என்னை நினைப்பவர்களைத்தான் நானும் நினைக்கிறேன்

மனதில்  ஒருவரை நிறுத்தி எப்போதும்  அவரை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் நினைத்துக் கொண்டிருப்பவரின் மனதிலும் நினைப்பவர்  சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்.

அபிமன்யூவின் மனைவி உத்தரை முனிவர் ஒருவரின் பசியைப் போக்கிய போது அழகிய கண்ணாடி ஒன்றைப் பரிசளித்தார். மாயக் கண்ணாடியான அவற் றின் முன்பு யார் நின்றாலும் அவர்கள் மனத்தில் யாருடைய நினைப்பு இருக்கிறது என்பதைக் காட்டி கொடுத்து விடும். அதை  அறிந்ததும்  எல்லோரும் கண்ணாடி முன்பு நிற்க ஆவலாக இருந்தார்கள்.

“இதைப் பரிசாகப் பெற்றது நீதான் உத்தரை.. அதனால் முதலில் உன் முகத்தைக் கண்ணாடியில் காட்டு.. உன் மனதிலிருப்பவரைப் பார்க்க நாங்கள் எல்லோருமே ஆவலாக இருக்கிறோம்” என்றான் அபிமன்யூ காதல் மனைவியிடம்.. உத்தரை கண்னாடி முன்பு நின்றதும் மனம் முழுக்க அபிமன்யூவை நினைத்திருந்ததால் அபிமன்யூவின் முகம்  தெரிந்தது. மகிழ்ச்சியில் உத்தரை கணவனை நோக்கி னாள் ”உங்கள் மனதில் யாரை நினைக்கிறீர்கள் நான் பார்க்க ஆவலாக இருக் கிறேன்” என்றாள்..  அபிமன்யூ சிரித்தபடி  கண்ணாடி முன்பு நின்றான். உத்தரை யின் உருவம் தெரிந்தது..

சரியான நேரத்தில் உள்ளே நுழைந்த  மாயக் கண்ணனை எல்லோரும் சூழ்ந்துகொண்டார்கள்.  மாயக் கண்ணன் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள எல்லோருக்கும் ஆசை இருந்தது. ‘கண்ணன் மனதில் என்னைத் தவிர யாராக இருக்க முடியும்?’ என்றான் அர்ஜூனன்…’பலசாலியான என்னைத் தான் கண்ணன் நினைத்துக் கொண்டி ருக்கிறான்’ என்றான் பீமன், ‘தர்மம் தவறாத நான் தான் கண்ணனின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறேன்…’ என்றான் தர்மர். இப்படி எல்லோருக்கும் தன்னைத்தான் கண்ணன் நினைத்துக் கொண்டிருக் கிறான் என்ற எண்ணம் தலைதூக்கியிருந்தது.

மாயக் கண்ணாடி மகிமையை சொல்லாமல் கண்ணனை கண்ணாடி முன்பு நிறுத்தினார்கள். புரிந்து கொண்ட கண்ணனும் அறியாதவன் போல ஒத்துழைத் தான்.  கண்ணாடியில் தெரிந்த உருவத்தைக் கண்டதும் அதிர்ந்துவிட்டார்கள். கண்ணன் மீது தீராத வஞ்சம் கொண்டிருந்த சகுனியின் உருவம் தெரிந்தது. இதற்குதானே ஆசைப்பட்டீர்கள் என் மனம் முழுக்க சகுனி தான் நிறைந் திருக்கிறான் என்றான் கண்ணன் மறுபக்கம் ஏன் இப்படி செய்தாய்  என்று கேட்கும் மனநிலைக்கூட இல்லாத அளவுக்கு அதிர்ச்சியில் அமைதியாகி விட்டார்கள். பிறகு கண்ணனே மெளனத்தை கலைத்தான்.

வினாடியும் இடைவேளையின்றி என்னைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் சகுனிதான் என் மனம் முழுக்க நிறைந்திருக்கிறான். என்னைக்  கொல்வதற்கு  சமயம் பார்க்கிறேன் என்று சதாகாலமும் என்னையே நினைத்துக் கொண் டிருக்கும் சகுனியைத்தான் என் மனமும் நினைக்கிறது. அவனது எண்ணம் பக்தி யாலோ… வஞ்சத்தாலோ  என்பதெல்லாம் அடுத்த விஷயம். ஆனால் என்னை நினைக்கிறானே அது ஒன்றே அவன் பால் என்னை ஈர்க்கிறது என்றான் கண்ணன்.

சதா சர்வகாலமும் இறைவனையே நினைத்துக்கொண்டிருந்தால் இறைவனது  அருள் பார்வை நமக்கு நிச்சயம் கிட்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

Sharing is caring!