கர்வம் தான் அழிவுக்கு காரணம்

குருகுலம் ஒன்று மலையடிவாரத்தில் இருந்தது. மாணவர்கள் உயர்வு தாழ்வு  எதுவுமின்றி அங்கு இருந்தார்கள். அரச குலத்தில் இருந்து வந்தவர்களுக்கும், பெரும் வணிக குடும்பத்திலும் இருந்துவந்தவர்களுக்கும் அங்கிருந்த ஏழை பிள்ளைகளும் தாங்களுக்கு  இணையாக கல்வி கற்பதை  ஏற்க முடியவில்லை.

குருவிடம் சொல்லி அவரை கோபப்படுத்தவும் விரும்பவில்லை. சந்தர்ப்பம் வரும் போது அவர்களுக்கு குருகுலம் கல்வி பயில தகுதியில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இதனால் குருகுலத்தில் மாணாக் கர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து இருந்தார்கள். இவை அனைத்தும் கண்டும் காணாமல் இருந்தார் குரு. அவரும் மாணாக்கர்களுக்கு  பாடம் அளிக்க  வேண்டும் என்று தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த வருடம் மழை பொய்த்ததால் கிராமமே வறட்சிக்குள்ளானது. மக்கள் பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்கு சென்றார்கள். அடுத்த வேளை உண வுக்கு கூட  வழியில்லை. ஆனால் பிறந்த ஊரை விட்டு போகாமல் இருக்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று மக்கள் குருவை தேடி வந்தார்கள். ஒரு வாரம் வரை பொறுத்திருங்கள் முதலில் வயிற்றுப் பசி யைப் போக்குவோம் என்றார்.

அந்தக் கிராமத்தை ஒட்டி காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டைச் சுற்றிலும் முட்களும், புதர்களும் நிறைந்திருந்தது. அந்த இடத்தில் இனிமை யான சுனை ஒன்று இருந்தது. சுவை தரும் பழங்கள் நிறைந்த மரங்களும் இருந்தது. சிறிது நேரம் யோசித்த குரு, மாணவர்களிடம் இருக்கும் கர்வத்தை அடக்கும் தருணம் இது என்பதை உணர்ந்தார். சீடர்களை அழைத்தார்.

மக்கள் அனைவரும் வறுமையால் வாடுகிறார்கள். அவர்களது துயரை துடைக்க வேண்டும். முதலில் பக்கத்தில் இருக் கும் காட்டுக்கு சென்று பழங்களை பறித்து வாருங்கள் என்றார். அரச குடும்ப சீடர்கள் இதுதான் நம்மை அடையாளம் காட்டும் தருணம் என்று காட்டை நோக்கி நடந் தார்கள்.  முட்களையும், புதர்களையும், அடர்ந்த செடிகளையும் தாண்டி சென்று பைகள் நிறைய பழங்களைப் பறித்து வந்தார்கள். நேராக குரு விடம் வந்து பார்த்தீர்களா நீங்கள் சொன்னதும் நாங்கள் அதை செய்துவிட்டோம். உங்களின் சீடர்கள் நாங்கள்தான் என்றார்கள்.குரு எதுவும் பேசாமல் புன்னகைத்தார்.

இரண்டு நாள்கள் கழித்து  சீடர்கள்  அடங்கிய மற்றொரு குழு வந்தது. ஏன் இவ்வளவு தாமதமாயிற்று என்றார் குரு. குருவே, அடர்ந்த காடாக இருந்தது. அதனால் தான் சுற்றியிருந்த புதர்களையும், முட்களையும் அகற்றி சுத்தம் செய்தோம். காட்டின் நடுவில் இயற்கையாக   சுனை ஒன்று இருந்ததையும் கண்டோம்.  இனி காட்டுக்குள் மக்களும் எளிதாக சென்று வர முடியும் என்றார்கள்.

அந்தக் கூட்டத்திலிருந்த சீடன் ஒருவன், குருவே எங்களை மன்னித்துவிடுங்கள். எங்களால் பழங்களை எடுத்துவந்து மக்களின் பசியை ஆற்ற முடியவில்லை எனினும் தங்கள் சீடர்கள் எதிலும் சளைத்தவர்களல்ல என்பதை  மற்றுமொரு சிீடர்கள் அடங்கிய குழு  உணர்த்திவிட்டது.  அவர்கள் செய்தது பாராட்டுக்குரியது  என்றான்.  அதுவரை அவர்களை அலட்சியமாக பார்த் துக்கொண்டிருந்த  அரசகுலத்தைச் சேர்ந்த  சீடர்கள்  தலைகவிழ்ந்தார்கள்.

குரு இப்போது சீடர்களைப் பார்த்தார். யார் சிறந்த சீடர்கள் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. செய்யும் செயல்கள் சுயநலமாய் இல்லா மல் பொதுநலமாய் இருக்க வேண்டும். நான் தான் பெரியவன் என்று நினைக்கும் போதே  அங்கு சுயநலமும் கர்வமும் தலைதூக்கி விடுகிறது. அந்த கர்வம் தான் உங்களை தர்மவழியில் செயல்படவிடாமல் தடுக்கிறது. சிந்திக்கவிடாமல் செய்கிறது என்றார்.

சீடர்கள் புரிந்துகொண்டு ஒன்றாக செயல்பட்டார்கள். வாழ்க்கையும் அப்படித்தான். நானே பெரியவன் என்னும் மன நிலைக்கு தள்ளப்படும் போது உண்டாகும் கர்வம்தான் அழிவுக்கும் காரணமாகிறது என்பதை உணர்ந்து மனிதர்களாய் வாழ்வோம்.

Sharing is caring!