காணாமல் போன பொருளை கண்டுபிடித்து தரும் சண்டிகேஸ்வரர்…

சிவாலயங்களில் கருவறை அமைந்திருக்கும் பகுதியில் இடப்பாகத்தில் அமைந்திருக்கும் சண்டிகேஸ்வரரைத் தரிசிக்காமல் பொதுவாக வரமாட்டோம். சிவகாம புராணங்களில் யுகத்துக்கு ஒரு சண்டிகேஸ்வரர் என  நான்கு சண்டிகேஸ்வரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருத யுகத்தில் நான்முக சண்டிகேஸ்வரர், திரேதா யுகத்தில் மூன்று முக சண்டிகேஸ்வரர், துவாபர யுகத்தில் இரண்டு முக சண்டிகேஸ்வரர், கலியுகத்தில் ஒருமுக சண்டிகேஸ்வரர் என்று குறிப்பிட்டுள்ளது. சிவனின் மெய்க்காவலராக நந்தி பகவான் இருக்கிறார். சிவனின் ஆலயக் காப்பாளர்களாக சண்டிகேஸ்வரர் இருக்கிறார். இவரிடம் தான் நாங்கள் கோயிலிலிருந்து சிவனுக்குரிய பொருள்களை எதுவும் எடுத்துச்செல்லவில்லை என்று சொல்லிவிட்டு வரவேண்டும்.

பொதுவாக எந்த கோவில்களுக்கு சென்றாலும் அங்கு ஆலயப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அங்கிருக்கும் பொருள்களை சொந்தமாக்க நினைக்க கூடாது. அதை எடுத்து வரவும் கூடாது. இது எல்லா ஆலயங்களுக்கும் பொருந்தும் விதி என்றாலும் சிவாலயங்களில் மட்டும் சற்று கடுமையாக இதைப் பின்பற்ற வேண்டும். சிவன் சொத்து குலநாசம் என்று வலியுறுத்தி சொல்வார்கள்.

பொதுவாக சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவ சிந்தனையுடன் தியானத்திலேயே இருப்பார். நாம் சிவபெருமானிடம் வேண்டுவதை கேட்டு சண்டிகேஸ்வரர்தான் பிரார்த்தனைக்குரியவர்களின் பிரார்த்தனைகளையும் அவர்களது பாவ  புண்ணியக்கணக்கையும் எழுதி சிவபெருமானிடம் சேர்த்து விடுவதாக ஐதிகம். அதனால் தான் வேண்டுதல்களை சேர்த்து விட்டு சண்டிகேஸ்வரரைத் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

சிலர்  சண்டிகேஸ்வரரைத் தரிசிக்கும் போது கைதட்டி பவ்வியமாகவோ பலமாகவோ தம் கன்னத்தில் போட்டோ வேண்டிக்கொள்வார்கள். ஆனால் இவையெல்லாம்  தியானத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரரை தொல்லை செய்வதாகவே இருக்கும். சிவாலயங்களில் நந்தியிடம் சென்று அதன் காதில் ஓதி வேண்டுதலை சொல்லும் நாம் சண்டிகேஸ்வரரிடம் சென்று சிவனை வழிபடவே வந்திருக்கிறோம். இங்கிருந்து நாங்கள் எதையும் எடுத்து செல்லவில்லை என்று சொல்லி கைகளை சுத்தமாக சத்தமின்றி துடைத்தபடி வெளியேற வேண்டும். இதுதான் இவரை வழிபடும் முறையும் கூட.

சண்டிகேஸ்வரர் யோக நிலையில் அமர்ந்திருக்கும் சிவபக்தர். இவரை வணங்கினால் பேச்சுத்திறன் உண்டாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். தொலைந்தோ அல்லது மறந்துவிட்டோ வைத்திருக்கும் பொருள் திரும்ப கிடைக்க சண்டிகேஸ்வரரை ஒருமனதுடன், இறை நம்பிக்கையுடன் வணங்கினால் மீண்டும் கிடைக்கும். பிரதமை மற்றும் நவமி திதிகளில் வில்வ மாலை சாற்றி இவரை வழிபடலாம். சிவாலய பலனை சிவபெருமானை மட்டும் வணங்கினால் பெற முடியாது. இவரையும் வழிபட்டால்தான் பலன் பெற முடியும்.

Sharing is caring!