எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுளை எப்படி பாதுகாக்கலாம்…!

எய்ட்ஸ் நோய் என்பது கொடிய உயிர்கொல்லி நோய். எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் சில வகையான புற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எச் ஐ வி நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் வரை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எச்ஐவியால் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மரணத்தை தழுவ நேரிடும். ஆதலால், எச்ஐவி ஒரு கொடிய நோயாக கருதப்படுகிறது.

2017ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி உலக அளவில் 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். மேலும் 2017ஆம் ஆண்டு இந்தியாவில் எச்.ஐ.வி நோயுடன் வாழ்வோர் எண்ணிக்கை 21.40 லட்சம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை மக்களிடையே சிறப்பாக கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 12,778 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக எய்ட்ஸ் தினம்
ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பால் 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி “உலக எய்ட்ஸ் தினம்” கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுத்தல், அதன் பாதிப்புகளை குறைத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுதல் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்காரணாமக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எச்.ஐ.வி எவ்வாறு பரவுகிறது?
எச்.ஐ.வி என்பது மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிப்படையச் செய்து, நோய் தொற்றுக்களையும், நோய்களையும் எதிர்த்து போராடுகின்ற திறனை பலவீனப்படுத்துவதாகும். இது பாதுகாப்பில்லாதா தகாத உடலுறவின் காரணமாக முக்கியமாக ஏற்படுகிறது.

மேலும், நோய் தொற்றிய ஊசிகளை பகிர்ந்து கொள்வது, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து பிறக்கின்ற குழந்தைகளுக்கு, பிறப்பு மற்றும் தாய்ப்பாலுட்டுதல் ஆகியவற்றால் எச்ஐவி நோய் பரவுகிறது. இதற்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

ஆரம்ப கால அறிகுறிகள்
எடை குறைதல்

தொடர்ந்த இருமல்

நகம் பிரிந்து அவற்றின் வண்ணங்கள் குறைவது

களைப்பு

தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி

தலைவலி

தோலில் எரிச்சல்

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் சென்று எச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்வது அவசியம். ஆரம்பகாலத்தில் எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கேற்றார்போல் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

நன்றாக சாப்பிடவேண்டும்
வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வாய் புண் மற்றும் சுவை மாற்றங்கள் அனைத்தும் எச்.ஐ.வியுடன் உருவாகக்கூடிய பொதுவான பிரச்சினைகள். இதனால் சாப்பிடுவது என்பது கொஞ்சம் கடினமான செயல். இந்த தடைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து நிபுணரை சந்தித்து அறிவுரை கேட்டு அதன்படி, உணவை எடுத்துக்கொள்ளலாம்.

நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைவாக இருக்கும். இதுமேலும் உடலை பலவீனமடைய செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு தேவையான உணவுகளை எடுத்துக்கொள்வதால் அது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. எச்.ஐ.வி நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஒரு மதிப்புமிக்க கருவியாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்

எச்.ஐ.வியுடன் தொடர்புடைய அறிகுறிகளைக் குறைக்கும்

மருந்துகளின் பக்க விளைவுகளை குறைக்கும்

வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும்

பிற நோய்த்தொற்றுகள் மற்றும் சிக்கல்களை எதிர்க்கிறது

புரதம் நிறைந்த உணவுகள்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். புரதம் மிக முக்கியமானது. ஏனெனில் உடலில் உள்ள உயிரணுக்களை உருவாக்க, சரிசெய்ய மற்றும் பராமரிக்க புரதம் தேவைப்படுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்திலும் இது பங்கு வகிக்கிறது.

நல்ல புரத ஆதாரங்களான இறைச்சிகள், கோழி, மீன், குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள், முட்டை, பீன்ஸ் மற்றும் பயறு வகைகள் ஆகியவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான எடையை பராமரிக்க நாள் முழுவதும் போதுமான கலோரி உணவுகளை உட்கொள்ள வேண்டும். எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு கலோரி மற்றும் புரத தேவைகள் அதிகமாக இருக்கும்.

வைட்டமின் மற்றும் தாது நிறைந்த உணவுகள்
பல்வேறு வகையான வைட்டமின் மற்றும் தாது நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் புரத உணவுகளில் உடலின் செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன.

துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தால் பயன்படுத்தப்படுகின்றன. ஆரோக்கியமான இரத்த அணுக்களுக்கு இரும்பு மற்றும் வைட்டமின் பி 12 அவசியம். பலவிதமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கச் செய்ய உதவுகிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எனப்படும் ஊட்டச்சத்துக்கள் அவற்றில் அதிகம் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்கின்றன. ஒவ்வொரு நாளும் நீங்கள் உட்கொள்ளும் உணவில் பாதியளவு பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உணவுப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
எச்.ஐ.வி நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விஷயத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்வாய்ப்படும் அபாயம் குறைகிறது. எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் தினம் அன்று இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும், நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், எச்ஐவி பாதிப்புகளுக்கு சிகிச்சை செய்வதை விட, அதை வராமல் தவிர்ப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படவேண்டும்.

Sharing is caring!