கடவுளுக்கும் சந்தேகம் உண்டு….?

எனக்காக கடவுள் செய்வார் என்று கடவுளிடம் பாரத்தை வைத்தாலும் உதடுகளில் வெளிவரும் இந்த வார்த்தை உள்ளத்திலிருந்து வருகிறதா என்பது சந்தேகம் தான். இப்படி சந்தேகம் என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் நம்முடன் இணைந்தே இருக்கிறது.சந்தேகப்படுவது என்பது மனிதனுக்கு மட்டுமல்ல… கடவுளுக்கும் உண்டு என்பதை இந்தக் கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ பரமசிவனும் பார்வதி தேவியும்  கயிலையங்கிரியில் இருந்தனர். அனைவரும் உலக நியதிகளில் மனிதனின் வாழ்க்கை முறையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பரமசிவன் எழுந்து, தேவி.. எனக்கு நேரமாகிறது நான் சென்றுவருகிறேன் என்றார். எங்கே கிளம்பிவிட்டீர்கள் என்றார் பார்வதி அறிந்தும் அறியாதது போல் கேட்கும் தேவியின் குறும்பை ரசித்தாலும் பரமன் பதில் உரைக்க தவறவில்லை. உலகில் வசிக்கும் ஜீவராசிகளுக்கு படியளக்கும் பொறுப்பு எனதல்லவா…. அதை நிறைவேற்றும் பொருட்டு நான் கிளம்புகிறேன் என்றார். சரி அப்படியானால் நீங்கள் சென்று வாருங்கள். நான் காத்திருக்கிறேன் என்று தயங்கினாள் தேவி. சொல்லுங்கள் தேவியாரே தங்களது ஐயம் என்னவோ… அதைத் தீர்க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.

எல்லா உயிர்களுக்கும் உங்களால் படியளக்க முடியுமா? என்றாள்.. என்னால் படைக்கப்பட்ட இலட்சக்கணக்கான உயிரினங்களுக்கு தவறாமல் படியளக்கிறேன் தேவி..அதில் உங்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம் என்று கூறியபடி சென்று விட்டார். குறும்புக்கார அம்மை அவரை சோதிக்க நினைத்து ஒரு எறும்பை பிடித்து குங்குமச் சிமிழில் போட்டு மூடி வைத்துவிட்டாள். எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்து புன்னகையுடன் திரும்பிய பரமனை வரவேற்ற தேவி தங்கள் பணியை குறையின்றி முடித்துவிட்டீர்களா சுவாமி.. அதாவது எல்லா உயிர்களுக்கும் படியளந்து விட்டீர்களா? என்றாள்.. ஆமாம் தேவி.. சிறப்பாக எமது பணியை குறையின்றி முடித்துவிட்டேன் என்றார் பரமசிவன்.ஆனாலும் தேவி விடவில்லை. மீண்டும் மீண்டும் குறையில்லாமல் செய்து முடித்தீர்களா? ஒரு உயிரும் தவறவில்லையா? எப்படி தங்களால் முடிந்தது என்று மாறி மாறி இதே கேள்வியைப் பலமுறை கேட்க, பொறுமையிழந்த சிவப்பெருமான் நீ வேண்டுமானால் சோதித்துப் பார் தேவி என்றார்.

இதற்காகத்தானே காத்துக்கொண்டிருந்தேன் என்றாள் அன்னை தான் மறைத்து வைத்திருந்த குங்குமச்சிமிழை திறந்தபடி. ஆனால் இந்த உயிரினத்தை மறந்துவிட்டீரே சுவாமி என்றாள். அவள் நினைத்ததற்கு நேர்மாறாக உள்ளே இருந்த எறும்பு ஓர் சோற்றுப்பருக்கையைத் தின்று கொண்டிருந்தது. அவளுக்கு குழப்பமாயிற்று..  சிவப்பெருமான் உரக்க சிரித்தார். என்ன தேவி.. இப்போது என்ன சொல்கிறாய். நீ உணவருந்திய பிறகு எறும்பை சிமிழுக்குள் போட்டிருக்கிறாய்.. அப்போது உன் விரலிலிருந்த சோற்றுப்பருக்கையும் எறும்புடன் சேர்ந்து விழுந்துவிட்டது என்றார். தேவிக்கு வருத்தமாகிவிட்டது. நான் தவறு செய்துவிட்டேன் சுவாமி… என்னை மன்னியுங்கள் என்று பரமனிடம் மன்னிப்பு கேட்டாள். என்னை நீ சந்தேகப்பட்டதை நான் மன்னித்துவிட்டேன் தேவி. ஆனால் ஒரு பாவமும் செய்யாத சிறு உயிரை சிறை வைத்த பாவத்தை நீ அடைந்துவிட்டாய்.  அதனால் உரிய நேரத்தில் இதற்கான பலனை நீ அனுபவிப்பாய்.. அனுபவித்தே ஆக வேண்டும் என்றார்.

ஒரு கதவு மூடினால் மறு கதவு நமக்கு திறக்கும் என்று சொல்வோமே. அது போல் படைத்தவனுக்கு தெரியும். நமக்கு எப்போது என்ன தர வேண்டும் என்று அதனால் ஐயமில்லாமல் ஐயனை, ஆதி சிவனை வணங்குவோம்.

Sharing is caring!