ஏகாதசி விரதமும் பலன்களும்

கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து பக்தி செலுத்தினால், நமக்கு வரும் இடர்களை அவனே தாங்கிக் கொள்வான் என்பதை உணர்த்தும் புராணக்கதை இது:
சூரிய வம்சத்து அரசர் ருக்மாங்கதன்; நீதி நெறி முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தார். அவர் பெருமாள் மீது கொண்ட அளவுக்கடந்த பக்தியினால், ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்து வந்தார். அத்துடன், தன் நாட்டு மக்களும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன் காரணமாக அனைத்து மக்களும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்ததால், அந்நாட்டில் இறந்த அனைவரும் சொர்க்கத்தையே அடைந்தனர்; எமலோகத்திற்கு ஒருவர் கூட செல்லவில்லை. அதனால், எமதர்மன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, அவர் மோகினி எனும் ஒரு அழகிய பெண்ணை சிருஷ்டித்து, ‘நீ போய் ருக்மாங்கதனின் ஏகாதசி விரதத்தை கெடுத்து வா…’ என அனுப்பினார்.
அதன்படி மோகினியும் வர, அவள் வீசிய மோக வலையில் அகப்பட்ட அரசர், தன்னை மணம் செய்து கொள்ள வேண்டினார். மோகினியோ, ‘நான் என்ன சொன்னாலும், அதை கேட்டு நடக்க வேண்டும்; மறுக்கக் கூடாது…’ என நிபந்தனை விதித்தாள்.
மன்னர் ஒப்புக் கொள்ள, திருமணம் நடந்தது. மோகினியுடன் மன்னர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாலும், வழக்கம் போல் அரசனும், அந்நாட்டு மக்களும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்து வந்தனர். ஏகாதசி விரதத்தை நிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தாள் மோகினி.
ஒருநாள், மன்னர் மோகினியுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த போது, ஏகாதசி விரதம் பற்றிய அறிவிப்புக்கான முரசொலி கேட்டது. அதைக் கேட்டதும் மன்னர் உடனே எழுந்து, ஆலயத்திற்கு புறப்பட தயாரானார். மோகினி அவரைத் தடுத்து, ‘மன்னா… என்னை மணம் செய்து கொள்ளும் போது என் விருப்பப்படி நடப்பேன் என்று சொன்னீர்களல்லவா… அப்படி கொடுத்த வாக்கின்படி, இப்போது நீங்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க கூடாது…’ என்றாள்.
‘மோகினி…ஏகாதசி விரதத்தின் பேரில் எனக்குள்ள விருப்பத்தை நீ அறிவாய். ஆகையால், அதை தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்…’ என்றார்.
மோகினியும் சளைக்கவில்லை. ‘அப்படியானால், உங்கள் மகனின் தலையை வெட்டிக் கொடுங்கள்… எனக் கேட்டாள்.
அதைக்கேட்ட மன்னர் மனம் கலங்கி, அவளிடம், ‘வேறு எதையாவது கேள்’ என, மன்றாடிப் பார்த்தார்; மோகினி ஒப்புக் கொள்ளவில்லை. அந்தநேரம் அங்கு வந்த மன்னரின் மகன், விஷயத்தை அறிந்து, ‘தந்தையே… பூமியில் ஜனனம் எடுத்து விட்டாலே மரணம் நிச்சயம்; என்றோ போகக் கூடிய என் உயிர், என் தந்தையின் கொள்கைக்காக போகிறதென்றால் எனக்கு சந்தோஷமே… வெட்டுங்கள் என் தலையை…’ என்றான்.
வேறு வழியின்றி, மன்னர் தன் மகனை வெட்ட துணிந்த போது, பகவான் நாராயணன், ருக்மாங்கதனுக்கு காட்சியளித்து, அருள் புரிந்தார்; இளவரசன் உயிர் பிழைத்தான். தன் எண்ணம் பலிக்காததால், மோகினி அங்கிருந்து விலகினாள்.
ஏகாதசி விரதத்தின் மீது ருக்மாங்கதன் கொண்ட நம்பிக்கையே, அவனுக்கு வந்த இடர்களை தவிடு பொடியாக்கி, அவனை காத்தது.

Sharing is caring!