நமசிவாய மந்திரத்தை  உச்சரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.    ஆலயங்களில் அன்னதானம் நடக்கும்போதுதான் பசியாறுவான். மற்ற நேரங்களில் அருகில் உள்ள காட்டுக்குச் சென்று பழங்களைப் பறித்து சாப்பிடுவான். யாரிடமும் உணவு வேண்டி நிற்க மாட்டான். தானாக வந்தாலும் மறுக்கமாட் டான்.

மழைக்காலம் வந்தது. காட்டுக்கும் செல்ல முடியவில்லை. ஆலயங்களிலும் அன்னதானம் இல்லை. வீட்டிலும் வறுமை. ஆனாலும் சிவ நாமத்தை உச்சரித்தப்படி அதுவரை அரிசியில்  ஒதுக்கி வைத்திருந்த நெல்மணிகளை  உரலில் இட்டு அரிசியாக மாற்றிக்கொண்டிருந்தான். சிவனும் பார்வதியும் அவன் குடிசைக்கு சென்றார்கள். எப்போதும் போல்  நமசிவாய மந்திரம் சொல்லிய படி அவர்களை வரவேற்று அமரவைத்தான்.

”என்னப்பா  எப்படியிருக்கிறாய்? எப்போதும் நமசிவாய என்று சொல்லிகொண்டே இருக்கிறாயா? உனக்கேதாவது பலன் இருக்கிறதா?” என்று கேட்டாள் பார்வதி தேவி.. ”பலன் இருந்தால் தான் ஐயனை நினைக்க வேண்டுமா.. ஐயனை நினைத்தால் உலகமே மறந்துவிடும் பேறு கிட்டும் போது அதை விட பெரிய பலன் என்னவாக இருக்க முடியும்?” என்றான் பக்தன்.. எனினும் பார்வதிக்கு திருப்தி உண்டாகவில்லை… ”அது எப்படி.. வறுமைக்கு  வறுமையில் உழன்று கொண் டிருக்கும் உனக்கு வயிறார உணவுக்கூட கிடைக்காத போது எப்படி உன்னால் இவரை  மகிழ்ச்சியாக வழிபட முடிகிறது?” என்று கேட்டாள்..

”மகிழ்ச்சி என்பது உணவிலோ, உறங்கும் இடத்திலோ அல்ல. உள்ளத்தில் தான் இருக்க வேண்டும் நிலையான ஒன்றை நிலையாக பற்றியிருக்கும் போது  எனக்கு வேறு ஒன்றின் மீது எப்படி நாட்டமிருக்கும்..” என்று உமி நீக்கிய அரிசியில் கஞ்சி வைத்து பரிமாறினான்.

அமுதமாய் உண்ட அவர்கள் அவனை வாழ்த்தினார்கள். ”இருந்த கஞ்சீயை எங்களுக்குக் கொடுத்துவிட்டாய்.. நீ எப்படி பசியாறுவாய்” என்றாள் பார்வதி.. ”படியளப்பார் எம்பெருமான்” என்றான் பக்தன்… மேலே இருந்த  கொய்யா மரத் தில் அணில் ஒன்று பழத்தைக் கடித்து கீழே போட்டது. பக்தன் புன்னகைத்தான். பார்வதி தேவி சிவனின் அருளை நினைத்து நிம்மதியடைந்தாள்.

இறைவனுக்கு  பக்தர்கள் எல்லோருமே ஒன்றுதான். அவனது அருளும்  பாரபட்சமின்றி ஒன்றாகவே இருக்கும். ஆனால்   என்ன கிடைத்தாலும் மகிழ்ச்சி என்பது  பக்தனின் மனநிலையில் தான் இருக்கிறது.

Sharing is caring!