ஏயர் கோன் கலிக்காம நாயனார்

திருத்தொண்டத் தொகையில் 63 நாயன்மார்களில் ஒருவர் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் என்று கூறுகிறது. சோழநாட்டில் உள்ள திருப்பெரும்மங்கலத்தில் வேளாளர் குலத்தில் சிறந்த ஏயர்குடியில் தோன்றியவர் கலிக்காமர். அரசன் சேனைத் தலைவனுக்கு கொடுக்கும் பட்டம் ஏயர்கோன். கலிக்காமர் இளம் வயதிலேயே சிவ பக்தியில் சிறந்து விளங்கினார். சிவனடியார்களுக்கு தொண்டு செய்து மகிழ்ந்து வந்தார். கலிக்காமனார், மானக்கஞ்சாற நாயனாரது மகளை மணமுடித்தார்.

சிவத்தொண்டில் மகிழ்ந்து இன்புற்றிருந்த கலிக்காமனார் ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை பரவையாரிடத்துக்கு தூது அனுப்பிய செய்தியைக் கேட்டு சொல்லொணா துயரமும், வேதனையும் கடும் கோபமும் கொண்டார். பெண்ணாசை பெற்ற ஒருவன் ஆசைக்காக சிவபெருமானைத் தூது விடுவதா. சர்வேஸ்வரனே அதற்கு ஒப்புக்கொண்டாலும் இத்தகைய இழி செயலை செய்யலாமா? இவரெல்லாம் என்ன சிவபக்தர்.

சிவபெருமானை தூதாக்கியதைக் கேட்டும் நான் இன்னும் உயிரை துறக்காமல் வாழ்கிறேனே. என் இறுதிக்காலத்துக்குள் சுந்தர மூர்த்தி நாயனாரை காண முடியுமா? அப்படி கண்டால் அவரை என்ன செய்ய வேண்டும் என்று மனமெல்லாம் கேள்விக் கணைகள் தொடுக்க ஆவேசமாக இருந்தார்.

செவி வழியாக கலிக்காமனாரின் ஆவேசத்தையும் கோபத்தையும் கேட்டறிந்த சுந்தரமூர்த்தி நாயனார் தம்முடைய பிழையை உணர்ந்தார். என்ன தவறு செய்துவிட்டோம். அடியாரின் கோபத்துக்கு ஆளாகிவிட்டோமோ. செய்யத் தகாத செயலை செய்து பாவியாகிவிட்டோமோ இதற்கு பரிகாரம் உண்டா என்று சிவனின் பாதத்தை நாடினார். ஐயனே நான் அறியாமல் செய்துவிட்டேன். என்ன செய்தேனும் கலிக்காமரின் அன்பை பெற வேண்டுகிறேன். தாங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் என்று கதறினார். இதற்காகவே காத்திருந்த சிவபெருமான் திருவிளையாடலை தொடங்கினார்.

கலிக்காமருக்கு சூலை நோயை உண்டாக்கி ஆறாத வலியைக் கொடுத்தார். என்ன செய்தும் வலி குறையவில்லையே என்று வருந்திய கலிக்காமர் சிவனை வேண்டினார். அவர் முன் காட்சி தந்த சிவபெருமான் ”உமது சூலை நோயை குண மாக்க சுந்தரமூர்த்தி நாயனாரால் தான் முடியும் அவரை அனுப்பி வைக்கிறேன்” என்றார். ”உம்மால் முடியும் என்றாலும் உங்களை அடியேனாக நடத்திய சுந்தர ரால்தான் என் நோய் தீர்க்கமுடியும் எனில் என் நோய் தீராமல் அப்படியே இருக் கட்டும்” என்றார். சுந்தர நாயனாரின் முன் சென்ற சிவபெருமான் கலிக்காமரின் சூலை நோய் நீர் போய் தீரும் என்று மறைந்தார்.

கலிக்காமரின் நோய் தீர்க்கவருவதாக செய்தி அனுப்பி அவரைக் காண விழைந் தார் சுந்தர மூர்த்தி நாயனார். ஆனால் அவரது வருகையை விரும்பாத கலிக் காமனார் வாளால் தமது சூலை இருந்த இடத்தை வெட்டினார். சூலை நோயோடு அவரது உயிரும் அவரை விட்டு நீங்கியது. இந்நிலைக் கண்ட கலிக்காமரின் மனைவி நானும் தங்களோடு வந்துவிடுகிறேன் என்று மாய்த்துகொள்ள முயன்ற போது சுந்தர நாயனார் வந்துவிட்ட தகவல் எட்டியது. வேறு வழியின்றி வெளியே சென்று அவரை வரவேற்றாள்.

கலிக்காமர் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாகவும் அவர் பிணிக்கு வேண்டிய மருந்தை தாங்கள் அளித்தால் தானே கொடுப்பதாகவும் சமாதானம் கூறினாள். ஆனால் எதற்கும் மசியாத சுந்தரநாயனார் கலிக்காமரை பார்த்தே தீர வேண்டும் என்றதும் வேறு வழியின்றி உள்ளே அழைத்து சென்றாள். அங்கி கலிக்காமரின் சூலை ஒரு புறம் இருக்க குடல் சிதறி அவரும் உயிர் நீத்திருந்தார்.

நடந்த எல்லா வற்றுக்கும் நானே காரணம் என்று வருந்திய சுந்தரநாயனார் தம்மிடம் இருந்த வாளால் மாய்த்துக்கொள்ளும் போது சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர்த் தெழுந்தார். இருவரும் ஒருவர் காலில் ஒருவர் வீழ்ந்து வணங்கினார்கள். அன்பினால் ஆர தழுவிக்கொண்டார்கள்.

கலிக்காமர், சுந்தர நாயனாரின் விருப்பத்துகிணங்க அவருடன் சென்று திருவாரூர் பெருமானை வழிபட்டு பிறகு அவரின் சம்மதத்தோடு தம்முடைய ஊரான பெருமங்கலக்குடிக்கு திரும்பி சிவத்தொண்டு ஆற்றி சிவபெருமான் பாதத்தை அடைந்தார். சிவாலயங்களில் ஆனிமாதம் ரேவதி நட்சத்திரத்தன்று ஏயர் கோன் கலிக்காம நாயனாருக்கு குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Sharing is caring!