கடவுளை நம்பினால் போதும்

வேலைக்கு நடுவில் அவ்வப்போது இறைவனை வேண்டுபவர்கள் உண்டு. இவர்கள் பக்தியில் முதல் ரகத்தைச் சேர்ந்தவர்கள். வேலையைச் சற்று ஒதுக்கி சிறிது நேரம் இறைவனைத் தியானித்து மீண்டும் தங்கள் இயல்புக்கு திரும்புபவர்களும் உண்டு. இவர்கள் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் இருக்கிறார்கள்.பக்தியிலேயே மூழ்கி இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இறைவழிப்பாட்டில் மெய்மறந்து தன்னிலை திரும்பி அவ்வப்போது பணியில் ஈடுபடுவார்கள். திரிலோசனதாசர் இந்த மூன்றாவது ரகத்தைச் சார்ந்தவர்.

பொற்கொல்லர் இனத்தைச் சேர்ந்த திரிலோசனதாசர் தொழிலில் திறமை மிக்கவர். மன்னரின் அவையில் பொற்கொல்லராக இருந்தார். விட்டலா.. பாண்டுரங்கா…என்று யாராவது சொன்னால் போதும் அவர்கள் பின்னால் இவரும் விட்டலா.. விட்டலா என்று ஓடுவார். மன்னர் தன் மகளது திருமணத்துக்காக பொன், நவரத்தின மணிகள் அலங்கரித்த மாலையை நான்கு நாட்களுக்குள் செய்து கொடுக்கும் படி கட்டளையிட்டு வேண்டிய பொன், நவரத்தின மணிகளை திருலோசனதாசரிடம் ஒப்படைத்தார். அதனால் என்ன அரசே நீங்கள் எதிர்பார்த்தது போல் உடனடியாக இதை செய்துவிடலாம் என்றார் திரிலோசனதாசர். வேலை சிந்தனையோடு வீட்டுக்கு வந்தவர் பின்னாலேயே  பாண்டுரங்கனின் லீலைகளைப் பாடியபடி பஜனை கோஷ்டியும் இவர் பின்னாடியே இவர் வீட்டுக்குள் வந்துவிட்டது.

விட்டலா.. விட்டலா என்று விடாமல் பாண்டுரங்கனைப் பாட, மனம் கசக்குமா என்ன? அவரும் குடும்பத்துடன் சேர்ந்து பஜனையில் ஈடுபட்டார். இரண்டு நாட்கள் கழிந்து பஜனை கோஷ்டிகள் அவரிடம் விடைபெற்று திரும்பினார்கள். மன்னர் சொன்ன வேலை நினைவு வந்ததும் வேலையில் மூழ்க ஆரம்பித்தார். திரிலோசனதாசர். மிகவும் நுணுக்கமான வேலை என்பதால் எஞ்சியிருந்த இரண்டு நாட்களில் அவரால் அந்த வேலையை முடிக்க முடியவில்லை. தேடிவந்த அரண்மனை காவலாளிகளிடம் இன்னும் இரண்டு நாட்களில் முடிப்பதாக சொல்லி அனுப்பினார். அவர்களும் இதற்கு மேல் காலம் கடத்த வேண்டாம் என்று எச்சரித்தப்படி சென்றனர்.

வேலையில் ஈடுபடும்போதெல்லாம் மனம் மீண்டும் மீண்டும் பாண்டுரங்கனைச் சுற்றி சுற்றி வரவே வேலையை நிறுத்திவிட்டு மன்னருக்கு பயந்து மனைவியிடமும் சொல்லாமல் காட்டை நோக்கி கிளம்பி விட்டார். அங்கு பாண்டுரங்கனை மனதில் நிறுத்தி தியானம் செய்ய தொடங்கினார். கணவரைக் காணாமல் மனைவி தவிக்க… இவர் பாண்டுரங்கனின் அவதாரமான கிருஷ்ண லீலைகளைப் பாடியபடி ஆனந்தமாக காலத்தைப் போக்கினார். மன்னர் மகளது திருமண நாள் வந்தது. பாண்டுரங்கனே திரிலோசனதாசராக வேடம் தரித்து வீட்டுக்கு வந்தார். வந்தவர் மன்னர் மகளுக்காக மாலை செய்ய தொடங்கினார். மிக நுணுக்கமான வேலைப்பாட்டுடன் சந்திர மாலையாக மினுமினுத்தது. இறைவனின் கைவண்ணத்தில் உருவானதாயிற்றே குறை சொல்ல இயலுமா.. மன்னர் முதல் மாளிகையில் இருந்தவர்கள் வரை அனைவரும் பாராட்டினார்கள். மன்னர் பாராட்டி பரிசுகளை தந்து அனுப்பினர். திரிலோசனதாசர் வடிவில் இருந்த பாண்டுரங்கன் வீட்டுக்கு வந்து பொன்னும் பொருளும் கொடுத்து இன்று  அதிகம் சமை. வீட்டுக்கு அடியார்கள் பலரும் வருவார்கள் என்று கூறினார்.

பதிவிரதையான திரிலோசனதாசரின் மனைவி அமுது சமைக்க அடியார்கள் பசியாறி வாழ்த்தி சென்றனர். இறைவனும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு உணவை பொட்டலமாக எடுத்துக் கொண்டு காட்டில் இருந்த திரிலோசனதாசரிடம் வேடம் பூண்டு வந்தார். ஐயா தங்களைப் பார்த்தால் பசியால் வாடுபவர் போல் இருக்கிறது. இந்த நாட்டின் மன்னரது மகள் திருமணத்துக்காக பொற்கொல்லார் செய்து தந்த மாலையால் மகிழந்த மன்னன், பொற்கொல்லனுக்கு பொன்னை அள்ளிக்கொடுத்தான். அவர்கள் வீட்டில் பசியாறி வழியில் சாப்பிடவும் கொண்டு வந்தேன். தற்போது அந்த உணவு உங்களுக்குத்தான் தேவை போல் இருக்கிறது என்று கொடுத்து சாப்பிட வைத்தார்.

திரிலோசனதாசருக்கு நிம்மதி உண்டாயிற்று. பரவாயில்லை நமது வேலையை வேறு யாரோ செய்திருக்கிறார்கள். இனி நாம் வீட்டுக்கு போகலாம் என்று இறைவனையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் அமரவைத்து உள்ளே நுழைந்தவர் கண்களில் வீடு முழுவதும் பரவியிருந்த பொருள்கள் கண்ணில் பட்டது. தனது மனைவியை அழைத்து ஏது இவ்வளவு பொருள்கள் என்று வினவினார். நீங்கள்தானே உங்கள் கைவண்ண மாலை நன்றாக இருப்பதாக மன்னர் கூறி பரிசளித்தார் என்று இவற்றையெல்லாம் வாங்கி வந்தீர்கள். அதோடு இன்று அடியார்களுக்கும் அமுது பரிமாறினீர்களே என்றார். நானா என்ற திரிலோசனதாசர்,மனக்கண்ணில் அமுது கொண்டு வந்த அடியார் முகமும் பாண்டுரங்கன் முகமும் மாறிமாறி வரலாயிற்று. சற்று பொறு என்று ஓட்டமும் நடையுமாக திண்ணைக்கு வந்து பார்த்தார். அவருடன் வந்த அடியார் சுவடு தெரியாமல் மறைந்திருந்தார்.

பாண்டுரங்கா..பக்தன் பித்துப்பிடித்து போனானே என்று பின்னாலே ஓடிவந்து காப்பாற்றினாயா? நான் உன்னை நினைத்து என் வேலையை மறந்துவிட்டேன். ஆனால் நீ என் துன்பம் கண்டு சகியாமல் ஆபத்பாந்தவனாய் என்னை மீட்டுவிட்டாயே என்று கதறி அழுதார். ஆம்.. துன்பங்களும் இன்பங்களும் எப்போதும் நம்மை சுற்றி, காற்றாய் இயங்குபவை தான். அதைக் கண்டு கவலைப்படாமல் கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால் போதும்.  விட்டலா…கைவிடாமல் காப்பாற்றுவான்.

Sharing is caring!