ஒத்தியல்பான தம்பதியாய் வாழ

மனமொத்த தம்பதியராய் இருந்தாலும், கடவுளின் அனுக்கிரகம் தொடர்ந்து  வேண்டுமல்லவா? கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை போக்கி, ஒற்றுமையை உண்டாக்க, குறிப்பிட்ட வழிபாடுகள் உண்டு. ஆனால், அதே நேரம், நாம் முன்பு கூறியது போல், திதி நித்யா தேவிகளை வழிபடாமல் செய்யும் எந்தப் பரிகாரமும் நமக்கு முழுமையான பலன் தராது.

வீட்டில் செல்வம் தங்கவும், வறுமையைப் போக்கி வளம் குன்றாத செல்வத்தை அளிக்கவும், குடும்பத்துக்குள்  சங்கடமின்றி எப்போதும் அமைதியும் சந்தோஷமும் குடிகொண்டிருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலோரின் வேண்டுதலாக இருக்கும்.

நமது குலதெய்வ வழிபாடும், பரிகாரங்களும், பூஜையும்  நம் வேண்டுதலில் இவற்றை முன்நிறுத்தியே இருக்கும். ஆனால், இவை அனைத்தும் உற்ற நேரத்தில் பெற்று மகிழ்வோடு இருக்க, திதிநித்யா தேவிகளில் ஒருவரான காமேஸ்வரி அருள்புரிகிறாள்.

நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை, அந்த திதி நாளில், ஸ்ரீ லலிதாம்பிகையுடன், ஸ்ரீ சக்கரம் வைத்து இந்த மூலமந்திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால், திதி சூனியத்தை நீக்கி, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நீங்கள்  பிரதமை திதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி காமேஸ்வரியை சுக்லபக்ஷ பிரதமை, அமாவாசை அன்று வணங்குங்கள்.

காமேஸ்வரி:
காம என்றால், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள் தரும். அழகு மிக்க இவள், விலை உயர்ந்த பொன்னாலான ஆபரணங்களை அணிந்து காட்சியளிப்பாள்.

மூன்று கண்களையும், இவளது திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், அங்குசம், பாசக்கயிறு, அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து,  ஆறு திருக்கரங்களைக் கொண்டு நம்மை காக்கிறாள்.

கோடி எண் ணிக்கை சூர்ய பிரகாசத்தை, ஒருங்கே கொண்டிருக்கும், தேக  காந்தி உடையவளான காமேஸ்வரியின் கண்களில்  இருக்கும் கருணை மழை, மனமுருகி வேண்டும் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றும்.

மூலமந்திரம்:
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

Sharing is caring!