கடினமான சருமத்தை மிருதுவாக்கும் முலாம்பழம்…

அதிக விலை கொடுத்தால் தான் ஆரோக்யம் கிடைக்கும் என்று யார் சொன்னது? குறைந்த விலையிலும் நாங்கள் முழுமையான அதிக ஆரோக்யத்தைக் கொடுக்கிறோம் என்று சொல்லும் பழங்களின் பட்டியல் நீளவே செய்கிறது. இப்பழங்களை அதற்குரிய சீஸனில் தவறாமல் வாங்கி சாப்பிட வேண்டும். கொளுத்தும் கோடையில் நீர்ச்சத்துமிக்க பழங்கள் இயற்கை அளித்த கொடை. அதை பயன்படுத்திக் கொண்டால் ஆரோக்யத்துக்கு குறை விருக்காது.

பழங்கள் எப்போதுமே உடலுக்கு ஆரோக்யத்தைக் கொடுக்க கூடியவை என்பதால் தான் அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். முலாம் பழத்திலும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் மிகுந்திருக்கின்றன. முலாம் பழத்தில் கண்களுக்கு நன்மை தரும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி,, நார்ச்சத்து, நீர்ச்சத்து, தாதுக்கள், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள், அடினோசைன், கரோட்டினாய்டு வேதிப்பொருள் அடங்கியிருக்கின்றன.

கோடைக்காலங்களில் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் குறையும் போது இயல்பாகவே உடல் சோர்வு உண்டாகிறது. உடல் உஷ்ணமும் ஏற்படுகிறது. முலாம் பழங்களை நறுக்கி துண்டுகளாக்கி நாட்டு சர்க்கரை தூவி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை உடனடியாக பெற்றுவிடலாம் என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.

கோடைக்காலத்தில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்னைகளில் ஒன்று சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னை. நீர் சுளுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீர் குழாயில் தொற்று போன்றவை உண்டாக அதிகளவு உஷ்ணமும் போதிய நீர்ச்சத்து குறைபாடும் காரணமாக இருக்கலாம். இதனால் தான் இரத்தத்தில் உள்ள நீர்ச்சத்தும் குறைந்து இரத்த ஓட்டத்தின் வேகமும் குறைந்து உடலில் ஒருவித சோர்வை உண்டாக்குகிறது.

உடலில் நீர்ச்சத்து குறைய குறைய பல்வேறு உபாதைகளும் உண்டாகிறது. அவற்றில் மற்றொன்று மலச்சிக்கல். இப்போதெல்லாம் கோடைக்காலங்களில் மட்டுமல்ல அனைத்து காலங்களிலும் வயது தடையின்றி மலச்சிக்கல் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாறிவரும் உணவுப்பழக்கத்தோடு நீர்ச்சத்து குறைபாட்டால் உடலில் வெளியேற்றப்படும் மலக்கழிவுகள் இறுக்கமாகி மலச்சிக்கலை உண்டாக்கி விடுகிறது.

மலச்சிக்கலுக்குத் தீர்வு தரும் நார்ச்சத்துக்கள் முலாம்பழத்தில் உண்டு. தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களும் இச்சிக்கலிலிருந்து விடுபடலாம். சிறுநீரக உறுப்பில் தங்கும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும் இதயத்தில் கொழுப்புகளை சேர்க்காமல் தடுக்கிறது.

கர்ப்பிணிகள் இப்பழத்தைச் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் உறுப்புகள் பலப்படுகிறது. குறிப்பாக இதில் இருக்கும் கால்சியம் சத்து குழந்தையின் எலும்பை பலப்படுத்துகிறது. சித்தமருத்துவத்தில் முலாம் பழத்தின் விதைகளைக்கொண்டு வயிற்றில் இருக்கும் குடற்புழுக்களை வெளியேற்ற பயன்படுத்தும் மருந்து தயாரிக்கப்படுகிறது.

நீர்ச்சத்து மிக்க பழங்கள் எல்லாமே உடல் ஆரோக்யத்தோடு அழகையும் பாதுகாக்கும். முலாம்பழமும் அப்படித்தான். மிருதுவாக இல்லாமல் கடினமான சருமத்தையும் சுருக்கத்தையும் பெற்றவர்கள் முலாம்பழத்தைச் சாப்பிட்டால் சருமத்தில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை அதிகரித்து சருமத்தை மிருதுவாக்குகிறது. தோற்றத்தில் பொலிவை உண்டாக்குகிறது. அதிக கபம் உள்ளவர்கள் அளவோடு இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது நல்லது.

Sharing is caring!