கர்மா என்றாலே தீமையைத் தான் குறிக்குமா?

வேதங்களில் நான்கு வகை கர்மாக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ப்ராரப்த கர்மா, சஞ்சிதா கர்மா, ஆகமி கர்மா, வர்த்தமான கர்மா என்பவையே ஆகும்.

முதலில் கர்மா என்றால் என்ன என்று பார்க்கலாம். செயல் அல்லது நிகழும் வினைதான் கர்மா என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பது அறிவியலுக்கு மட்டுமல்ல அனைத்துக்குமே பொருந்தும். கர்மா என்றாலே அவை தீமை புரிவதைக் குறிக்கிறதோ என்று நினைக்க வேண்டாம்.
நாம் செய்யும் செயல்கள் எதுவாயினும் பிறருக்கு நன்மை தருவதாக இருக்கலாம். அல்லது தீமையைக் கொடுப்பதாகவும் இருக்கலாம். அதைப் பொறுத்தே நாம் நன்மையையும், தீமையையும்  அனுபவிப்போம். அதாவது நன்மையால் புண்ணியமும் தீமையால் பாவமும் உண்டாகும். இதுதான் கர்மா என்றழைக்கப்படுகிறது.

நாம் செய்யும் புண்ணியங்கள் நம் பாவத்தை நீக்கிவிடாது. நாம் செய்யும் செயல்கள் ஒருவரை பாதித்து ஏராளமானோருக்கு நன்மை செய்வதாக இருந்தால் நாம் இரண்டுக்குமுண்டான பலன்களை அடைவோம். புண்ணியத்தை மட்டுமே செய்தேன் என்றோ பாவத்தையும் புண்ணியத்தையும் கலந்து செய்தேன் என்றோ ஒருவன் தப்பிக்க முடியாது. இரண்டும் கலந்தே அவன் வாழ்வில் பயணித்து மறுபிறவியில் அவனுக்கான கர்மாவாய் செயல்படும்.

இப்பிறவியை ஒருவன் மகிழ்ச்சியாக கடக்கவும், நிம்மதியான வாழ்க்கையை பெறவும், வறுமையால் சிக்குண்டும், பிணியால் அவதிப்பட்டும் என்று அனுபவிப்பது எல்லாமே அவன் முற்பிறவியில்  செய்த செயல்களால் விளைந்த கர்மாக்கள்தான். எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே இல்லையா என்று புலம்பும் மனிதன் முற்பிறவியின் கர்மாக்களை இப்பிறவியில் தீர்க்க வேண்டியதாகிறது. இதைக் கடக்கும் பக்குவத்தை வேண்டிதான் இறைவனிடம் நிற்க முடியுமே அன்றி கர்மாக்களை நீக்க அல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருவன் முக்திநிலையை அடைய தடைசெய்வது கர்மாக்கள் தான். செய்த வினைக்கான கர்மாவை ஒரு பிறவியில் தீர்க்கமுடியாத ஒருவன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து அனுபவிக்கிறான். அப்படி அனுபவிக்கும் போதே அப்பிறவியிலும் அவன் செய்யும் வினைகள் கர்மாக்களின் அளவை பலப்படுத்திவிடுகிறது. ப்ராரப்த கர்மா மட்டுமே அப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாவாக மாறுகிறது. ஆனால் செய்யும் செயல்களின் வினைகள் நல்வினையாக தீவினையாக சேரும் போது சஞ்சித வினையாக மாறி சஞ்சித கர்மாவாக பின் தொடர்கிறது. இதை முழுவதும் தீர்க்கும் வரை மனிதபிறப்பு தொடர்கிறது.

நான்குவிதமான கர்மாக்களைப் பற்றி தனியாக உபதேசித்தால் தான் ஓரளவேனும் தெரிந்துகொள்ள இயலும். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை உதவி செய்யாவிடினும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே.

Sharing is caring!