எச்சரிக்கை…அதிகப்படியான உடல் எடை புற்றுநோயை உண்டாக்கிவிடும்…

இன்றைய மக்களின் தலையாய பிரச்னை உடல் பருமன் தான். 100 பேரில் 60 பேராவது உடல் பருமனைக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தில் ஒருவராவது பருமனான உடலை பெற்றிருக்கிறார்கள். குழந்தைகளும் இந்தப் பாதிப்பிலிருந்து தப்பவில்லை என்றே சொல்லலாம்.

பரம்பரை, மாறிவரும் உணவு பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம் போதிய உடல் உழைப்பு இல்லாமையே உடல் பருமனுக்கு காரணமாகிறது. குழந்தைகள் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளிலும், பாக்கெட்டுகளில் அடைத்த நொறுக்குத் தீனிகளிலும், சாக்லெட், ஐஸ்க்ரீம் போன்றவற்றாலும் உடல் பருமனை அடைகிறார்கள்.

உடல் பருமனால் விரைவிலேயே முதுமை தோற்றம், உடல் சோர்வு, செரிமானக் கோளாறுகள், குடலிறக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மூட்டுவலி, ஆஸ்துமா, பெண்களுக்கு கருத்தரித்தலில் பிரச்னை போன்ற குறைபாடுகள் நேருகிறது. ஆனால் அதிர்ச்சிதரக்கூடியதாக சிலருக்கு புற்றுநோயையும்  உண்டாக்கிவிடுகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பிரிட்டனில் உள்ள கேன்சர் ரிசர்ச் அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புகைப்பழக்கத்தை அடுத்து அதிகப்படியான உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்களே புற்றுநோய் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்திருக்கிறார்கள். புற்றுநோயால் பாதிப்படைந்தவர்களை கணக்கெடுத்ததில் 20 பேரில் ஒருவருக்கு உடல் பருமனால் புற்றுநோய் உண்டானதாக தெரிவிக்கிறார்கள்.

நமது உடலில் இயற்கையாகவே புற்றுநோய் திசுக்களை அழிக்க செய்யும் செல்கள் உண்டு. ஆனால் அதிகப்படியான உடல்பருமனால் அதிக கொழுப்புகள் உடலில் தங்கிவிடுகிறது. இந்தக் கொழுப்புகள் புற்றுநோய் எதிர்ப்பு செல்களை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் புற்றுநோய் அணுக்கள் அதிகரிக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். உடலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் புற்று நோய்  எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டை செய்யவிடாமல் தடுக்கிறது. அதனால் உடலில் உள்ள அதிகப்படியான இக்கொழுப்பை நீக்கி புற்றுநோய் வர விடாமல் தடுப்பதை விட உடல் பருமனை குறைப்பது மிகவும் சிறந்த பாதுகாப்பான வழி என்று ஆலோசனை கூறுகிறார்கள் தலைசிறந்த மருத்துவர்கள்.

உடல் பருமனைக் குறைத்தால் பலவிதமான நோய்களிலிருந்து தப்பிக்கலாம் என்று தான் அனைத்து சிறப்பு மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். நாமும் ஆரோக்யம் பகுதியில் அநேக கட்டுரைகளில் உடல் பருமனைக் குறைக்க என்று பல்வேறு விதமான பக்கவிளைவுகள் இல்லாத ஆலோசனைகளை அவ்வப்போது கொடுத்து வருகிறோம்.  மீண்டும் உங்களுக்காக சில வரிகள்…

முதலில் உடல்பருமன் என்று மன அழுத்தத்தை அதிகப்படுத்தி கொள்ளாதீர்கள். மனதை இலேசாக்குங்கள். சமச்சீரான சத்தான உணவுகளைத் திட்டமிட்டு எடுத்துகொள்ளுங்கள். உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அல்லது உடல் உழைப்பு ஒன்றை அன்றாடம் கடைபிடியுங்கள். வறுத்த, பொறித்த, ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கு பை சொல்லுங்கள். நாளடைவில்  உடல் எடை குறைந்து ஆரோக்யமாக அழகாக வலம் வருவீர்கள்.

Sharing is caring!