கழற்றறிவார் நாயனார் தொடர்ச்சி -2

பெருமாள் கோதையார் இறைவனின் அனுமதி பெற்று கொடுங்கோளூரை மனுநீதி தர்மத்தோடு ஆட்சி செய்து வந்தார் என்பதைப் பார்த்தோம். கோதையார் எம்பெருமானை தினசரி வழிபாடும் செய்யும் போது அவரை மகிழ்விக்கும் பொருட்டு எம்பெருமான் அவர் கால் சிலம்பின் ஒலியைக் கேட்டு கோதை யார் இன்புற்று இருக்குமாறு செய்தார்.

 எம்பெருமானின் மீது பக்தி கொண்டு வறுமையில் வாடியிருந்தவர் மதுரையைச் சேர்ந்த பாணபத்திரன். எப்போதும் இறைவனை நினைத்து பாடி அவரை அன்போடு வழிபட்டு வந்தார். அவரது வறுமையை போக்க நினைத்த எம்பெருமான் ஒரு நாள் இரவு அவரது கனவில் வந்து உன் போல் என் மீது அன்பு வைத்திருக்கும் சேர பெருமாளுக்கு ஒரு ஸ்ரீ முகம் எழுதி தருகிறேன். நீ போய் அவரை சென்று பார்த்தால் உன் வறுமை நீங்கும் என்றார். உறக்கத்திலிருந்து கண் விழித்தெழுந்த பாணபத்திரன் தன் அருகில் இருக்கும் திருவோலையைக் கண்களில் ஒற்றி கொடுங்கோளூரை அடைந்தார்.

சேரபெருமானை வணங்கி திருவோலையைக் கொடுத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த கோதையார் அடியேனை ஒரு பொருட்டாக எம்பெருமான் நினைத்ததே பெரிய பேறு என்றபடி பாணபத்திரனை வணங்கி அரண்மனையில் உள்ள பொற்களஞ்சியங்கள் எடுத்துவரும்படி கட்டளையிட்டார். அப்படியும் மனம் நிறைவடையாமல் என்னுடைய சேனை படைகளான யானை, குதிரை, பசுக்கள் முதலிய அனைத்தையும் என்னுடைய அரசாட்சியையும் கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

பாணபத்திரன் அரசனின் உயர்ந்த குணத்துக்கு தலை வணங்கி உள்ளம் பூரிக்க வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு தாங்கள் கொடைவள்ளல் அடியார்களைக் காக்கும் காவலன் அரசாட்சியை நீங்கள் தான் ஆளவேண்டும் என்பதே எம்பெருமானின் ஆணை என்றபடி விடைபெற்றார். பாணபத்திரனை யானை மீது அமரவைத்து செல்வங்களை  உடன் ஏற்றி வைத்து,  எல்லை தாண்டும் வரை அன்போடு வழி அனுப்பி வைத்தார்.

ஒருநாள் பெருமாள் கோதையார் இறைவனை வழிபட்ட  போது வழக்கமாக கேட்கும் இறைவனின் கால்சிலம்பொலி ஓசை கேட்க தாமதமாகியது. கோதையார் கண்களில் நீர் தளும்ப ஐயனே அடியேன் செய்த பிழையாது. உன் கால் சிலம்பொலி கேட்காமல் உயிர் வாழ இந்த அடியனால் முடியுமா? செங் கோல் ஏந்தி வாழ்வதை விட என் உடை கூர் வாளால் என் உயிரை போக்கி கொள்வதே சிறந்தது. அறிந்தோ அறியாமலோ நான் செய்த பிழைகளை ஏற்று என்னை மன்னித்தருள வேண்டும் என்று இறைவனின் பாதம் பணிந்து தன்னுடைய கூர்வாளால் மார்பில் செருக சென்றார். அப்போது வழக்கத்தை விட கால் சிலம்பொலியின் ஒலி கலீர் கலீர் என்று கேட்டது. செவியில் நாதமாக இனித்த அந்த ஒலியில் மயங்கிய கோதையார் எம்பெருமானே தாமதத்திற்கு காரணம் அறியேனே என்றார்.

தோழன் சுந்தரன் தில்லையம்பலத்துப் பொன்னம்பலத்தை வழிபட்டு பாடிய வண்ணத் தமிழால் அவனது அருட்பாக்களால் மயங்கிய நிலையில் இருந்தேன். அதனால் தாம் உம் வழிபாட்டு முடிவில் சிலம்பொலியை உரிய நேரத்தில் ஒலிக்க செய்ய முடியவில்லை என்றார் எம்பெருமான். உடனே கோதையார் எம்பெருமானை மயக்கிய தொண்டனை சந்திக்க வேண்டும். தில்லையம்பதி சென்று அவரை தரிசிக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் சிவத்தொண்டுக்கு இடையூறாக இருந்த அரசபதவியை வெறுத்தார். ஆட்சி பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்படைத்து நான்கு வகை படைகளும் புடை சூழ அரசபதவியைத் துறந்தார். தில்லைக்குச் சென்றார். சென்றவருக்கான உபசாரம் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

Sharing is caring!