காணாமல் போன மோதிரம்!

ராமசுந்தரத்தின் வாழ்க்கையில்  மறக்க முடியாத அனுபவம். ராமசுந்தரத்தின்   திருமண நாள் அன்று தனது மனைவியுடன் கொடைக்கானல் சென்றிருந்தார். அங்கு ஒரு விடுதியில் தங்கி ஆனந்தமாகப் பொழுதைக் கழித்தார் . மறு நாள் விடிந்தது . குளியலறை சென்று விட்டு திரும்பிய ராமசுந்தரம், உடைகளை மாற்றிவிட்டு மனைவியுடன் வெளியே செல்ல முயன்ற போது பார்த்தால் அவர் விரலில் இருந்த மோதிரத்தைக் காணவில்லை . திருமணப் பரிசாக அவரது மனைவி அளித்திருந்த அன்பளிப்பு . இரண்டு சவரன் எடை உடையது தான் என்றாலும், மனைவியின் ப்ரியமும் ,பாசமும் அதில் இருப்பதாக அவர் நினைத்ததால், மோதிரம் காணாமல் போனதால் அவரை மிகவும் கவலையடையச் செய்தது .

அறை முழுவதும் அவரும் அவரது மனைவியும் ஒரு இடம் விடாமல் தேடினார்கள் . காணவில்லை. குளியலறையில் நன்றாகத் தேடினார்கள் அங்கும் கிடைக்கவில்லை. எங்கே போயிற்று ? தனது அறைக்கு வந்த விடுதி ஊழியர்களை வரவழைத்துக் கேட்டார்கள். யாருமே எடுக்கவில்லை என்பது தெரிந்தது. அப்படியானால் மோதிரம் எங்கே தான் போயிற்று. குளியலறையில் விழுந்து, காணாமல் போய்விட்டிருக்கும் என்று தான் ராம்சுந்திரத்திற்குத் தோன்றியது. ‘சரி ,அதை பற்றிக் கவலைப்படாமல் இருப்பதே நல்லது ‘ என்று நினைத்தார்.

ஆனாலும் அவரால் வெளியே செல்ல முடியவில்லை. மனம் முழுவதும் கவலைச்சுமையால் வலித்தது .கட்டிலில் சாய்ந்தபடியே, சாய்பாபாவின் படத்தை எடுத்தார்.  அவரையே நினைத்தார் . சாதாரண ஒரு தங்க மோதிரத்திற்காக சாய்பாபாவிடம் பிரார்த்தனை செய்வதற்காக முதலில் அவரிடம் மன்னிப்புக் கோரினார். எனினும் மனைவியின் அன்பளிப்பு என்பதால் அதனை இழக்க தனக்கு மனம் வரவில்லை என்று சாய்பாபாவிடம் கூறினார். அவரது பிரார்த்தனை முடிந்த அடுத்த நொடிப்பொழுது அவரது அறையில் கதவு தட்டப்பட்டது.  அங்கே விடுதி ஊழியா் ஒருவர்.  கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அவர் அங்கு சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகிறார்.

“ஐயா,உங்கள் மோதிரம் காணாமல் போனதாக சொன்னீர்களாம் . நான் உள்ளே வந்து தேடிப்பார்க்கலாமா ?” என்று அனுமதி கோரினார்.
“அறைக்குள் நான் தேடிப்பார்க்காத இடமே இல்லை.  அப்படியிருந்தும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை.  நீங்கள் மட்டும் தேடி கண்டுபிடித்துக் கொடுக்க முடியுமா என்ன?” என்று நொந்துபோய் பேசினார்  ராமசுந்தரம் . “இப்படி எத்தனையோ பேருக்கு நான் தேடிக் கொடுத்ததுண்டு. என்னை நீங்கள்அனுமதித்தால் எடுத்துத் தருகிறேன் “என்றார் அந்த ஊழியர். ராமசுந்தரமும் அரைகுறை மனத்துடன் அவரை அனுமதித்தார்.
முதலில் கட்டிலில்  நன்றாகத் தேடினார் . தலையணைக்குள் ,மெத்தைக்குள் என்று முழுவதுமாகத் தேடினார். கட்டிலின் ஓரமாக சுவர் அருகே அந்த ஊழியர் தேடி யபோது ,மோதிரம் அங்கே ஜொலித்துக் கொண்டிருந்தது .எடுத்து ராமசுந்தரத்திடம் கொடுத்தார் .

அப்போது அவர் விடுதி ஊழியராக ராமசுந்தரத்திற்குத் தெரியவில்லை. சாய்பாபாவே வந்து எடுத்துக் கொடுத்ததாகத்தான் தோன்றியது.
இது போன்ற அற்புதங்கள் பலவற்றை ஒசைப்படாமல் நிகழ்த்திக் காட்டியவர், காட்டுகிறவர் சாய்பாபா அவர் செய்யும் அற்புதங்கள் அனைத்தும் நிகழ்த்தும் வேளையில் அற்பமாகவும் ,பைத்தியக்கரத்தனமாகவுமே பிறருக்குத் தோன்றும்.  அவர் பேச்சு அனைத்துமே சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கும். மகான் என்று கருதப்படும் ஒருவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்பது போலவே இருக்கும்.
அவர் மீது முழுமையான பக்தி கொண்டவர்கள் மட்டுமே, சாய்பாபா எத்தனைச் செய்தாலும் அதற்கு ப் பின்னால் ஒரு பெரும் விடை இருக்கும், ஒரு மனிதாபிமான செயல் இருக்கும் என்று கருதி  பொருமையாகக் காத்திருப்பார்கள். அப்படியே சில தினங்களிலேயே அதற்கான விடை தெரியவரும்.

Sharing is caring!