காரைக்கால் அம்மையார் தொடர்ச்சி -3

கயிலை  சென்ற புனிதவதி அம்மையாரை வரவேற்ற சிவபெருமான் அம்மையே, தாங்கள் வேண்டுவன யாது என்று கேட்டார்.  எனக்கு மீண்டும் பிறவாமை  வேண்டும். பிறவாமை  ஏற்பட்டாலும் உம்மை மறவாத நிலை வேண்டும். நீ ஆடும் போது உன் திருவடியின் கீழ் நான் நிற்க வேண் டும் என்ற வேண்டு்தலை முன் வைத்தார். அப்படியே ஆகட்டும் என்ற எம்பெருமான்  புனிதவதியை திருவாலங்காட்டுக்கு வரச்செய்து தன் னுடைய திருத்தாண்டவத்தைக் காட்டினார்.

இறைவன் நடனமாடும் போது புனிதவதியார் கீழே அமர்ந்து இசைத்திருப்பார். புனிதவதியார்  இறைவன் மீது 11 பாடல்கள்  கொண்ட  திருப்பதிகம் பாடினார். கைகளால் கயிலாயம்  நடந்துவந்த வரை சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததால்  இவர் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து காரைக்காலம்மையார் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

காரைக்காலம்மையார் இறைவன்  மீது பாடிய திருவாலங்காட்டு திருப்பதிகங்கள் தேவார மூத்த  திருப்பதிகங்களுக்கெல்லாம் முன்னோடி  என்று சொல்லலாம். பதிக முறையில் பாடியதால் இவை திருபதிகம் என்று அழைக்கப்பட்டது. முதன் முதலில் தோன்றிய மூத்த திருப்பதிகங்கள் இவை. திருவாலங்காட்டு மூத்த  திருப்பதிகம், மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி என இவர் இயற்றிய நான் கும் பதினொறாம் திருமுறையில்  இடம்பெற்றுள்ளது. இறைவனை இசைத்தமிழில் பாடியவர் இவரே என்பதோடு தமிழ்மொழிக்கு அந்தாதி என் னும் இலக்கண முறையை அறிவித்தவரும் இவரே. அம்மையார் எம்பெருமானிடம் வேண்டி பேய் வடிவம் பெற்ற போது பாடியது தான் அற்புத அந்தாதி.

சுந்தரமூர்த்தியார் திருத்தொண்ட தொகையுள்  காரைக்காலம்மையாரை பேயார் என்று  குறிப்பிட்டுள்ளார். திருஞான சம்பந்தர்  கயிலையில் கைகளால் நடந்த காரைக்காலம்மையார் வாழ்ந்த ஊரை தனது கால்களால் மிதிக்க கூடாது என்றுஅஞ்சியதாக பெரிய புராணம் கூறுகிறது.
சிவபெருமான் சிவனடியாராக வேடம் தரித்து அமுது உண்டது காரைக்காலம்மையாரின் இல்லத்தில் தான். பிச்சாண்டவர் கோலத்தில் புனிதவதியின் வீட்டுக்கு சென்று மாம்பழத்தை ருசித்து சாப்பிட்ட அடியார் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் தான்  காரைக்காலில் முக்கனிகளில் ஒன்றான மாங்கனிக்கு ஆனி மாதம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மாங்கனித் திருவிழாவின் போது சாமிக்கு பட்டு துணி சாத்தி  தயிர் சாதம் படைத்து மாங்கனி வைத்து வழிபடுவார்கள். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைப்பார்கள்.குழந்தைப்பேறு  வேண்டும் தம்பதியர் அந்த மாங்கனிகளை உண்டால் குழந்தைப்பாக்கியம் உண்டாகும் என்பது ஐதிகம். மாங்கனித் திருவிழாவைக் காணவரும் பக்தர்களுக்கு தயிர்சாதம், மோர் போன்றவற்றை அன்னதானம் கொடுப்பார்கள்.

சிவாலயங்களில் 63 நாயன்மார்கள் வரிசையில் அனைவரும் நின்றிருக்க காரைக்காலம்மையார் மட்டும் அமர்ந்த நிலையில் இருப்பதைப் பார்க்கலாம். காரைக்காலில் உள்ள சிவன் கோவிலில் இவருக்கென்று தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. சிவாலயங்களில் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று காரைக்காலம்மையாருக்கு குரு பூஜை கொண்டாடப்படுகிறது.

Sharing is caring!