ஏழைகளின் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் வைத்தியநாத சாயி..!

பாபாவின் சமஸ்தானத்தில் அவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் பல விதம் . பொன் பொருள் வேண்டி நிற்போர் ஒரு விதம் . பாபாவின் அருள் வேண்டி நிற்போர் ஒரு விதம் . முன் வினை காரணமாக தீராத வியாதிக்கு தீர்வு தேடி அவர் முன் நிற்பவர் ஒரு விதம். இதில் தங்கள் வியாதிகளிடமும் இருந்தும் , வலிகளிடம் இருந்து விடுதலை கிடைக்க வேண்டி அவர் முன் கண்ணீர் மல்க நிற்பவர்களே அதிகம் . எப்பேர்ப்பட்ட வைத்தியனாலும் கைவிடப்பட்ட நோய்களும் அந்த வைத்தியநாத சாய் முன் தங்கள் கைவரிசையை காட்ட முடியாது என்று அவர் பக்தர்கள் நம்பினார்கள் .

திக்கற்றவர்களுக்கு சாய் தான் தன்வந்திரி தெய்வம் . ஏழை நோயாளிகளுக்கு பாபாவே கண்கண்ட தெய்வம். தங்கள் மருத்துவர்கள் மேல் அவர்கள் வைத்து இருந்த நம்பிக்கையை விட, பாபா மேல் இருந்த நம்பிக்கை தான் அதிகம். பூட்டி என்று பெயர் கொண்ட ஒரு அடியவருக்கு , ஒருமுறை ஒரே நேரத்தில் இரண்டு சிக்கல்கள் நேர்ந்தன. ஒன்று கடுமையான வயிற்றுப் போக்கு. இன்னொன்று ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாந்தி. நீர் சத்து மிகுந்து வெளியேறியதால் , மிகச் சில நாள்களிலேயே மிகுந்த பலவீனம் அடைந்தார் பூட்டி . எல்லா மருத்துவர்களும் கைவிரித்து விட்ட நிலையில் , கிழிந்த நாராகப் படுத்திருந்த அவரை எவ்விதமேனும் அழைத்து வருமாறு,ஓர் அடியவரை பாபா அனுப்பினார்.

அவரைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு பூட்டி, மசூதிக்கு வந்துசேர்ந்தார்.பாபாவை கண்ட நொடியில் ,பாபா! என்னைக் காப்பாற் றுங்கள்! என்று கதறினார். பூட்டியையே உற்றுப் பார்த்த பாபா, உன் வயிற்றுப் போக்கு, வாந்தி இரண்டுமே உடனடியாக நிற்க வேண்டும், இது என் ஆணை, தெரிந்ததா?என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்டார். பாபாவின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்ட ,வயிற்றுப் போக்கையும் வாந்தியையும் உண்டாக்கிய நோய்க்கிருமிகள் , அவரது அதட்டலால் பயந்து , அடுத்த கணமே பூட்டியை விட்டு நீங்கிவிட்டது. பாபாவின் திருவடிகளைப் பணிந்த அவர், கம்பீரமாக நடந்து இல்லம் திரும்பினார். பாபாவின் ஒரே அதட்டலுக்கு அந்த நோய்க் கிருமிகள் கட்டுப்பட்டதை எண்ணி ஆச்சரியப் பட்டதுடன் பாபாவின் கருணையை நினைத்து அவரது நெஞ்சம் நெகிழ்ந்தது.

கொடிய வகைப்பட்ட மலேரியாவால் கஷ்டப்பட்ட பாபாவின் இன்னொரு பக்தரான கண்பத் , பாபாவே கதியென சரணடைந்தார். அவரை உற்றுப் பார்த்த பாபா, முன்வினையால் தான் அந்த நோய் அவரைத் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் அந்த நோய்க்கு பாபா சொன்ன வைத்தியம் தான் யாரும் எதிர்பாராதது. கொஞ்சம் சோறை எடுத்துத் தயிரோடு கலந்துகொள்! என்று பாபா ஆரம்பித்தபோது, கண்பத், தயிர் கலந்த சோறை எத்தனை வேளை சாப்பிடவேண்டும் என அக்கறையோடு விசாரித்தார். பாபா நகைத்தவாறே நீ அதைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லையே? என்றார்.

கொஞ்சம் சோற்றை எடுத்துச் சிறிது தயிரோடு கலந்து, அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார். தன் மலேரியாவுக்கும், அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கண்பத்திற்குப் புரியவில்லை. ஆனாலும் கேள்விகளுக்கும் , சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் பாபா என்பதால் , எதையும் ஆராய்ச்சி செய்யாமல் பாபாவை ஏற்றுக் கொள்வதுடன் , அவர் சொன்னபடி நூறு சதவிகிதம் அப்படியே செய்வதும் தான் நல்லது என்பதை அவர் உள்மனம் அவருக்கு உணர்த்தியது.

கண்பத் அன்று வீட்டிற்குப் போனவுடன் அவரின் கண்ணெதிரே கொஞ்சம் சோறும் தயிரும் சமையலறையில் தென்படுவதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் . உடனே பாபா சொன்னபடி செய்வோம். தன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தாமல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்ததுபோல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று,பாய்ந்தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது. தான் முன்பின் பார்த்திராத நாய் தன்னருகே வந்து வாலை ஆட்டும் அதிசயத்தைப் பார்த்த கண்பத் வியப்படைந்தார்.

பின் சுதாரித்துக்கொண்ட கண்பத், அந்த நாய்முன் தான் கொண்டுவந்திருந்த தயிர் சோற்றை வைத்தார். அது எத்தனை நாள் பசியால் தவித்ததோ? பாய்ந்து பாய்ந்து அந்த உணவைச் சாப்பிட்டது. பிறகு ஏதோ சாதனை செய்து முடித்த நிறைவில், லட்சுமி கோயில் வெளிப்புறச் சுவரின் அருகாகப் போய்ப் படுத்துக்கொண்டது. கண்பத் வீடுநோக்கித் திரும்பினார். பழைய ஆரோக்கியத்தோடு தெம்பாக நடப்பதை உணர்ந்தார். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட கொடிய மலேரியா நோய்,நிரந்தரமாகத் தன் உடலிலிருந்து நீங்கிவிட்டதை அவரால் உணர முடிந்தது.

மருத்துவர்களும் அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்து அந்த அதிசயத்தை உறுதிப்படுத்தினார்கள். கண்பத்தின் கண்களும் ,இரு கைகளும் அளவற்ற பக்தியோடு பாபாவை நோக்கிக் குவிந்தன.இதில் நாம் வியப்பதற்கு எதுவும் இல்லை . பாபா நினைத்தால் , அவர் கருணை இருந்தால் முடியாத காரியம் என இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்பதை பாபாவின் பக்தர்கள் நன்கு அறிவார்கள்.

Sharing is caring!