கண், எலும்புகளுக்கு நல்லது… இதயநோய், புற்றுநோய்க்குத் தடைபோடும் கோழிமுட்டை!

வரலாறு எழுதப்படுவதற்கு முன்பிருந்தே மனிதன் முட்டையைப் பயன்படுத்திவந்திருக்கிறான். கோழிகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்த பிறகு, மற்ற பறவைகளின் முட்டைகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டான். கோழி முட்டைகளை விதவிதமாக சமைக்க ஆரம்பித்தான். அவித்த முட்டையிலிருந்து ஆம்லெட்டுக்கு வந்தான். ஹாஃப் பாயிலும், ஃபுல் பாயிலும் சாப்பிட்டு சலித்தபோது, பொடிமாஸ் செய்ய ஆரம்பித்தான்.

கோழி முட்டையை சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கும் பயன்களைப் பார்ப்போம்.

சத்துகளின் கலவை
முட்டை, சத்துகளின் கலவை. ஒரே ஒரு முட்டையில் நமது உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துகளும் உள்ளன. புரதம், வைட்டமின் ஏ, போலேட், வைட்டமின் பி 5, வைட்டமின் பி 12, வைட்டமின் பி 2, வைட்டமின் பி 6, பாஸ்பரஸ், செலினியம், வைட்டமின் டி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், சிங்க் ஆகியவை இதில் உள்ள முக்கியமான சத்துகள்.

கோலின் நிறைந்தது
கல்லீரல், மூளை, தசை போன்றவை நன்றாகச் செயல்பட கோலின் (Choline) சத்து தேவை. ஒரு முட்டையில் 100 மில்லிகிராமுக்கு மேல் கோலின் இருக்கிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் கோலின் உதவுகிறது.

நல்ல கொழுப்பை அதிகரிக்கும்
இதயநோய், பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றல் நல்ல கொழுப்புக்கு உண்டு. முட்டை, நல்ல கொழுப்பை அதிகரிப்பதற்கான சிறந்த வழி. தினமும் இரண்டு என ஆறு வாரங்களுக்கு இதை சாப்பிட்டுவந்தால், உடலில் நல்ல கொழுப்பின் அளவு பத்து சதவிகிதம் வரை அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

கண்ணைக் காக்கும்
இதன் மஞ்சள் கருவில் லூட்டின் (Lutein) , சியாக்ஸன்தின் (Zeaxanthin) போன்ற நிறமிகள் உள்ளன. இவை வயதாவதால் ஏற்படும் கண் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். இதைத் தவிர முட்டையில் வைட்டமின் ஏ இருக்கிறது. உலகளவில் கண் பிரச்னைகளுக்கான மிகப் பொதுவான காரணம் வைட்டமின் ஏ குறைபாடு என்பது குறிப்பிடத்தக்கது.

எடையைக் குறைக்கும்
இது எளிதில் பசியை மட்டுப்படுத்தும் தன்மை உடையது. தினமும் காலையில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளைச் சாப்பிட்டால், நமக்கு தேவையான சத்துகள் கிடைத்துவிடும்; பசியும் எடுக்காது. இதனை மட்டும் காலை உணவாகச் சாப்பிடுவது எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பின்பற்றவேண்டிய சிறந்த வழிமுறைகளில் ஒன்று.

எலும்புகளைப் பாதுகாக்கும்
இதில் வைட்டமின் டி உள்ளது. நமது உடல் கால்சியத்தை உட்கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி தேவை. பால் பொருட்களுடன் சேர்த்து முட்டையை எடுத்துக்கொள்ளும்போது பாலில் உள்ள கால்சியம் மிக வேகமாக உடலை அடைந்துவிடும். இதனால் எலும்பு பாதுகாப்பாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ்( Osteoporosis) உட்பட்ட எலும்பு தொடர்பான நோய்கள் வராது.

முடிக்கு நல்லது
இதைத் தினமும் சாப்பிடும் சிலர் தங்களுக்கு முடி முன்பைவிட வேகமாக வளர்வதை உணர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு சிங்க், சல்ஃபர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 12 போன்ற சத்துகள் குறைவாக இருந்திருக்கும். முட்டையைச் சாப்பிடுவதன் மூலம் இந்த சத்துகள் அவர்களைச் சென்றடைவதால் முடி நன்றாக வளரும்.

தோல் புற்றுநோயைத் தடுக்கும்
புற ஊதாக்கதிர்கள் உடலை நேரடியாகத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்புகளை இதிலுள்ள லூட்டின்(Lutein) , சியாக்ஸன்தின் (Zeaxanthin) போன்ற நிறமிகள் குறைக்கும். தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் முட்டை குறைக்கும்.

Sharing is caring!