காதலர்களை சேர்த்து வைக்கும் கல்யாண ஆஞ்சநேயர்

பிரம்மச்சரிய கடவுளின் பெயர்களைச் சொல்லுங்கள் என்றால் அனுமனும், விநாயகரும் தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். சில ஆண்கள் அனுமனின் தீவிர பக்தனாக இருந்துவிட்டால் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

தைரியமும் வீரமும் கொடுப்பவர் அனுமன். பிரம்மச்சரியாக வாழ்பவர்களுக்கு விருப்பமான கடவுளும் அனுமன் தான். ஆனால் பிரம்மச்சாரி என்று போற்றும் அனுமன் திருமணக்கோலத்தில் காட்சித்தரும் திருத்தலம் சென்னை செங்கல்பட்டு சாலையில் தைலாவரத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர் திருத்தலம்.

கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் சூரியன் அனுமனுக்குக் கற்றுத் தந்தார். அனைத்தையும் திறமையாக கற்றுக்கொண்ட அனுமனுக்கு “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டம் பெறும் ஆசை இருந்தது. ஆனால் இந்தப் பட்டம் பெறுபவர்கள் குடும்ப வாழ்வை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது நியதியாக இருந்ததால் அனுமன் மணம் புரிய சம்மதித் தார். அனுமன் விரும்பிய பட்டத்தை அளிக்க விரும்பிய சூரிய பகவான் தன்னுடைய மகளான சுவர்ச்சலா தேவியை தன் சிஷ்யனான அனுமனுக்கு மண முடித்து வைத்தார் என்று சூரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆஞ்சநேயரின் திருமணக்கோலத்தைத் தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இத்தலத்தில் மூலவரான ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தனி சன்னிதியில் உற்சவராக தன்னுடைய தேவியும் சூரிய புத்திரியுமான சுவர்ச்சலா தேவியுடன் பத்மபீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர். சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.

வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பாக காதலித்தவர்களும் தங்களது துணையுடன் இத்தலத்துக்கு வந்து வேண்டுதல் வைக்கிறார்கள். ஆஞ்சநேயரின் சம்மதத்தைப் பெற்றால் அவரது அருளால் பெற்றோர்களின் சம்மதமும் மனமுவந்து கிடைக்கிறது என்கிறார்கள் இங்கு வரும் காதல் புரிந்து தம்பதியரான புதுமண  தம்பதியர்.

திருமணத்தடை இருப்பவர்களும் இத்தலத்துக்கு வந்து ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.

Sharing is caring!