கர்மவினையில் விடுபட அமாவாசை வழிபாடு!

சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதுர்க்காரகன் இவர்கள் இருவரும் சிவசக்தி சொரூபங்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் இணையும் நாள் அமாவாசை என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இருள் சூழ்ந்திருக்கும் இந்நாளில் குலதெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் நன்மையை உண்டாக்கும்.

அமாவாசை தினத்தில் பித்ருக்கள் தரிசனம் செய்வது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள். பித்ருக்கள் நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் பூமிக்கு வரமுடியாது என்பதால் அமாவாசை அன்று மட்டுமே நம் முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

தங்களது அடுத்த தலைமுறைகள் தங்களுக்குரிய வழிபாடுகளை செய்வதை மகிழ்ச்சியோடு கண்டு மனமாற ஆசிர்வதிக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் அனைத்து சக்திகளையும் பிரயோகப்படுத்தி உங்கள் முன்னேற்றத்துக்கு ஆற்றல் அளிக்கிறார்கள். எள் கலந்த தண்ணீரைத் தந்து பித்ருக்களை வழிபடாதவர்களுக்கு பித்ரு தோஷம் உருவாகிறது. அது அடுத்து வரும் சந்ததியினர் ஜாதகத்தில் பித்ரு தோஷமாக மாற வாய்ப்புள்ளது.

நாம் பித்ருக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ஒருவரல்ல என்பதால் ஒவ்வொரு வரையும் தனித்தனியாக வணங்க இயலாது. அதனால்தான் பித்ரு ஹோமங்கள் செய்து பஞ்சபூதங்களை முன்னிறுத்தி அவர்களை ஒருசேர வணங்கி  பித்ருக்களோடு வம்சாவளியினர் அனைவரது ஆசிர்வாதங்களையும் பெறுகிறோம். ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசைகள் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் வருடத்தில் வரும் அனைத்து அமாவாசைகளும் வழிபாடுக்குரியதே.

சாஸ்திரங்களில் அமாவாசை தினத்தன்று மூவுலகிலும் உள்ள மகரிஷிகள், தேவத்தூதர்கள், ஞானிகள் புண்ணிய நதிகளில் வந்து காசி, கயா, இராமேஸ்வரம் போன்ற  புண்ணிய தலங்களில் தர்ப்பண பூஜைகள் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் தர்ப்பணங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தி பூமியிலிருந்து பலகோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் பித்ருக்களை சென்றடைகிறது என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.

ஆனால் அமாவாசை நாட்களில் நல்ல காரியங்களைச் செய்யக்கூடாது என்பது சிலரது வாதம். அறிவியல் நீதியாக இந்நாளிலும் பெளர்ணமியிலும் இயற்கையானது ஒருவித ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். மனித மனமும் இயல்பிலிருந்து சற்று மாறி ஒரு வித படபடப்போடு இருக்கும். இந்த மனநிலையில் செய்யும் செயல்கள் யாவுமே வெற்றியைத் தராது.

மனம் ஒருமுககவனம் செலுத்தமுடியாத நேரத்தில் முக்கியபணிகளை செய்யாமல் இருப்பதே சிறந்தது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆனால் பித்ருக்களை வழிபட்டு அவர்களது ஆசியோடு செய்யும் எந்த செயலும் வெற்றியைக் கொடுப்பதாகவே அமையும் என்கிறது  இந்துமதக் கொள்கை.

அமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடுகளை செய்து உங்கள் கர்மவினைகள் பலவற்றிலிருந்தும் விடுபடுங்கள் உங்கள் முன்னோர்களின் ஆசியோடு…

Sharing is caring!