காரைக்கால் அம்மையார்- தொடர்ச்சி 2

காரைக்காலம்மையார், கணவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் அச்சத்தோடு நின்றிருந்தார். பரமதத்தன் மீண்டும் கேட்கவே சிவனடியார் வந்ததையும் அவருக்கு அமுது படைக்கும் போது மாம்பழம் வைத்ததையும் கூறினார். சரி அப்படியே இருக்கட்டும். ஆனால் எனக்கு வைத்த மாங்கனியை எங்கிருந்து எடுத்தாய். உனக்கு எப்படி கிடைத்தது அதைச் சொல் என்றான்.

மீண்டும் தயங்கிய புனிதவதி நீங்கள் இன்னொரு கனியைக் கேட்டதும் எனக்கு அச்சம் அதிகமாகிவிட்டது. அதனால் உள்ளே சென்று எம்பெருமானிடம் மனம் உருகி வேண்டினேன். அவரது திருவருளால் என் கரங்களில் மாங்கனி வந்தது. அதையே உங்களுக்கு கொண்டு வந்தேன் என்றாள். பரமதத்தன் சிரித்தான் என்ன சொல்கிறாய்? உன் பக்தியில் குளிர்ந்த எம்பெருமான் உனக்கு கனிகளைக் கொடுத்தாரா? இதை எப்படி நான் ஏற்பது என்றான்.

நடந்த உண்மைகளை உங்களிடம் கூறிவிட்டேனே  உங்களை எப்படி நம்பவைப்பது என்று கேட்டாள். நான் நம்பவேண்டுமென்றால் மீண்டும் ஒரு கனியை எம்பெருமானிடம் வேண்டி எனக்கு பெற்றுத்தா என்றான் பரமதத்தன். செய்வதறியாது திகைத்த புனிதவதி மீண்டும் உள்ளே சென்று எம்பெருமானிடம் உன் பக்தை சோதனைக்குள்ளாகியிருக்கிறாள். என்னை இதிலிருந்து மீட்டு, விடுவிக்கும் சக்தி உங்களிடமே உள்ளது.  நான் சொல்வதை உண்மையென்று அவர் நம்புவதற்கு மீண்டும் ஒரு கனியை இட வேண்டும் என்று வேண்டினாள் புனிதவதி. எம்பெருமானும் பக்தையை சோதிக்க வேண்டாம் என்று நினைத்தார் போலும். மீண்டும் ஒரு கனி புனிதவதி கரங்களில் தவழ்ந்தது.

மகிழ்ந்த புனிதவதி கனியை எடுத்துச்சென்று கணவன் முன்பு வைத்து இதோ நான் சொல்வது உண்மை என்பதை இப்போதாவாது  புரிந்து கொள்ளுங்கள். தாங்கள் கேட்டபடி எம்பெருமான் அருளிய கனி என்றாள். இப்போது பரமதத்தனுக்கு ஆச்சரியமும் புனிதவதியைக் கண்டு அச்சமும் சேர்ந்து பிறந்தது. நீ மானிடப்பிறவியல்ல. தெய்வப் பெண். உன்னுடன் இணைந்து இல்லறம் நடத்த இயலாது. உன்னை போற்றி வணங்கவே வேண்டும் என்று புனிதவதியைப் பிரிந்து வாணிபம் செய்ய  பாண்டி நாடு சென்றான்.

பரமதத்தன்  வேறொரு பெண்ணை மணந்து அங்கேயே வாழ்ந்துவந்தான். அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு புனிதவதி என்ற பெயர் வைத்து மகிழ்ந்தார். இதற்கிடையில் புனிதவதியின் கணவர் பாண்டிநாட்டில் இருப்பதைக் கண்ட உறவினர்கள் அவரை அழைத்துக்கொண்டு பரமதத்தனிடம் வந்தார்கள். மீண்டும் இருவரும் இணைந்து  இல்லற வாழ்வை நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.

ஆனால்  பரமதத்தன் தனது  மனைவி குழந்தையோடு புனிதவதியின் கால்களில் விழுந்து வணங்கினார். இதை ஏற்றுக்கொள்ள  முடியாமல் தவித்த  புனிதவதி மீண்டும் எம்பெருமானை நாடினார். தன்னுடைய அழகை அழித்து பேய் உருவம் வேண்டும் என்று விரும்பி எம்பெருமானின் அருளால் அதையும் பெற்றார். பேய் உருவை அடைந்த புனிதவதி இறைவனைக் காண கயிலாயம் சென்றார். கயிலை நாதனின் திருப்பாதம் படியும் இடத்தில் தமது பாதம் படியலாமா அதனால் தலையைப் பாதமாக்கி கைகளை ஊன்றியபடி சென்றார். அவரைக் கண்ட சிவபெருமான் அம்மையே வருக. தாங்கள் வேண்டுவன என்ன? என்று கேட்டார்…

Sharing is caring!