கடவுளின் மர்மத்தை உணர முடியுமா?

ஆன்மிகத்திலும் அமானுஷ்யத்திலும் விடை தேடும் முயற்சியை நாம் என்றுமே நிறுத்திக்கொள்வதில்லை. ஆனால் என்னதான் முயற்சி எடுத்தாலும் எல்லாமே நம் கண்களுக்கு புலப்படுவதுமில்லை.  விடை தெரியாத அதிசயங்கள் ஆன்மிகப் பாதையில் அதிகம் உண்டு.  மகா ஜாம்பவான்கள் என்று பெயரெடுத்த ஆராய்ச்சியாளர்களால் கூட  சிறு துரும்பையும் அசைத்து பார்க்க முடியாத கணக்கிலடங்கா ஆன்மிக பொக்கிஷங்களை இங்கு கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று உத்திரபிரதேச மாநிலத்தில்  கான்பூரில் உள்ள பகவான் ஜெகன்னாதர் ஆலயம்.

விண்ணை முட்டும்  கோபுரங்கள்.. தங்கத்தேரில் பவனி.. என்று எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்  வானிலை ஆய்வு மையத்தை விட  வரக்கூடிய மழையின் அளவை துல்லியமாக கணித்து மக்களுக்கு சொல்கிறார் இங்கிருக்கும் மூலவர். மக்கள் வானத்தைப் பார்த்து கணிப்பதை விட மூலவரை சென்று தரிசித்து  மழையின்  அளவை முன்கூட்டியே கணிப்பார்கள்.

வருடந்தோறும்  இந்த அதிசய நிகழ்வு நடக்கும் பகவான் ஜகன்னாதார் ஆலயம் 1000 வருடங்கள் பழமையான கோயில். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு  கோயிலின் மேற்கூரையிலிருந்து  நீர் சொட்டுகிறது. மழைக்காலம்  துவங்கும் காலத்தில் 7 நாட்களுக்கு முன்பு கோயிலின் உள்ளே சொட்டும் நீர் 7 நாட்கள் வரை இடைவேளையின்றி  பெய்கிறது.

வெளியில் மழை பெய்ய தொடங்கும் போது கோயிலின் உள்புறம் மழை நின்றுவிடுகிறது. அதனால் கோயிலின் உட்புறம் மழைபெய்தாலே அடுத்த 7 நாட்களுக்கு மழை பொழியும் என்று மக்கள் நம்புகிறார்கள். கோயிலுக்குள் உள்ளே எவ்வளவு மழை பொழிகிறதோ அதே அளவு  வெளியிலும் மழை பெய்வதை ஒவ்வொரு வருடமும் உறுதி செய்கிறார்கள் இங்கிருக்கும் மக்கள். மேலும்  மழையின் அளவுக்கேற்பவே விவசாயத்தில்  என்ன பயிரிடலாம் என்பதையும் முடிவு செய்கிறார்கள். அதனால் பருவ மழை தொடங்குவதற்குள்ளாகவே  ஜகன்னாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து  அதிக மழை பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். குறிப்பிட்ட மழைக்காலத்தில்  முன்கூட்டியே மேற்கூரையிலிருந்து சொட்டும் மழை எப்படி வருகிறது என்பதை இதுவரை யாராலும் கணிக்க முடியவில்லை.

இதற்கான காரணத்தைக் கண்டறிய  உலகெங்கிலுமிருந்து ஆராய்ச்சியாளர்கள் வந்தாலும் விடை இன்னும் புதிராகவே தான் இருக்கிறது. கடவுளின் மர்மத்தை மனிதனால் அறியமுடியுமா என்கிறார்கள் இங்கிருக்கும் பக்தர்கள். இயன்றால் ஒரு முறை போய்வாருங்கள்.

Sharing is caring!