கடவுளுக்கு நிகராக வணங்கும் பசுவும், பாம்பும்

இந்து மதத்தில் மற்ற விலங்குகளை விட பசுவிற்கும், பாம்பிற்கும் மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வணங்குவது வழக்கம்.

வாருங்கள் இதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம்…

பசு

நம் வீட்டில் எத்தனை விலங்குகள் செல்ல பிராணியாக வளர்த்து வந்தாலும் பசுவிற்கு மட்டும் தனி இடம் ஒதுக்கி மிகவும் சுத்தமாக பாதுகாத்து வருவோம்.

இத்தனை மிருகங்கள் இருக்க பசுவிற்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கிறோமே ஏன் என்று சிந்தித்துள்ளீர்களா?

பசு அனைவருக்கும் பால் கொடுக்கிறது என்பதற்காகவா? ஆம், இதுவும் காரணம் தான் ஆனால், இது மட்டும் காரணம் அல்ல.

மனிதன் நெல் விதைத்து அதன் மூலம் வரும் அரிசியை சமைத்து உண்ணுகிறான்.

ஆனால், பசு நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது.

மேலும், எண்ணெயை உட் கொள்ள மீதமிருக்கும் புண்ணாக்கை பசு உட்கொள்கிறது.

இது மட்டுமல்லாது, குழந்தை சாப்பிடும் உணவு மீதமிருந்தால் தாய் சாப்பிடுகிறார் அல்லவா? அதுபோல மணிதன் சாப்பிட்ட மிச்சமிருக்கும் உணவுகளை சாப்பிட்டு மனிதர்களை தன் குழந்தையாக நினைத்து பால் கொடுக்கிறது பசு.

இது மட்டுமல்லாது, பசுவின் சாணத்துக்கு நோய்த்தொற்று தடுப்பான் குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது.

அந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். இதனால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது.

மேலும், சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும்.

பசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான்.

இவ்வாறு சுயநலமில்லாமல் மனித வர்க்கத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கு, காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்துள்ளார்கள் நம் முன்னோர்.

பாம்பு

பசு நமக்கு எல்லா விதத்திலும், பயன்படும் வண்ணம் இருப்பதால் பசுவை தெய்வமாக வழிபடுகிறோம்.

ஆனால் நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன்?

இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள் மிகவும் அழகாகவும், அருமையாகவும் விடை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று.

ஒரு மனிதன் வாழ்க்கையில் முழுவதுமாக பாவம் செய்வதுமில்லை, புண்ணீயம் செய்வதுமில்லை.

இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள்.

அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன்.

உன்னையா ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சொல்வது போல தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்துள்ளார்.

நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி. கடவுள் ஒன்றுதான்! எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ?

Sharing is caring!