என்னுள் ஐக்கியமாகிவிடு அழைக்கிறார் பாபா…

பாபா.. கேட்ட மாத்திரத்தில் கேட்ட நேரத்தில் கேட்ட இடத்தில் மனதில் இருக்கும் அன்பை பெருக்க செய்யும் மந்திரவார்த்தை. பகவானே என்னைக் காப்பாற்று என்னும் வேண்டுதல்களுக்கு மத்தியில் என்னிடம் வாருங்கள், உங்கள் எண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி என்னுள் ஐக்கியமாகுங்கள்,  உங்களுக்கு வேண்டியதை செய்யவே நான் இருக்கிறேன் என்று இருகரம் நீட்டி அழைக்கும் மகானின் அன்பை சொல்ல வார்த்தைகள் ஏது?

கலியுகத்தில் இறைவன் நேரில் வருவாரா என்ற நம்பிக்கையை இறைவன் மீது வைத்து காத்திருக்கும் அதே வேளையில்  நீ அழைத்த மாத்திரத்தில் எங்கிருந்தாலும் உடனே உன்னிடம்  ஓடி வருவேன் என்கிறார் பாபா. பக்தர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதோடு குருநாதனின்  பணி முடிவதில்லை. அவர் எங்களோடு இருப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் என்று சொல்லும் அதே நேரத்தில் நாங்கள் அவரை கண்ணார நேரில் தரிசிக்கும் பேறு பெற்றோம் என்று சொல்லும் பக்தர்களும் உண்டு.

1947 ஆம் வருடம் ஸ்ரீ ராமுலு என்பவர் தன் மூன்று குழந்தைகளுடன் மனைவியின் அடுத்த பிரசவத்துக்காக மருத்துவமனை வாயிலில் நின்றிருந்தார். குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். மனைவியுடன் வீட்டுக்கு வந்தார். அவர் மனைவி கால் வீக்கமடைந்து இயற்கை உபாதை கழிக்க கூட கணவனை எதிர்பார்க்கும்  நிலையில் பலவீனமாக இருந்தாள். அந்நேரம் பார்த்து ஸ்ரீராமுலுக்கு வேலை போயிற்று. ஏற்கனவே வறுமை நிலையிலிருந்த குடும்பம் மேலும் வறுமையின் பிடியில் சிக்கியது.

எல்லாம் கர்மவினை என்று வருந்திய ஸ்ரீராமுலுவுக்கு அவர் நண்பர் பாபாவைப் பற்றி கூறி அவரது ஃபோட்டோவைக் கொடுத்தார். அவர் நினைத்தால் துன்பங்கள் அகலும் என்றார். கேட்ட மாத்திரத்தில் மகிழ்ந்த ஸ்ரீராமலு ஷீரடி வரை போக பணம் வேண்டுமே என்று மனதில் நினைத்து வருந்தினார். மனதில் பாபாவை நினைத்துக்கொள்ளவும் தவறவில்லை. மறுநாள் காய்கறி வாங்க சந்தைக்கு வந்தார். அவரின் எதிரே நடந்து வந்தவரைக் கண்டதும் நின்றுவிட்டார்.

பாபாவா.. அவர் எப்படி இங்கே.. பாபா இறந்து 29 வருடங்கள் கடந்துவிட்டதே என்று மலைத்து நின்றார்., அருகில் வந்த பாபா ”என்ன மலைத்துவிட்டீர் நான் பாபாதான்” என்றார். ”நீங்கள் பாபா என்பது உண்மையானால் நீங்கள் என் வீட்டுக்கு வர வேண்டும்” என்று கூறி பாபாவை வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அவருடைய பாதத்தை தன் கண்ணீர் மற்றும் தண்ணீரைக் கொண்டு பூஜை செய்தார். அந்த தண்ணீரை ஸ்ரீ ராமுலு வீட்டில் அனைவரும் பருகினார்கள். வீட்டில் இருந்த பழைய துணிகளைக் கொண்டு மெத்தையாக தயாரித்து படுக்கை செய்து பாபாவை அமரவைத்தார்.

பாபாவுக்கு உணவுகள் தயார் செய்தார்.  உண்டபிறகு பழம் வேண்டுமே என்று புறப்பட்டார்.  பழம் வாங்கி திரும்ப வரும்போது அங்கு பாபா இல்லை. அதுவரை ஒரே இடத்தில் இருந்த மனைவி குழந்தைகளுடன் சிரித்தப்படி நடமாடிக்கொண்டிருந்தாள். ஸ்ரீ ராமுலுக்கு ஆச்சரியமாக இருந்தது. ”என்ன நடந்தது என்றார். நீங்கள் சென்ற பிறகு பாபா என் அருகில் வந்து எனக்கு பசியெடுக்கிறது பரிமாறுங்கள் என்றார். நான் பரிமாறியதும் ஒரு கவளத்தை உண்டு வயிறு நிறைந்துவிட்டதம்மா” என்று சென்றுவிட்டார் என்றாள்.

அடுத்த சில மணித்துளிகளில்  ஸ்ரீ ராமுலு மனைவி அடிக்கடி சிறுநீர் கழித்தததால் வீக்கம் குறைந்தது. ஆச்சரியத்தில் ஆழ்ந்தார் ஸ்ரீ ராமுலு, குடும்பத்திலிருந்த வறுமை நோய் குணமாயிற்று. பாபாவின் நீண்ட கால  நெருக்கமான பக்தனாக ஸ்ரீ ராமுலு இருக்கவில்லை. ஆனால் பாபாவின் மீது நம்பிக்கை வைத்து அவன் வேண்டுதலை சொன்னதும் பாபாவே நேரில் வந்து தீர்த்து வைத்து விட்டார்.

பாபா என்று மனம் முழுக்க நம்பிக்கையோடு அழைத்தால் போதும் பாபா உங்களை அவரிடம் ஈர்த்துக்கொள்வார் என்பதற்கு இதைவிட சிறந்த சம்பவம் உண்டா என்ன? சாய்ராம்

Sharing is caring!