காய்ச்சலை குணப்படுத்திய சாய்பாபா!

மசூதியில் சாய்பாபாவிற்கும் அவரின் பக்தர்களுக்கும் சமையல் செய்து வயிறாரச் சாப்பாடு போட்டு பணியைச் செய்து வந்தவர்  ராதா கிருஷ்ணமாயி என்ற பெண்மணி.  அவளுக்கு ஒரு நாள் மலேரியா காய்ச்சல் வந்தது. மசூதிக்கு வந்து சமையல் பணியைக் கவனிக்க முடியாமல் குளிர் ஜூரத்தால் தனது வீட்டிலேயே கிடந்தாள்.

சாய்பாபாவிற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை திடீரென்று ராதா கிருஷ்ணமாயி வீட்டை நோக்கிச் சென்றார்.  அவள் வீட்டின் வாசலில் நின்ற சாய்பாபா, ஏணி ஒன்றை எடுத்துவருமாறு தன் பக்தர்களுக்கு உத்தரவிட்டார்.  அவர்களும் எங்கோ போய் ஏணி ஒன்றை எடுத்து வந்தனர்.  சாய்பாபா எதற்குத் திடீரென்று ஏணி கேட்கிறார்? அவர்களுக்குள் கேள்வி மட்டுமே எழுந்தது.  பதில்? அது சாய்பாபாவிற்கு மட்டுமே தெரியும்!

ஏணியை அந்த வீட்டுச் சுவரில் சாய்த்தார் . அதன் மீது ஏறி, கூரையை அடைந்தார் .  பின்னர்,   கூரையின் மேலே நடந்தவாறு மறுபக்கம் வந்து அப்படியே கீழே இறங்கினார்.     என்ன செய்கிறார் சாய்பாபா?  ஏன் இப்படிச் செய்கிறார் ? இதற்கு என்ன அர்த்தம்?   அங்கிருந்த ஒருவருக்குமே இதற்கான அர்த்தம் புரியவில்லை. வியப்பின் விளிம்பில் நின்றவாறு சாய்பாபாவை விநோதமாகப் பார்த்தனர்.

ஆனால், சாய்பாபா இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ராதா கிருஷ்ணமாயியைப் பார்த்து “கவலைப்படாதே உனது காய்ச்சல் குணமாகிவிட்டது” என்று கூறினார்.  அப்படியே நோயும் குணமாகியது .   பின்னர் ஏணி சுமந்து வந்த பணியாளர்களுக்குக் கூலியாக இரண்டு ரூபாயை எடுத்து வழங்கினார்.  பக்கத்து வீட்டிலிருந்து ஏணியை எடுத்துக் கொண்டு வந்தவர்களுக்கு இவ்வளவு கூலியா என்று அனைவரும் வியப்பு தெரிவித்தனர்.

அதற்கு சாய்பாபா, “உழைப்பவன் திருப்தி அடைந்தால் தான், அவர்கள் செய்யும் தொழிலும் சுத்தமாக இருக்கும் அப்போது தான் அவர்களைப் பனிக்கு அமர்த்தியவர்களும் லாபம் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும்” என்று கூறினார்.   உழைப்பிற்கு சாய்பாபா இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது அங்கிருந்தோரை வியப்படையச் செய்தது.

Sharing is caring!